Shadow

பிக் பாஸ் 3: நாள் 63 | ‘நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்’ – கமல்

bigg-boss-3-day-63

இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோவிற்கு எதற்கு கமல்?

கமலுக்கு இது தேவையில்லாத வேலை. அவரோட தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார் என ஃபீல் செய்பவர்கள், நேற்றைய அத்தியாயத்தை ஒரு தடவை பார்க்கவேண்டும். 100 நாள் பூட்டின வீட்டிற்குள் இருக்கப் போற கன்டெஸ்டன்ட்ஸ், பாதி கிணற்றைத் தாண்டி ஒரு வழியாக அவர்களே தன்னை ஒரு மாதிரியாக செட்டில் பண்ணி வைத்துள்ளனர். ஒரு நல்ல க்ரூப் ஃபார்ம் ஆகியிருக்கு, ஒரு பாச உறவு, ஒரு காதல், இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு இப்படி எல்லாமே இருக்கு. சரி இதை இப்படியே விட்டால் என்னாகும்? ஒவ்வொரு தடவையும் கூடிக் கூடிப் பேசி, ‘இந்த வாட்டி கேப்டன் பொறுப்பை நீ எடுத்துக்கோடா. இந்த டாஸ்க்ல வின்னரா உன் பேரைச் சொல்லிக்கலாம். அடுத்த டாஸ்க்ல நீ என் பேரைச் சொல்லிடு’ என வந்து நிற்கும். இதை உணர்ந்து கொண்ட பிக் பாஸ் டீம், ஒவ்வொரு கன்டஸ்டென்ட்டுக்கும் அவர்கள் எப்படி இருந்தார்கள், இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறார்கள், இன்னும் எங்கே, எப்படி போக வேண்டுமென ஒரு ஹின்ட் கொடுக்கவேண்டும். ஒரு லைஃப்லைன் மாதிரி சொல்லலாம். இருட்டான ஓர் இடத்தில் இருந்து தப்பிக்க, எல்லோரும் எதிர்த்திசையில் போய்க் கொண்டிருக்கும் போது, இந்தப் பக்கத்தில் இருந்து, லைட்டை அசைத்துக் காண்பித்து, ‘நீங்க போக வேண்டியது அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம்’ எனச் சொல்லவேண்டும். அவ்வளவு தான்.

அதை கமல் எப்படி தன் ஸ்டைலில் சொன்னார் என்பதுதான் மேட்டர். நேற்று அவர் பேசினதெல்லாம், அவர் போடுகின்ற ட்வீட் மாதிரி தான் இருந்தது. அந்த அறிவுரையைக் கேட்டவர்கள் ஆழ்ந்து கவனித்து, உள்வாங்கினால் தான் அவர் சொல்ல வந்ததின் பொருள் விளங்கும். அதை எத்தனை பேர் புரிந்து நடந்து கொள்ளப் போகிறார்கள் என வெயிட் செய்து பார்க்கவேண்டும். முதலில் அவர்களுக்குப் புரிந்ததா எனப் பார்க்கவேண்டும்.

ஆரம்பத்திலேயே கொஞ்சம் சீரியஸ் முகத்தோடு தான் ஆரம்பித்தார். எல்லோரையும் தனித்தனியாக கன்ஃபெஷன் அறைக்கு வரச்சொன்னார்.

சாண்டி

போட்டியில் வெல்வதற்குச் சகல தகுதிகளும் இருக்கின்ற, மக்களின் சப்போர்ட்டும் இருக்கின்ற ஒரு ஸ்ட்ராங்கான கன்டஸ்டென்ட். ஆனால் க்ரூப்பாகச் சேர்ந்து கொண்டு வழி மாறி போய்க் கொண்டிருக்கிறார். அதைச் சரியாகக் கோடிட்டுக் காட்டினார் கமல். ‘ஒருத்தர் மட்டும் தான் போய் ஜெயிக்க முடியும். க்ரூப் டான்சராக இருந்தால் சாண்டி மாஸ்டர்ங்கற அடையாளம் கிடைச்சிருக்குமா?’ எனக் கேட்டு அனுப்பினதில் சாண்டிக்குக் கண்டிப்பாக ஒரு தெளிவு வந்திருக்கும்.

