ஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு தான் ஒரு காரணமாகிவிட்டோம் என முகின் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். கூட சாக்ஷி, ஷெரின், அபி உக்காந்திருக்கும் போது, “நான் முகின் கிட்ட பேசறது உனக்குப் புடிக்கலையா?” எனக் கேட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு அடி போட்டார். இப்பொழுது இதைப் பேச வேண்டுமா? முகின் இன்னும் அழுது கொண்டிருருக்கிறார். “அப்புறம் பேசலாம்” என அபி சொல்ல, “என்கிட்ட மூஞ்சியை காட்டாத” எனச் சாக்ஷி சொல்ல, “உனக்கு எப்பவும் உன் பிரச்சினை தான் பெருசு” எனச் சொல்லிக் கொண்டே அபி அந்த இடத்தை விட்டு எழுந்து போனார்.
உள்ளே போனவர் லாஸ் கிட்ட இதையே சொல்லி அழுகிறார். கூடவே, “நான் அழுதுட்டே வரேன். ஆனா முகின் அங்கேயே உக்காந்துட்டு இருக்கான். அவனுக்கு அவங்க தான் முக்கியம்” எனச் சொல்லி அழ, சமாதானப்படுத்த ஷெரின் வர, அபி அழுது கொண்டே இருக்கிறார்.
பெட்ரூமில் இருக்கும் போதும் அழுகை தொடர, முகின் அங்க வந்து பேசுகிறார். அவரைப் பேச விடாமல் செய்ததில் ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருக்கற முகின் இன்னும் கோபப்பட்டு, கட்டிலில் ஓங்கி கையால் அடிப்பதில், கட்டிலின் ஒரு பாகம் உடைகிறது. இது நடக்குது, அப்புறம் எல்லாரும் வராங்க, சமாதானப்படுத்தறாங்க, அப்புறம் அபியும், முகினும் உக்காந்து பேசுவதோட முடியகிறது.
இதெல்லாமே சப்பையான மேட்டராகத் தான் தெரிந்தது. ஒரு கட்டத்தில், ‘இந்த வாரம் அபி தான் ட்ராமா போட போறாங்களா?’ எனக் கடுப்பு கூட சிலருக்கு வந்திருக்கும். ஆனா, அந்த நேரத்தில் எனக்கு அப்படித் தோன்றவில்லை.
இப்ப கொஞ்சம் ரீவைண்ட் செய்தால், என்றும் இல்லாத வழக்கமாக, நேற்று நடந்த விஷயத்தைப் போட்டுக் காண்பித்தனர். இன்னிக்கு சாக்ஷி கேட்ட கேள்வியைக் கமல் கேட்கிறார். அதாவது, “முகின் சாக்ஷியிடம் பேசுவதைப் பார்த்து பொறாமை படுகிறிர்களா?” என்பது தான் கேள்வி. இதற்குப் பதில் சொல்வது, அபியாக மாறி கேள்விகளை எதிர் கொள்ளும் சேரன். அபி அருகில் அமர்ந்து வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டு தானிருக்கிறார். சேரனும், “ஆமா சார்” என ஒத்துக் கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக சாக்ஷியின் முகம் காண்பிக்கப்படுகிறது. அவர் அபியவே பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கப்புறம் தான் மேலே சொன்னது நடந்தது.
1. சேரன் சொன்ன பதிலை சீரியஸாக எடுத்துக் கொண்டு, எதற்கு அபியிடம் சண்டைக்குப் போகவேண்டும்.
2. இந்த கிளிப்பிங்ஸை எதற்கு போட்டுக் காட்டவேண்டும். இந்த இரண்டு கேள்வியும் உறுத்திக் கொண்டே இருந்தது.
நேற்று, கடைசி கட்ட எவிக்சன் ப்ராசஸின் போது, “நான் வீட்டுக்கு போகணும்” என சாக்ஷி சொன்னாலும், ரேஷ்மா போனதுக்கு அப்புறம் அவர் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளார். அந்த கிளிப்பிங்ஸில் தெரிகிறது.
அவரது நெருங்கிய நண்பர் ரேஷ்மா வெளியே போனதோட சோகம், சாக்ஷியிடம் சுத்தமாக இல்லை.
