Shadow

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும்.

காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத்னம். எல்லாவற்றையும் அடித்து உடைத்து துவம்சம் செய்வதுதான் மாஸ் என்ற கருத்தாக்கம் கொண்டவர்களுக்கு, அது சாதாரன காட்சியாகத் தெரியலாம். அனைத்தையும் உத்துக் கவனிப்பது, சமயோசிதமாகச் செயற்படுவது, மக்களே பிரதானம் என முடிவெடுப்பதில் கம்பீரத்தைக் காட்டுவது என ராஜராஜசோழனாக மகோன்னத புகழை அடையப் போகும் ஒரு பாத்திரத்திற்கான முத்தாய்ப்புகளை, தன் மிடுக்கான நடிப்பால் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார் ஜெயம் ரவி.

வில்லனில்லாத கதை பாழ். அக்குறையைப் போக்க, படத்தில் ராஷ்டிரக்கூட அரசர் கோத்திகாவாக பாபு ஆண்டனி வருகிறார். க்ளைமேக்ஸில் தேமேவெனப் பாவப்பட்டு போரும் புரிகிறார். அவருடன், திருக்கோயிலூர் மலையமானை மீறிப் பார்த்திபேந்திர பல்லவன் எதிரணியில் சேரும் திடீர் ட்விஸ்ட் எல்லாம் தேவையற்றது. பார்த்திபேந்திரன், மூலக்கதையில் நாகப்பாம்பினை ஒத்த அழகுடைய நந்தினியின் மகுடிக்கு மயங்குபவராக வருவாரே அன்றி, இப்படியெல்லாம் கட்சி மாறிப் பார்வையாளர்களைச் சோதிக்கமாட்டார். காளாமுகர்களை நம்பித் தெருவில் இறங்கும் நகைச்சுவை உணர்வுமிக்க மதுராந்தகனின் மனமாற்றமும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தில், உண்மையான வில்லனாக ரவிதாசன் காட்டப்பட்டிருக்கவேண்டும். படத்தின் முடிவில், ஆதித்த கரிகாலனுடைய காதலின் வீச்சினை மட்டுப்படுத்தாமலே A1 குற்றவாளியான ரெவிதாஸனுக்குக் கூடுதல் பொறுப்பினைத் (வில்லத்தனம்) திரைக்கதையில் வழங்கியிருக்கலாம் எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குநர் மணிரத்னமும்.  ஆனால், சோழப் புலிகளைக் கொல்லச் சூளுரைத்துக் கொண்டிருப்பவராகவும், நந்தினியின் ஆக்ஞைக்கு முறைப்புடன் கட்டுப்படுபவராகவும் நீர்த்துப் போகிறார் கிஷோர்.

சோழ இளவரசி குந்தவையாக திரிஷா மிளிர்கிறார். நீர்நிலையின் நடுவிலுள்ள சின்னஞ்சிறு மணல்திட்டில், வந்தியதேவனிடம் விசாரிக்க வரும் காட்சியில், தனது தம்பி அருண்மொழிவர்மனைப் பற்றிய செய்தியை அறிந்து கொள்ளும் அக்கறையை விட, வந்தியதேவன் மீதான காதலே பிரதானமாக உள்ளது. கதாபாத்திரங்களின் மனநிலையை இரண்டாம் பட்சமாகக் கையாண்டிருந்தாலும், அந்தக் காட்சியின் அழகியலில் எந்தக் குறையும் வைக்கவில்லை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். கதாபாத்திரங்களை விட அப்பாத்திரத்தை ஏற்ற நடிகர்களே முக்கியம் என கருதியுள்ள மணிரத்னம், அதற்கான சமரசங்களைத் திரைக்கதையில் செய்துள்ளார். அதனால்தான் ஆதித்த கரிகாலன் இறப்பில், வானவன் மகாதேவியார் யாரோ மூன்றாம் நபர் போல் துக்கமின்றி ஒதுங்கி நிற்க, தந்தையான பிரகாஷ்ராஜ் மட்டும் துடிக்கிறார். பட்டத்து இளவரசரின் மரணம், குடும்பத்தில், அரண்மனையில், அரசியலில், மக்கள் மத்தியில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எல்லாம் பெரிதாகக் கவனம் கொள்ளவில்லை திரைக்கதை. காதலும், காதல் நிமித்தமுமே படத்தின் மையமாகச் சுழல்கிறது.