கவின்

‘முதலில் பாசுட்டிவ் விஷயம் பேசுவோம்’ என கவினின் விவாதத் திறமையைப் பற்றிச் சரியாக எடுத்துச் சொன்னார். எல்லா பாயின்ட்ஸையும் தெளிவாக எடுத்து வைத்துப் பேசுவதில், கவின் கிங் தான். ஆனால் ஒரே பிரச்சினை, அந்த விவாதத்தை முடிக்கத் தெரியாது. ஒரே விஷயத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பது எரிச்சலாக இருக்கும்.

கவினோட தனி அடையாளம் என்ன? இதுதான் அவருக்குக் கேட்கப்பட்ட கேள்வி. ‘சிவப்பு கதவுக்குப் பக்கத்தில் நின்று பேசிட்டு இருப்பாரே! அவர் தான் கவினானு யாரும் கேக்காம பார்த்துக்கணும்’ எனச் சொன்னது அக்மார்க் கமல் குசும்பு. இதை விட நேரடியாக கவினோட கரன்ட் ஸ்டேட்டஸை யாராலும் புரிய வைக்க முடியாது.

அதே சமயம் கவினுக்குத் தனித்திறமை இல்லை என்றும் சொல்ல முடியாது. ஒருத்தர் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து பிசிறே இல்லாமல் செய்கிறார் என்றால், அவர் அந்த விஷயத்தில் மாஸ்டர் என்றே அர்த்தம். கவினைப் பொறுத்தவரைக்கும் பெண்களைப் பேசிக் கவிழ்ப்பதில் மாஸ்டர். தொடர்ந்து அதைச் செய்து கொண்டே இருந்தால் மட்டும் தான் இவ்வளவு பிரிசஷனாகச் செய்ய முடியும். துரதிர்ஷ்டவசமாக இந்தத் திறமை இந்தப் போட்டிக்கு உதவாது.

லாஸ்

‘எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருந்தா, நான் இதை விட நல்லா விளையாடிருப்பேன்னு வெளில இருந்து உங்களைப் பார்க்கறவங்க சொல்லக்கூடாது’என்பது தான் லாஸுக்கான செய்தி. தனக்குக் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பைக் கண்ணுக்கு முன்னாடி தவற விட்டுக் கொண்டிருக்கிறார் லாஸ். ‘நீங்க சரியா விளையாடலை’ என நேரடியாகச் சொல்ல வேண்டியதைச் சுற்றி வளைத்துச் சொன்னதை லாஸ் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம். அன்பு, பாசம், நட்பு, காதல் இதெல்லாம் பார்க்க வேண்டிய இடம் இது இல்லை.

‘கவினை நம்பலாமா வேண்டாமா?’ என்கிற கேள்வியைச் சுற்றி வளைத்து கமலிடமே கேட்கின்ற அளவுக்கு, லாஸ் திறமையான பெண் தான். ஆனால் கமலிடம் அந்தப் பருப்பு வேகுமா என்ன? ‘பொதுவா சொல்லுங்க’ எனக் கேட்டதுக்கு, ‘நானும் பொதுவா தான் சொல்றேன்’ என கவுன்ட்டர் கொடுத்து, ‘புரியுதுங்களா?’ எனக் கேட்டு, விளக்கமும் சொல்லி, ‘நான் பொதுவா தான் சொல்றேன்’ என முடித்தது அக்மார்க் கமல் டீவிட்த்தனம்.

சேரன்

கமல் பேசுவதை நாம் எப்படிக் கவனிக்க வேண்டுமென சேரனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும். சேரனைத் தவிர மற்றவர்களிடம் ஓர் அலட்சிய உடல்மொழி இருந்தது. ஆனால் கமல் தன்னிடம் பேசும் பொழுதெல்லாம், உற்றுக் கவனித்து, அவர் சொல்வதை அதிகபட்சமாக உள்வாங்கிக் கொள்வது சேரன் மட்டும் தான். காரணம் அவர் கூட வேலை பார்த்த பழக்கமாகவும் இருக்கலாம். ‘இந்த விளையாட்டைப் புரிஞ்சுறதுக்கு கொஞ்ச நாள் ஆச்சு. இப்ப நீங்க புரிஞ்சுகிட்டீங்க. இனிமே தெரிஞ்சுக்கறதுக்கு ஒன்னும் இல்லை’ என நேரடியாவே மெசேஜ் சொல்லிட்டார்.

