கதையின் களம் வடக்கு ஃபின்லாந்தில் லேப்லாந்து (Lapland) எனும் பகுதியில் நிகழ்கிறது. ஒரு ஃபின்லாந்து வீரன், 30 பேர் கொண்ட நாஜிப்படையை எதிர்கொள்கிறான். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன், இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் படத்தைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
முதலாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், 30 நவம்பர் 1939 முதல் 13 மார்ச் 1940 வரை, ரஷ்யாவைத் தனி ஆளாக எதிர்கொண்டது ஃபின்லாந்து. மூன்று மாதங்கள் நடந்த அப்போரின் பொழுது, குளிர் மைனஸ் 43° செல்ஷியஸில் வாட்டியதால், அப்போருக்கு ‘குளிர்காலப் போர் (Winter War)’ எனப் பெயரிடப்பட்டது. பின், இரண்டாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், ஃபின்லாந்தும் ஜெர்மனியும் தோளோடு தோள் சேர்ந்து, சோவியத் ரஷ்யாவை 1941 முதல் 1944 வரை எதிர்த்துப் போரிட்டது. செப்டம்பர் 1944 இல், ரஷ்யாவுடன் உடன்படிக்கை ஏற்பட்டு, ஜெர்மனியப் படைகளை ஃபின்லாந்து எல்லையை விட்டுத் துரத்தச் சம்மதிக்கிறது ஃபின்லாந்து.
அந்தக் குளிர்காலப் போரில், ‘வொயிட் டெத் (White Death)’ என ரஷ்யர்களால் அழைக்கப்பட்ட சிமோ ஹாய்கா (Simo Hayka) எனும் ஃபின்னிஷ் ஸ்னைப்பர், 500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களைச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தப் படத்தின் நாயகனான ஆட்டாமி கோர்பி எனும் பாத்திரத்தை, சிமோ ஹாய்காவால் கவரப்பட்டே படைத்துள்ளார் இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர்.
1944 பிற்பகுதியில், வடக்கு ஃபின்லாந்தின் லேப்லாந்து எனும் பிரதேசத்தில், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் தங்கத்தைத் தோண்டிக் கொண்டிருக்கார் ஆட்டாமி கோர்பி. அவருக்கு ஏராளமான தங்கக் கட்டிகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு போய், 563 மைல் தூரம் அப்பாலுள்ள வங்கியில் வைப்பீடாகச் சேமிக்கப் புறப்படுகிறார் கோர்பி. வழியில், ப்ரூனோ ஹெல்டோர்ஃப் எனும் கேப்டனால் வழிநடத்தப்படும் நாஜிப்படையைச் சந்திக்க நேருகிறது.
எப்படியும் போரில் தோற்பது உறுதியாகிவிட்டது, தங்கக்கட்டிகள் கிடைத்தால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் எனக் கணக்கு பண்ணுகிறார் ப்ரூனோ. கொஞ்ச நேரத்திற்கு முன் தான் அந்தச் சுரங்கவயலில் நிலச்சுரங்கவெடியைப் பதித்து வைத்திருக்கும் நாஜிப்படை. அந்தப் படையின் வேலையே, கண்ணில்படும் அனைத்தையும் கொளுத்தி அழிப்பதே! அவர்கள் புதைத்து வைத்த வெடியைப் பயன்படுத்தியே நாஜிப்படையை மிரள விடுகிறார் ஆட்டாமி கோர்பி.