நந்தினியாகவும் ஊமைராணியாகவும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய் பச்சன். வளர்த்தவர் மீதான பாசத்திற்காகக் கொலை செய்யத் துணிகிறார் நந்தினி. காதலுக்காக உயிரைக் கொடுப்பவராக உள்ளார் ஊமைராணி. குந்தவையின் காதலை விடவும், ஆதித்த கரிகாலனின் காதலை விடவும், படத்தில் வரும் வேறெந்த காதலையும் விட மிக உயர்ந்தது ஊமைராணியின் காதலே! புற அழகில் ஜொலிப்பவருக்கான காதலை வியந்தோதுவதில் வல்லவரான மணிரத்னத்திற்கு, ஊமைராணியின் ஆத்மார்த்த காதல் ஒரு பொருட்டாக இராது. நிறைவில்லாத ஏனோ தானோ என்ற ஸ்க்ரீன் பிரசென்ஸில் மறைகிறார் ஊமைராணி. ஆனால், ஊமைராணியின் காதல் என்பது, காவியத்தன்மை உடைய அமரகாவியம். பெற்ற மகளை விட, காதலனின் மகன் மீது அதீத பாசமுடையவராக உள்ளார். அருண்மொழி வர்மனை நிழலாகப் பின்தொடர்ந்து, அவருக்கு உண்மையான ஆபத்துதவியாக இருக்கிறார். இந்தக் காதலானது, பட்டத்து இளவரசனைப் பித்தனாக்குகிறது, ஏதோ ஒரு தீவிலுள்ள ஊமைப்பெண்ணைப் பிச்சியாக்குகிறது. புனைவில் கூட, அதிகாரத்திலுள்ளவர்களின் காதலே கொண்டாடப்படுவது துரதிர்ஷ்டம்.

காதல் தோல்வியும், உள்ளிருந்து கொல்லும் ஆட்கொல்லியான குற்றவுணர்ச்சியும், ஒரு மனிதனின் மனநலத்தை உருக்குலைத்துவிடும். அத்தகைய உளச்சிதைவைத் தன் நடிப்பில் அழகாகக் கொண்டு வந்துள்ளார் விக்ரம். கடம்பூர் மாளிகையில், பழுவேட்டரையரையும் சிற்றரசர்களையும் குதிரையில் அமர்ந்தவாறு சதித்திட்டத்தைப் பேசிக் கலவரப்படுத்துவதாகட்டும், அருண்மொழி வர்மன் பற்றிய செய்தியை ஆழ்வார்க்கடியான் கொண்டு வரும்பொழுது நெகிழ்வதாகட்டும், க்ளைமேக்ஸில் தான் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை நந்தினியிடம் இறக்கி வைப்பதாகட்டும், ஆதித்த கரிகாலனாக விக்ரம் அசத்தியுள்ளார். பொன்னியின் செல்வன் படமே ஆதித்த கரிகாலனுக்காகத்தான் என நாவலின் நாயகனான வந்தியதேவனிடமிருந்து, தானேற்ற பாத்திரத்திற்கு மடைமாற்றியுள்ளார் விக்ரம். நந்தினியின் காதலன் என்று கூட இப்படத்திற்குத் தலைப்பினைச் சூட்டியிருக்கலாம் எனத் தோன்ற வைத்துவிடுகிறார்.

படத்தின் தலைப்பு போடப்படுவதற்கு முன்பு வரும், இளம் பிராயத்து நந்தினி – ஆதித்த கரிகாலன் அத்தியாயம் கவிதை போல் அமைந்துள்ளது. முந்தைய பாகத்தில், வந்தியதேவனின் ஓட்டத்தில் கதாபாத்திரங்கள் அறிமுகமாகியவண்ணமே இருக்க, திரைக்கதை எங்கும் நிற்காமல் ஓர் அவசரத்தன்மையிலேயே பயணித்தது. ஆனால், இந்தப் பாகத்தின் நோக்கம்,  தொடக்கம் முதலே திரைக்கதையில் மிக அழகாக இழையோடியுள்ளதே இப்படத்தின் மேன்மைக்கும் சிறப்புக்கும் காரணம்.