ஷெரின்

‘நியாயமா நேர்மையா விளையாடறிங்க வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தக் குரலை ஞாபகம் வச்சுக்கோங்க’ என கைதட்டல் வாங்கிக் கொடுத்தார். இது ஒரு பெரிய பூஸ்ட் ஷெரினுக்கு.

வனிதா

‘ஆட்டத்துல சுவாரஸ்யத்தை கூட்டறது தான் உங்க வேலையா? அதுக்கு தான் உங்களை அனுப்பினாங்களா?’ என நேரடியாகவே சொல்லியும், அதை முழுதாக உள்வாங்கிக் கொள்ளாமல், தன் பாட்டுக்கு விளக்கம் கொடுத்த வனிதாவிடம் வாழ்த்துகள் தவிர வேற என்ன சொல்றது?

வனிதா, காயத்ரி, கஸ்தூரி மாதிரியான கன்டஸ்டென்ட் தப்பு செய்தால் கேட்பது இல்லையெனக் கமல் மேல குற்றச்சாட்டு வைக்கப்படும். நேற்று வனிதா பேசினதையும், கஸ்தூரி பேசினதையும் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கே தெரியும். இந்தக் கேரக்டர்ஸிடம் கடவுளே பேசினாலும் வேலைக்காகாது.

வனிதாவை அனுப்பினதுக்கு அப்புறம் ஏதோ யோசனையாக இருந்தவர், “தனக்கு ஒரு பிரச்சினை வந்தா வக்கீலாயிடறாங்க. அதுவே அடுத்தவங்க பிரச்சினைன்னு வரும் போது ஜட்ஜ் ஆகிடறாங்கன்னு’ என டக்கென்று சொன்ன போது, ‘வாவ்’ என்றிருந்தது.

முகின்

‘அன்பு காட்டு, அடிமையாகிவிடாதே’ என தமிழில் ஒரு புதுமொழி இருக்கு. முகினைப் பொறுத்தவரைக்கும் யாராவது அன்பு காட்டினாப் அடிமையாகி விடுகிறார். இதைச் சுட்டிக் காட்டின கமல், ‘ஒவ்வொரு தடவை உத்வேகமா செயல்படறதுக்கும் எமோஷனல் சப்போர்ட் எதிர்பார்க்காதீங்க’ என சொல்லி அடித்தது சிறப்பு. ‘கூட்டத்தில் தொலைந்து விடாதீர்கள்’ என்றதும், ‘தர்ஷன் ஜெயிக்க ஆசைப்பட்ட மாதிரி, நானும் ஜெயிக்க போராடுவேன்’ என முகின் சொன்ன போது, ‘இந்த கிளாரிட்டி இருக்கிற முகினை எங்களால வீட்டுக்குள்ள பார்க்க முடிலயே! அவரை காட்டுங்க’ என அனுப்பி வைத்தார்.

தர்ஷன்

‘வனிதா தவறு செய்த போது தட்டி கேட்ட தர்ஷன், தன் நண்பர்கள் தவறைக் கண்டும் காணாமலும் போவது ஏன்?’ என்ற நேரடியான கேள்வியே தர்ஷனுக்குப் போதும் என நினைக்கிறேன்.

முயல், ஆமை கதையை மேற்கோள் காட்டி, ‘ரெஸ்ட்டில் இருக்கிறதுக்கு எல்லாம் டைம் இல்லை’ தடுமாறாம விளையாடுங்க’எனச் சொல்லி அனுப்பினார்.

கஸ்தூரி

ப்பா..

சரி இந்த விஷயங்களை எல்லாம் கமல் எதுக்கு ஹவுஸ்மேட்ஸிடம் சொல்லவேண்டும்? பேசவேண்டும்? இப்போதைக்கு இந்த சீசன் ஒரே இடத்தில் ஸ்ட்ரக்காகி நின்று கொண்டுள்ளது. அதை அடுத்த ஸ்டேஜுக்குக் கொண்டு போகவேண்டும்.

