
கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர்.
திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் சொத்தாக இருக்கும் வாயுலிங்கத்தையும் மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக்குகிறார்.
சிவன், பார்வதியாக அக்ஷய் குமாரும், காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். துவாபுர யுகத்தில், தவமியற்றும் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளிக்க வேடனாக வரும் கிராதமூர்த்தி (சிவன்) பாத்திரத்தில் மோகன்லால் வருகிறார். அக்ஷய் குமாரையே வேடனாக இறக்கியிருக்கலாம், ஆனால் பேன்-இந்தியா படமென்பதால் கேரளத்து உச்ச நட்சத்திரம் ஒருவரைக் கேமியோக்குப் பயன்படுத்தியுள்ளனர். புராணப் பக்திக்கதை வகைமையைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் இப்படம், முதற்பாதியில் வேறொரு ஜானருக்குள் சென்று, சுமாரான திரைக்கதையால் பார்வையாளர்களை மிகவும் அலைக்கழிக்கிறது.
திண்ணனின் இனக்குழு, பீமனின் வழிதோன்றல்கள் என 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி வெளியிட்ட Vol. 2 காமிக்ஸில் சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்த இனத்தில் ஆயுதமாக வில், அம்பைப் பயன்படுத்துகிறார்கள். காட்டைச் சேர்ந்த இன்னொரு இனக்குழு, கதையை (Mace – கதாயுதம்) ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். திண்ணன் பயன்படுத்தும் வில்லின் சிறப்பம்சத்தைப் பற்றிய குறிப்பும் அக்காமிக்ஸில் உண்டு. சிறுவயதில் அஞ்சாமையுடன் ஒரு புலியைக் கையில் கிடைத்த கழியைக் கொண்டு கொன்ற திண்ணனின் வீரத்தை மெச்சும் பொருட்டு, புலியின் எலும்புகளையும் பற்களையும் கொண்டு ஒரு வில்லைத் தயாரிக்கிறார் நாதநாதன். நாதநாதனாக சரத்குமார் நடித்துள்ளார். தனிப்பயனாக்கப்பட்ட (Customize) அந்த வில்லைத் தேவைக்கேற்ப இரண்டாகப் பிரித்து வாட்களாகவும் பயன்படுத்த முடியும். இப்படியாக அற்புதமான புனைவுக்கான அஸ்திவாரத்தைப் பேப்பரில் அழகாக உருவாக்கியிருந்தாலும், படமாக முதற்பாதி மிகவும் சோதிக்கவே செய்கிறது. அவர்கள் கட்டமைக்க முனைந்திருக்கும் பிரம்மாண்டம் முழுமையாகத் திரையில் உருபெறவில்லை.
அகஸ்திய வம்சாவழியினரைச் சேர்ந்த தங்களுக்கே வாயுலிங்கம் உரிமையானது என அகம்பாவத்துடன் இருக்கிறார் மகாதேவ சாஸ்திரிகள். படத்தின் தயாரிப்பாளரான மோகன் பாபு, மகாதேவ சாஸ்திரிகளாக நடித்துள்ளார். ‘வாயுலிங்கத்தை எவரேனும் பார்க்க நினைத்தாலே அவர்களை விடமாட்டேன்’ என மிகக் கோபமாகச் சூளுரைக்கிறார் சாஸ்திரிகள். ரொம்பக் கோவக்காரராக இருக்கிறாரே என நினைத்தால், லட்சம் பேருடன் காளாமுகன் வருகிறான் எனத் தெரிந்ததும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சிவனே ஒரு படையை உருவாக்கிக் கொள்வார் என சாந்த சொரூபியாகிவிடுகிறார்.
கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். திண்ணனின் காதலியாகவும் பின் மனைவியாகவும் நெமலி எனும் பாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். பக்திப்படமாக இருந்தாலும், மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடைகளைப் பெண் கதாபாத்திரங்களுக்குக் குறைவாக அளித்து, மூன்று மணிநேரப் படத்தைப் பார்க்கும் ஆண் ரசிகர்களின் கண்களைக் குளிர்விக்க நினைத்துள்ளனர். ஆனால் படத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாகவுள்ளது என்னவோ நியூசிலாந்தின் காடுகள்தான்.
திண்ணனைத் தடுத்தாட்கொள்ள ருத்ரனை அனுப்புகிறார் சிவன். ருத்ரனாக பிரபாஸ் திரையில் வந்ததும்தான், கதைக்குள் உண்மையிலேயே செல்கிறது. நெமலி, மகாதேவ சாஸ்திரிகள், திண்ணன் என மூவரையும் சந்திக்கிறார் ருத்ரன். பாகுபலிக்குப் பிறகு, இப்படத்தில்தான் பிரபாஸின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. சுமாராய்ப் போய்க் கொண்டிருக்கும் படத்தை ஒற்றை ஆளாகத் தூக்கி நிறுத்துகிறார். போர், காதல் என திசைமாறிய படத்தைச் சரியான தடத்திற்குக் கொண்டு வந்துவிடுகிறார். அதன் பின், திண்ணனின் பார்வை படுவதெல்லாம் லிங்கமாகத் தெரிகிறது திண்ணனுக்கு. திண்ணனாக விஷ்ணு மன்சு மிக நன்றாக நடித்துள்ளார். இளவயதுத் திண்ணனாக அவ்ரம் பக்த மன்சு நடித்துள்ளார். சிவய்யா என லிங்கத்தைத் தொட்டதும், திண்ணனுக்குள் நடக்கும் மாற்றத்தை (Transition) அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். பாலக்காட்டு இசையமைப்பாளரான ஸ்டீஃபன் தேவஸி மிகச் சிறப்பான பின்னணி இசையை அளித்துள்ளார். படத்தின் முதல் பாகத்திலும், தன் கடமையை நிறைவாகவே செய்துள்ளார். திண்ணன் தனது கண்களை அகழ்ந்தெடுத்து சிவன்க்கு அளித்த பின், தன்னைச் சிறுமையாக உணர்ந்து, பக்தியில் உயர்ந்து நிற்கும் திண்ணனை மகாதேவ சாஸ்திரிகள் அடிபணியும் காட்சியை விஷுவல் மூலமாகவே அழகாக உணர்த்தியுள்ளனர். விஷுவலோடு இசையும் சேர்ந்து ஓர் உள்ளார்ந்த நிறைவினை அளிக்கிறது.
கடைசி அரை மணி நேரத்திற்காக முதல் இரண்டரை மணி நேரத்தைப் பொறுத்துக் கொண்டால், கண்ணப்ப நாயனாரின் கதை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.