உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ”ஒரே தருணத்தில் ‘தங்கலான்’, ‘கங்குவா’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களைத் தயாரிப்பதற்குக் காரணம் எனக்கு பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ், சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம். இதனைக் கடந்து வருவதற்கு மிகக் கடினமாக இருந்தது. இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்த் பண்டாரி. அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவருடன் அபினேஷ் இளங்கோவன், தங்கராஜ், ஜி. வி. பிரகாஷ், ஏ. எல். விஜய் ஆகியோரும் உதவினர்.
ஜி.வி. பிரகாஷுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரிடம் ஒரு பணியைக் கொடுத்து விட்டால், தன் சொந்த பணியாக நினைத்து, தயாரிப்பாளரின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவது அவருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். படத்திற்கு அற்புதமான பாடல்கள் வழங்கி இருக்கிறார்.
முதல் முறையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்திருக்கிறது. இதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் தான் காரணம். இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இருவரும் எதிரும் புதிருமான இரு வேறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை நான் பார்த்தபோது எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. இந்தப் படத்துடன் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆகஸ்ட் 15 எங்களுக்கு மறக்க முடியாத நாள். ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன் ‘அட்டக்கத்தி’ எனும் திரைப்படம் இந்த நாளில் தான் வெளியானது.
பா. ரஞ்சித் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ஏராளமானவர்களுக்கு அடையாளத்தை உருவாக்கித் தருகிறார். இசைக் கலைஞர்களுக்கும் அவர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அவருடைய சமுதாய சிந்தனையும், சினிமா மீது இருக்கும் அவருடைய காதலும், இன்னும் மிக வீரியமான படைப்பினை அவர் வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
விக்ரம், அவருடைய பயணமானது மிகவும் கடினமானது. ஆனால் எந்த இடத்திலும் அவர் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டதில்லை. சினிமா ஒரு கடினமான விடயம் என்று எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த வேலையைச் செய்வதற்கு வேற ஆள் கிடையாது’ என்று. அது விக்ரமுக்கு பொருத்தமானது. உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் படத்தில் விக்ரம் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை. இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்கு அவர் இன்னும் கூடுதலான உயரத்தைத் தொடுவார். இதைவிட சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். அவருடைய நடிப்பில் உலக சினிமாவை ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன்”‘ என்றார்.
இயக்குநர் பா. ரஞ்சித், “மகிழ்ச்சியான தருணம் இது. ‘அட்டகத்தி’ படத்தில் ஞானவேல் ராஜாவுடன் தொடங்கியது இந்தப் பயணம். எனக்கு ஆதரவு கொடுத்து இந்தப் படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பளித்து, என் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஞானவேல் ராஜா. அவரை மறக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கியது தான் ‘தங்கலான்’ என நான் நினைக்கிறேன்.
சர்பட்டா பரம்பரை படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தேன். அப்போது என்னிடத்தில், ‘அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்.
அவருடன் இணைந்து நின்றதற்காக அவர் செய்த விஷயம் சாதாரணமானதல்ல. தங்கலான் என்ற ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற போது அதன் பட்ஜெட் மீது பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் நிறைவடையும் வரை எந்த ஒரு சிறிய தடையைக் கூட வரவிடாமல் படத்தை நிறைவு செய்தார். நான் நினைத்த ஒரு படத்தை, எந்தவித சமரசமும் இல்லாமல் எடுப்பதற்குப் பெரிய ஆதரவை அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நன்றியை ஒரு வெற்றியாக வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஒரு தயாரிப்பாளராக அவர் என் மீது வைத்த நம்பிக்கையை, ஒரு சகோதரராக அவரின் மீது வைத்த நம்பிக்கையை ஒரு வெற்றியாக வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தத் திரைப்படம் நீங்கள் நினைப்பது போல் பிரம்மாண்டமான வெற்றியை வழங்கும் என நம்புகிறேன். அத்தகைய வெற்றியை இந்தப் படைப்பு கொடுக்கும்” என்றார்.