‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும்.
இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை மீட்பதற்காகத் தேவைப்படும் ஒரு மந்திரப்பதக்கத்தைத் திருட முற்படுகிறான் எட்கின் டார்விஸ். தோழி ஹோல்கா கில்கோர், இளம் மந்திரவாதி சைமன் ஒளமர், ஃபோர்ஜ் எனும் ஏமாற்றுக்காரக் கலைஞர், சிவப்புச் சூனியக்காரி சோஃபினா ஆகியோருடன் குழுவாகச் சென்று, மந்திரப்பதக்கத்தைத் திருடிவிட்டாலும், எட்கின் டார்விஸும், ஹோல்கா கில்கோரும் மட்டும் மாட்டிக் கொள்கின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து தப்பித்து, நெவர்வின்டர் எனும் ராஜ்ஜியத்தின் ஆளுநராக இருக்கும் ஃபோர்ஜைச் சந்திக்கின்றனர்.
கிரா மீது அவளது தந்தைக்குப் பாசமில்லையென நம்பவைத்து துரோகமிழைக்கின்றான் ஃபோர்ஜ். ஃபோர்ஜின் கோட்டையில் இருந்து தப்பித்து, எட்கினும் ஹோல்காவும், சைமன் ஒளமரைத் தேடிச் செல்கின்றனர். சைமனின் உதவியோடு, விரும்பிய மிருகத்தின் உருவத்தை எடுக்கும் டோரிக் எனும் மாய பெண்ணையும் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த அணி ஃபோர்ஜின் கோட்டைக்குள் நுழைந்து, மந்திரப்பதக்கத்தைத் திருடுவதோடு, கிராவையும் மீட்கத் திட்டமிடுகின்றனர். சிவப்பு சூனியக்காரியான சோஃபினாவின் தீயெண்ணத்தை மீறி எட்கின் குழுவினரினால் சாதிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
நேர்க்கோட்டிலேயே நடக்கும் சென்க் யெண்டார் என்பவர், மூத்த மந்திரவாதியின் கிரீடத்தை எடுக்க, எட்கினின் குழுவைப் பாதாள நகரத்திற்கு அழைத்துச் செல்கிறார். சீற்றமுடன் தாக்கும் டிராகனிடமிருந்து தப்பி, கிரீடத்துடன் தப்பிச் செல்கின்றனர். சிவப்புச் சூனியக்காரியான சோஃபினா, மந்திரம் சொல்லி ஊதுக்கொம்பினை ஊதினால், அங்குக் குழுமியிருக்கும் மக்கள் அனைவரும் அடிமைகளாக மாற்றப்படுவார்கள் என்பதையும் சென்க் யெண்டாரிடமிருந்து தெரிந்து கொள்கின்றனர்.
சிவப்புச் சூனியக்காரி சோஃபினாவாக டெய்ஸி ஹெட் நடித்துள்ளார். தீநோக்குடைய பார்வையுடனும், மொட்டைத் தலையுடன் அவர் புரியும் வில்லத்தனத்தைச் சமாளிக்க எட்கின் குழு தடுமாறுகின்றனர்.
விரும்பிய மிருகங்களின் உருவத்தை எடுக்கும் டோரிக்காக சோஃபியா லில்லிஸ் நடித்துள்ளார். பிரம்மாண்ட வெண் கரடியாக, எலியாக, மானாக என அவர் உருவத்தை மாற்றிய வண்ணம் இருக்கும் விஷுவல்ஸ் எல்லாம் அருமையாக உள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் மட்டுமில்லாமல் பெரியவர்களையும் ஈர்க்கும் சிறப்பான கிராஃபிக்ஸ் படத்தின் பலம்.
தங்கள் பார்பாரியன் இனத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஹோல்கா கில்கோராக மிச்செல் ரோட்ரிக்வெஸ் நடித்துள்ளார். காதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முரட்டுத்தனமான உருவமும், இறுக்கமான முக பாவத்துடன் பிரமாதப்படுத்தியுள்ளார். நாயகன் எட்கின் டார்விஸாக க்றிஸ் ஃபைன் நடித்துள்ளார். மனைவியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டுமென்று அல்லாடும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் க்றிஸ் ஃபைன்.
குழந்தைகளுடன் ஜாலியானதொரு மாயாஜாலப் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு நல்லதொரு சாய்ஸாக இப்படம் இருக்கும்.