முகின் சோகமாக அழுது கொண்டிருக்கும் போது, இந்த மேட்டரை அபி கிட்ட பேச வேண்டிய அவசியம் என்ன?
இது என்னோட தியரி:
எவிக்சனில் இருந்து தப்பித்த சாக்க்ஷிக்கு நாளைக்கு நடக்கப் போகிற நாமினேசனைப் பற்றி யோசிக்கறார். எப்படியிருந்தாலும் தன் பேர் வரப்போறது உறுதி என அவருக்குத் தெரியும். லோஸ்லியாவும் வருவதற்கான வாய்ப்பும் இருக்கு. இந்த இரண்டு பேரை கம்பேர் பண்ணும் போது சாக்ஷி கொஞ்சம் வீக் கன்டெஸ்டன்ட் தான். லாஸ்க்குக் கிடைத்த கைதட்டல்கள் சாக்ஷிக்குத் தெரியும். ஆக, தன்னை விட வீக்கான ஒரு கன்டெஸ்டன்ட் வேண்டுமென யோசித்தவர் செய்த ட்ராமா தான் இதுவாக இருக்கவேண்டும்.
அபியை லேசாகத் தூண்டி விட்டது பெரிய இஷ்யூவாக வந்து முடிந்தது. நார்மலாக சாக்ஷி இந்த மாதிரி கேள்வி கேட்கும் போது பதட்டப்படுவார் ஆனால் நேற்று, ரொம்பக் கூலாக அபியிடம் கேடுக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அபிக்கு இது எதுவும் புரியவில்லை.
முகின் கட்டிலை உடைத்ததுக்கு அப்புறமும் பெரிதாக எதுவும் ரியாக்ஷன் காட்டவில்லை. ஒருவேளை பழைய சாக்ஷியாக இருந்திருந்தால், அவர் சண்டை போட நான் காரணமாயிட்டேனே என அழுதிருக்க வாய்ப்பிருக்கு. ரொம்ப சகஜமாக இருந்தார்.
இதை உறுதியாக நிரூபிக்கின்ற மாதிரி தான் நாமினேஷனும் நடந்தது. நேற்று இந்த சம்பவம் நடக்கவில்லை என்றால், அபியை யாருமே நாமினேட் பண்ணிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் போன வாரம் அபி எலிமினேஷனுக்கு வந்ததற்கே ஒரு காரணமும் இல்லை.
ஆக, இது ஒரு கேம் என முழுவதுமாகத் தெரிந்து கொண்டு சாக்ஷி விரிச்ச வலையில் அபி மாட்டிக் கொண்டார் என்று தான் தோன்றுகிறது. சாக்ஷி அத்தனை அறிவாளியா எனக் கேட்டால், இல்லேயென்று தான் தோன்றுகிறது. ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென வரும்பொழுது பெண்கள் யோசிக்கறதே வேற லெவலில் இருக்கும். ஆக, அபியை ஸ்கெட்சு போட்டு தூக்கினது சாக்ஷி தான் என உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் பிரச்சினை முடிந்து பார்ததால், அடுத்து தர்ஷனும் ஷெரினும் தனியாக அமரெது ஒரே காஃபியை ஷேர் பண்ணிக் குடித்துக் கொண்டு, பேசிக் கொண்டிரெதனர். அதை பெட்ரூம் கண்ணாடி வழியாகக் கவினும் சாண்டியும் பார்த்து ரன்னிங் கம்ர்ன்ட்ரி கொடுத்துக் கொண்டு இருந்தனர். தலைக்கு மேலிருந்த கேமரா வேற எங்கேயோ திரும்பி இருக்கிறதைப் பார்த்து இதைக் கண்டுபிடிக்கறாங்க ஷெரின்.
நாள் 43
டார்லிங்கு டம்பக்கு பாடலுடன் நாள் தொடங்கியது. சாக்ஷி குத்தாட்டம் போட, கூட தர்ஷன், முகினும் ஆடினார்கள். உள்ளுக்குள்ளே படுத்துக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தார் சாண்டி.
அபியும், சாக்ஷியும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ‘உனக்காக நான் எங்கன்னாலும் நிப்பேன் பேபி’ என சாக்ஷி சொன்ன போது, அது அப்பட்டமான நடிப்பாகத்தான் தெரிந்தது.
