ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடர் படங்களின் மொத்த வசூல் 500 கோடி அமெரிக்க டாலர்கள். அதிக வசூல் செய்த தொடர் படங்களின் வரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ளது. 2015 இல், பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்துக்குத் தமிழகத் திரையரங்களில், அவரது அறிமுக காட்சிக்குக் கிடைத்த ஆரவார ட்ரிப்யூட்டே இத்தொடரின் புகழுக்குச் சான்று.
வயது வரம்பின்றி எல்லா வயதினரும் பாரபட்சமின்றிக் கண்டு ரசிக்கத்தக்க ஆக்ஷன் காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம். சட்ட விரோதமான முறையில் பைக் மற்றும் கார் சேஸிங் நடத்தி அதை ஒரு சூதாட்டமாக மாற்றிவிடும் கும்பல் பற்றிய படமாகத் தொடங்கி, அடுத்தடுத்த தொடர்களில், சேஸிங் காட்சிகள் தவிர அதிரடி ஆக்ஷன் சம்பவங்களை ஒருங்கிணைத்து, உலவு பார்த்து பயங்கர சதிகளை முறியடிக்கும் பலம் மிக்க சூப்பர் ஹீரோக்கள் தொடராக (Franchise) ஆக ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் உருமாறிவிட்டன.
ஆனால் இம்முறை வ்ரெஸ்ட்லிங் புகழ் ராக் எனும் ட்வெயின் ஜான்சனும், ஜேஸன் ஸ்டாத்தமும் மட்டுமே “ஹாப்ஸ் அண்ட் ஷா” படத்தில் இணைந்து, உலகை அழிக்க வில்லன் கண்டுபிடிக்கும் வைரஸை அழிக்க ஜோடி சேருகின்றனர். முந்தைய இரு பாகத்தில், ஜேஸனும் ராக்கும், ‘நீ பெரியவனா? நான் பெரியவனா? யார் பலசாலி?’ என எலியும் பூனையுமாகச் சண்டையிட்ட வண்ணம் இருப்பார்கள். அவர்கள் இணைந்து பணிபுரிகிறார்கள் என்பதே சுவாரசியத்திற்கு வித்திடுகிறது. ப்ரிக்ஸ்டன் லோர் என்கிற கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா வில்லனாக நடிக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், அணு உலை விபத்தில் உருக்குலைந்த செர்னோபில் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
நாலைந்து பேர் கூட்டாக செயல்படும் வழிமுறையிலிருந்து சற்று விலகி, இம்முறை இருவர் மற்றும் பங்கேற்கும் விதத்தில் Fast & Furious: Hobbs & Shah வின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது।
யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று வெளியாகிறது.