ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்.
அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் பாகத்தில், ஜான் விக்கின் தலைக்கு விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இப்படத்தில், அவரது உயிருக்கான விலைமதிப்பு 200 மடங்காகக் கூடுகிறது. அந்தப் பணத்திற்கு ஆசைப்பட்டு, உலகின் மூலை முடுக்கிலுள்ள வெகுமதி வேட்டையர்கள் பெரும்பாலானோர், ஜான் விக்கைக் கொல்ல சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள். ஜான் விக் எப்படி இந்தச் சிக்கலில் இருந்து உயிர் பிழைக்கிறார் என்பதே படத்தின் கதை.
முதல் மூன்று பாகங்களில், ஜான் விக்கின் அதகளமான ஆக் ஷனை மையப்படுத்தியே நகரும். ஆனால் இப்படத்தில், ஹாங் காங் டோனி யென், ஜப்பானிய நடிகர் ஹிரோயுகி சனடா, கனடா நாட்டு நடிகர் ஷாமியர் ஆண்டர்ஸன், பிரிட்டிஷ் நடிகர் ஸ்காட் ஆட்கின்ஸ் போன்ற நடிகர்கள் ஜான் விக்கின் பிராண்ட் வேல்யூவை அதிகப்படுத்தும் விதமாகப் படத்தில் பங்கு கொண்டுள்ளார்கள். இந்த நடிகர்கள் படத்தின் இனக்குழு தனித்திறத்தை (Ethnic Quality) மேம்படுத்தியுள்ளனர். கதைப்படியும், ஜான் விக் தனது ரஷ்யப் பின்புலத்தைப் பயன்படுத்தியே வில்லனை ஒத்தைக்கு ஒத்தைப் போட்டிக்கு அழைக்கின்றார்.
இயக்குநர் சாட் ஸ்டஹெல்ஸ்கி (Chad Stahelski), ஜான் விக் சீரிஸ் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அடிப்படையில் அவர் ஒரு ஸ்டன்ட் மேன். கியானு ரீவ்ஸின் ‘தி மேட்ரிக்ஸ்’ தொடர் படங்கள், 300, வேன் ஹெல்சிங், அயர்ன் மேன் 2, தி மெக்கானிக், தி வுல்வெரின், 47 ரோனின், ஹோம்ஃப்ரென்ட், டெட்பூல் 2 முதலிய படங்களில் ஸ்டன்ட் மேனாகவும், ஸ்டன்ட் கோ-ஆர்டினேட்டராகவும் பணிபுரிந்துள்ளார் ஸ்டஹெல்ஸ்கி. ஜான் விக் தொடர் படங்களின் சிறப்பம்சமே ஸ்டன்ட்டில் கோலேச்சிய ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுத்ததுதான்.
பாரிஸிலுள்ள பேராலயமான சேக்ரட் ஹார்ட் பசிலிக்காவின் 222 படிகளில் நடக்கும் க்ளைமேக்ஸிற்கு முந்தைய சண்டைக் காட்சியும், அதற்கு முன் வரும் ட்ரையம்ஃப் வளைவில் நடக்கும் சண்டைக் காட்சியும் அதகளமாக உள்ளன. கெய்னாக நடித்துள்ள டோனி யென் கண் தெரியாத தற்காப்புக்கலை நிபுணராக வருகிறார். ஜான் விக் படங்களில், கியானு ரீவ்ஸிற்கு நிகராக ஸ்கோர் செய்கிறார். தன்னைக் கொல்ல புற்றீசல் போல் வந்தவண்ணம் இருக்கும் பலரைக் கொன்றுவிட்டு, ஒத்தைக்கு ஒத்தை சவால் நடக்கும் இடத்திற்குச் செல்லவிருக்கும் சோர்வான ஜான் விக்கைப் படிக்கட்டில் தள்ளி விடுகிறார் சிடி (Chidi). படிக்கட்டின் உச்சியில் இருந்து உருண்டு புரண்டு விழும் ஜான் விக்கிற்கு, கண் தெரியாத தற்காப்புக்கலை நிபுணர் கெய்னாக நடித்துள்ள டோனி யென் உதவி செய்கிறார். அந்த ஒத்தைக்கு ஒத்தை சவாலே, ஜான்விக்கிற்கும் கெய்னிற்கும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் விக் படங்களில், கியானு ரீவ்ஸிற்கு நிகராக ஸ்கோர் செய்துள்ளார் டோனி யென்.
யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற ஜான்விக் (2014) படத்தின் ரெஃபெரென்ஸ் இப்படத்தில் உள்ளது. டோனி யென் பென்சிலை எடுத்து தன் கோட்க்குள் எடுத்து வைக்கும் பொழுது, திரையரங்கில் எழும் ஆரவாரம், இப்படத்தின் பிராண்ட் மதிப்பிற்குச் சாட்சி. ஷாமியர் ஆண்டர்ஸனின் நாய் செமயாக நடித்துள்ளது. ஜான்விக்கை நோக்கித் துப்பாக்கி நீளும்போது, அதன் சோகமான பாவனையாலும், சிடி விழுந்து கிடக்கும்போது அது செய்யும் சேட்டையாலும் பார்வையாளர்களைக் கவர்ந்துவிடுகிறது.
ஜான் விக் படங்களிலே இதுவே நீளமானது. மீண்டும் ஜான் விக் படங்கள் வருமா என்பது ஐயமே என ஒரு மாதிரி உறுதியற்ற தொனியிலேயே சொல்லி வருகிறார் இயக்குநர். ஆகையால், இப்படத்தை ஜான் விக்கிற்கான ட்ரிப்யூட் போல் அழகாக நிறைவு செய்துள்ளார் ஸ்டஹெல்ஸ்கி. மேலும், ஜான் விக் பாத்திரத்தை மையப்படுத்தி பேலரினா எனும் தனிப் படத்தை ஸ்டஹெல்ஸ்கி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.