அடுத்து இந்த வாரத்துக்கான நாமினேஷன். நான் மேலே சொன்னா மாதிரி எல்லோரும் வகை தொகையில்லாமல் அபி பேரைச் சொன்னார்கள். ஒரே காரணம் முந்தின நாள் நடந்த நிகழ்வு. அடுத்த இடத்துல சாக்ஷி இருந்தார். கூடவே லாஸும், சரவணனும் நாமினேட் ஆனார்கள்.
சாக்ஷியும் அபியும் ஹைஃபை பண்ணிக்கொண்டனர். டைனிங் டேபிளில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி பார்ப்பதற்கே நன்றாக இருந்தது. தர்ஷன்-ஷெரின் இரண்டு பேரும் தனியாகப் பேசிக் கொணு இருந்ததற்கு ஒரு பாட்டைத் தயார் பண்ணிப் பாடி கிண்டல் செய்தனர் கவினும் சாண்டியும். அதை ஷெரிம் வெக்கப்பட்டுக் கொண்டே இருந்தார்.
அதுக்கப்புறம் ஏர்டெல் தேங்க்ஸ் சார்புல ஒரு டாஸ்க் நடந்தது. 3 அணிகளில், தர்ஷன், லியா, அபி டீம் ஈசியாக ஜெயித்தனர்.
அப்பொழுது திடீரென சரவணனை கன்ஃபெஷன் அறைக்கு கூப்பிட்ட பிக்பாஸ், ‘பேருந்தில் பெண்களை இடிப்பேன்’ எனச் சொல்லி, மன்னிப்பும் கேட்ட விஷயத்தைக் குறிப்பிட்டு, பிக் பாஸ் வீட்டுல இருந்து உங்களை வெளியேற்றிகிறோம் எனச் சொல்லிவிட்டார். கன்ஃபெஷன் அறையிலிருந்து நேரடியாக வெளியே போகிறார் சரவணன். அதோடு முடிஞ்சுது நேத்து எபிசோட்.
பிக் பாஸ் தொடர்ந்து பார்க்கிறவங்களுக்கு யாருக்குமே, சரவணன் அன்னிக்குச் சொன்னது தப்பாவே தெரியவில்லை. அங்கே பேசிக் கொண்டிருந்த விஷயத்துக்கு வலு சேர்க்க சொன்னதாகத் தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பிக் பாஸ் பார்க்காதவர்கள், பிக் பாஸ் ஒரு கலாச்சாரச் சீர்கேடு எனச் சொல்றவங்க, பிக் பாஸ் பற்றி எழுதினாலே அன்ப்ரெண்டு செய்யும் பிரகஸ்பதிகள் எல்லாரும் சேர்ந்து, சரவணன் பேசின ஒரு வரியை மட்டும் உருவி ரைட்டப் எழுதினார்கள். அது ஏன் பேசப்பட்டது, எந்த சூழ்நிலையில் பேசப்பட்டது என எதையும் பார்க்காமல், சரவணனை, கமலை, அன்னிக்கு அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கைதட்டினவர்கள் அனைவரைரையும் விமர்சித்து, அவசர ஆவேசம் கொண்டனர்.
அதற்கு சரவணனை மன்னிப்பும் கேட்க வைத்தாயிற்று. ஆனாலும் அதே காரணத்தைச் சொல்லி அவரை அனுப்புவதை நம்ப முடியவில்லை. தன் மனைவி குழந்தையோட போட்டோ கேட்டது நினைவிருக்கலாம். ஒரு வேளை குடும்பப் பிரச்சினை காரணமாக அவரை வெளியே அனுப்ப முடிவு பண்ணிவிட்டு, இந்த விஷயத்தை வைத்து, தன் சேனலுக்கு மைலேஜ் தேடிக்கறாங்களோ என்று தோன்றுகிறது.
20 வருடங்களுக்கு முன்னாடி நடந்த விஷயத்திற்காகச் சேரனை வாட்டி வதைத்த சரவணனுக்கு, அதுக்கும் முன்னாடி நடந்த விஷயம் வில்லனாக மாறிவிட்டது.
ஆக இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் 3 பேருமே பெண்கள் தான். சித்தப்பூ இல்லாத சாண்டியும், கவினும் என்ன செய்யப் போகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.