ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா இல்லையா என்பதே கதை.
நல்ல பகடியான தலைப்பு. ‘இன்று போய் நாளை வா (1981)’ எனும் இயக்குநர் கே. பாக்யராஜின் படத்தில் வரும் ஒரு வசனத்தைத் தலைப்பாக உபயோகித்துள்ளனர். விருப்பமின்றி ஹிந்தி கற்கும் ஒருவரின் மனோநிலையைச் சுட்டுவதற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்பதாகப் போராடி ஏக்தா சபாவை மூடச் சொல்லிப் போராடி வெற்றி பெறுகிறார் கயல். ஹிந்தித் திணிப்பைப் பற்றிய நாளிதழ் செய்தித்துண்டுகள் மூலம் பெண்களுக்கான சட்டங்கள் பற்றியும், மொழிப்போர் பற்றியும் சொல்லுகின்றனர். ஆனால் படத்திற்குள் வலுவாகக் கொண்டு வராமல் விட்டுவிடுகின்றனர். சமூக ஆர்வலர், வீர தமிழ் மங்கை என கயல்விழிக்குப் பட்டமளிக்கவே அவை பயன்பட்டுள்ளன.
அன்பிற்கினியாள் படத்தில், காவல்துறை அதிகாரியாகக் கலக்கியிருந்த ரவீந்திர விஜய், இப்படத்தில் தமிழ்ச்செல்வன் எனும் பாத்திரத்தில் தோன்றியுள்ளார். நாயகியைப் புகழ்ந்து, அவர் எழுத்தைப் பாராட்டி, கயலின் குட் புக்ஸில் இடம்பெறுகிறார். உள்ளுக்குள் ஆணாதிக்கத்தையும் வெளியே பகுத்தறிவாதியாகவும் காட்டிக் கொள்ளும் வேடத்திற்குப் பொருந்துகிறார்.
நாயகியின் சக வங்கி ஊழியை அலமேலுவாக வந்தாலும், தேவதர்ஷினி படத்தின் கலகலப்பிற்குப் பெரிதாக உதவவில்லை. நாயகியின் அண்ணன், அண்ணியாக நடித்த ராஜேஷ் பாலசந்திரனும், இஸ்மாத் பானும் ரசிக்க வைக்கின்றனர். நாயகியின் தாத்தா ரஹோத்தமனாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். கதாபாத்திரத் தேர்வில் இருக்கும் கவனம் கதாபாத்திர வடிவமைப்பில் இல்லாதது திரைக்கதையை பலவீனமாக்கியுள்ளது.
வள்ளுவன்பேட்டையில் ஏக்தா சபா மூடப்படுவதால் வேலை இழக்கும் ரங்குடு எனும் ரங்கநாதனாக ஆனந்த்சாமி நடித்துள்ளார். படத்தில் ஏதோ பண்ணப் போகிறார் என்ற பில்டப்பிற்கு மட்டும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். இதில் நகைமுரண் என்னவென்றால், இப்படத்துடன் ஒரே நாளில் வெளியான தங்கலானிலும் இவருக்கு அதே பாத்திரம், அதே காஸ்ட்யூம் என்பதே! இப்படத்தில் ஏமாற்றி இருந்தாலும் தங்கலானில் நிறைவான பாத்திரம் வாய்த்திருக்கிறது அவருக்கு.
‘அதெல்லாம் அடக்கம் ஒடுக்கமாக இருக்கமுடியாது’ என அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், படம் முழுவதும் அந்த எனர்ஜியுடனே இருக்கிறார். அவரது குணவார்ப்பிற்கு, கல்யாணத்தை நிறுத்துவது என்பது இலகுவாகக் கையாளக்கூடிய பிரச்சனை என்றே எண்ண வைக்கிறது. அப்படித்தான் தடாலடியாகத் தீர்க்கவும் செய்கிறார். இடையில் தான் யார் என்பதை மறந்து விடுகிறார். வெள்ளம் தலைக்கு மேல் போனதும் தன்னை உணர்ந்தவராகக் களத்தில் இறங்குகிறார். இயக்குநர் சுமன் குமாரின் எழுத்தில் சுவாரசியங்கள் கருதி நேர்க்கோட்டுத் திரைக்கதையில் கொஞ்சம் ஏற்றயிறக்கங்களைக் கொண்டு வந்திருக்கலாம்.
படம் சீரியஸாகவும் இல்லாமல், நகைச்சுவையாகவும் இல்லாமல் ஒரு சீரான ட்ராக்கில் செல்கிறது. யாமினி யக்ஞமூர்த்தியின் கேமரா கோணங்கள், மேடை நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமாவும், கீர்த்தி சுரேஷின் உடை வடிவமைப்பாளர் ஸ்ருதி மஞ்சரியும், கலை இயக்குநரும் படத்திற்கு வண்ணம் சேர்த்துள்ளனர்.