இன்னொரு கோணத்தில் யோசித்தால், ஹவுஸ்மேட்ஸ் எல்லோருமே ஒரு கம்ஃபர்ட் சோனில் இருக்கிறார்கள். அதில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும்.

ஒரு குற்றச்சாட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒற்றுமையாக ஜாலியாக இருக்கிறவர்களைப் பிரித்து, அவர்களுக்குள் சண்டை மூட்டி விடப் பார்க்கிறார்.

காலர் ஆஃப் தி வீக், தர்ஷன் ம்ற்றும் கவினுக்கு. இதற்கு முன்னாடி இருந்த மாதிரி, வழவழா கொழகொழா கேள்வியாக இல்லாமல் நேரடியாகப் போட்டு தாக்கினார்கள். ‘உங்க நண்பர்கள் தப்பு செய்யும் போது கேள்வி கேக்கறதில்லையே! ஏன்?’ எனக் கேட்ட போது, ‘இதை எங்கியோ கேட்ட மாதிரி இருக்கா?’ என கமலும் கவுன்ட்டர் கொடுத்தார்.

கவின், தர்ஷன் ஆகிய இருவருக்கும் வந்த கேள்வியில் மையப்புள்ளி சாண்டி தான். இதை சாண்டியும் கவனித்திருப்பார்.

அடுத்ததாக ஸ்கூல் டாஸ்கில் தங்களது ஆசிரியர்கள் பற்றிப் பேசினார்கள் இல்லையா? புள்ளி வைத்தால் கோலம் போட்டு சாலையே போடும் விஜய் டிவிக்கு இப்படி ஒரு கன்டென்ட் கிடைத்தால் விடுவார்களா என்ன? யார், யாரைப் பற்றிச் சொன்னார்களோ, அவர்கள் எல்லோரையும் பிடித்து மெசேஜ் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.

கொஞ்சம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சேரனின் குரு கே.எஸ்.ரவிக்குமார் பேசினது கூடுதல் ஆச்சரியம். சேரனுக்கு மட்டும் இல்லாமல், மொத்த ஹவுஸ்மேட்ஸையும் ஒரு வார்த்தையில் டிஸ்கிரைப் செய்தது அட்டகாசம்.

அடுத்து எவிக்ஷன். எதிர்பார்த்தது போலவே கஸ்தூரி தான். கடகடவென வெளியே வந்தவர், படபடவெனப் பேசிவிட்டுக் கிளம்பினதுக்கு அப்புறம் தான் ஒரு பெரிய ஆறுதல் கிடைத்தது போலிருந்தது.

கமல் பேசும் போது கூட முடிக்க விடாமல், குறுக்கே புகுந்து பேசுபவரிடம், யார், என்ன பேசியிருக்க முடியும்? சோஷியல் மீடியாவில் அவர் கருத்தை ஒரு க்ரூப் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தது; இன்னொரு க்ரூப் கடுமையாக எதிர்த்து விமர்சித்தனர். ஒரு வேளை கஸ்தூரி தன்னை ஆதரித்தவர்கள் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ‘நாம பேசறது எல்லாமே சரி’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் போல.

ஒரு ஃபிலிம் பர்சனாலிட்டியாக இருக்கிறவங்களுக்கு, தான் எந்க்த கோணத்தில் அழகாக இருப்போம், தன்னிடம் மக்கள் என்ன ரசிக்கறாங்க என்று ஒரு சென்ஸ் இருக்கும். அதை தான் அவர்கள் வளர்த்துக் கொள்வார்கள். அதைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டும் இருப்பார்கள். ஆனால் அப்படி ஒரு சென்ஸே இல்லாத, கான்ஷியஸே இல்லாத ஒரு முன்னாள் நடிகை என்றால் அது கஸ்தூரி தான். நல்லவேளையாக, இனிமேல் இப்படி ஓர் இக்கட்டு பிக் பாஸில் இல்லை.

இந்த வாரம் எவிக்சன் கிடையாது எனச் சொல்லிவிட்டு போயிருக்கிறார் கமல்.

மகாதேவன் CM