தலைமைச் செயலகத்தில் இருந்து கேப்டன் ப்ரூனோ ஹெல்டோர்ஃபிற்கு ஒரு செய்தி வருகிறது. “நீங்க அதிர்ஷ்டசாலிகள். உடனடியாக உயிரைக் காப்பாற்றிக் கொண்டு நார்வேக்குப் போங்க. அவன் பேரு ஆட்டாமி கோர்பி. விண்ட்டர் வார்ல, சுமார் 300 பேரைத் தனி ஆளாகக் கொன்னிருக்கான். அவனை ரஷ்ய வீரர்கள் ‘கோஷேய்’ எனக் கூப்பிடுவாங்க. அப்படின்னா அழிவில்லாதவன்னு பொருள். அவன் வம்புக்குப் போகாதீங்க” என்பதே அந்தச் செய்தி! வாழ்க்கை அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கும். ஆனால், அதை உதாசீனப்படுத்திவிட்டு, எப்படியும் தங்கக்கட்டிகளை அடைந்தே தீருவது என தனது முடிவைத் தேடிப் போகிறார் ப்ரூனோ ஹெல்டோர்ஃப்.
‘நாஜிக்கள் இறப்பதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையான விஷயம்’ என்றே ட்ரெய்லரில் இப்படத்தை விளம்பரப்படுத்தி இருந்தனர். படத்தின் கதை அதுதான். தங்கம் (The Gold), நாஜிக்கள் (Nazis), சுரங்கவயல் (Mine Field), தொன்மக்கதை (Legend), எரிக்கப்பட்ட பூமி (The Scorched Earth), அனைவரையும் கொல் (Kill Them All) என படத்தில் மொத்தம் 7 சேப்டர்கள். சேப்டர்களின் தலைப்பே கதையை முழுவதுமாகச் சொல்லிவிடும்.
பொதுவாக, ஐரோப்பக் கண்டத்திலிருந்து வரும் போர்ப்படங்கள், போரின் பாதிப்பை மறந்து விடக்கூடாது என்ற நோக்கில், அதன் பாதகங்களை முன்னிலைப்படுத்திப் படம் எடுப்பார்கள். ஆனால், இயக்குநருக்கு ‘ரேம்போ: ஃபர்ஸ்ட் பிளட்’ போன்ற ஆக்ஷன் திரைப்படங்கள் போல் இப்படத்தை உருவாக்க வேண்டுமென்பது ஆசை. அதனால் வன்முறையின் அழகியலே படம் முழுவதும் எஞ்சி நிற்கிறது. போர் சரியா, தேவையா, மனிதனின் தங்கம் மீதான ஆசை எத்தகைய துன்பத்தைக் கொண்டு வருமென்ற தத்துவார்த்த கேள்விகள் எதையும் படம் முன்வைக்கவில்லை.
ஃபின்னிஷ் மொழியில், சிசு என்றால், தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் முயன்று கொண்டிருப்பது என்பது போல் பொருள்படும். மன உறுதி, நெஞ்சுரம், முடிக்கவே முடியாத அசாத்தியமான செயல்களை முடிக்கக் கூடிய விடாமுயற்சி என்பனவும் சிசு எனும் சொல்லுக்கான அர்த்தங்களாகக் கொள்ளலாம். ஆட்டாமி கோர்பி, அத்தகைய ‘சிசு’வைத் தனக்குள்ளே கொண்டவர். ‘என்ன பண்ணா நீ செத்துத் தொலைவ?’ என வில்லன் கடுப்பாகுமளவு நாயகனுக்கு கனத்த ‘சிசு’ உள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்துள்ளார் ஃபின்னிஷ் நடிகர் ஜோர்மா தோமிலா. குடும்பத்தை இழந்து, வீட்டை இழந்து, மனநலத்தை இழந்து, வேலையை இழந்து தவிக்கும் ஒரு ஜீவன். எல்லாம் இழந்தும், தங்கக்கட்டிகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கொலைகார மனிதராக உள்ளார். மனிதனிடமிருந்து மனிதத்தை எடுத்து மூர்க்கத்தனத்தில் தள்ளும் வேலையையே போர் செய்யும். போர், அப்படித்தான் இப்படத்தின் நாயகனை மாற்றிவிடுகிறது. அதை “சிசு” எனக் கொண்டாடி, வன்முறையை வியந்தோதி அச்சுறுத்தலை விதைக்கிறது இப்படம்.