
பிக் பாஸ் – சீசன் 1 (2017) வெற்றியாளரான ஆரவ் நாயகனாக நடித்திருக்கும் படம். அவர் பிக் பாஸை விட்டு வெளியானதுமே எடுக்கப்பட்ட படம். படம் தயாராகி சுமார் ஆறு வருடங்கள் ஆகிறது. ஓவியாவுடனான ஆரவின் புகழ்பெற்ற மருத்துவ முத்தம் ரெஃபரென்ஸ் படத்தில் வருகிறது. ஓவியாவும் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். யோகிபாபு இளமையாகக் காணப்படுகிறார்.
ராஜா என்பவர் பீமா எனும் யானையை வளர்க்கிறார். முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ராஜாவின் யானைக்குப் பதிலாக, வேறொரு யானையை அவருடையது என முகாம் அதிகாரிகள் சொல்கிறார்கள். பீமாவிற்கு என்னானது, ராஜா எப்படி தன் யானையை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
வனத்துறை அமைச்சரிடம் வேலைக்குச் சேரும் துர்கா பாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். பீமாவை மீட்க உதவுவதோடு, யானைகளின் தந்தங்களைக் கடத்தும் கும்பலையும் கண்டுபிடிப்பதற்கும் உதவும் கதாபாத்திரம் அவருக்கு. சுரபி திரையரங்கத்தின் உரிமையாளர் சிங்கராயராக நாசர் நடித்துள்ளார். மகன் ராஜா மீதும், மகனாகக் கருதும் பீமா மீதும் அதீத பாசம் கொண்ட தகப்பன் பாத்திரத்திற்கு அளவெடுத்தது போல் பொருந்திப் போய்விடுகிறார்.
இடி எனும் பாத்திரத்தில் யோகபாபு மிக இளமையாக இளைத்துக் காட்சியளிக்கிறார். பிச்சைக்காரனாக இருந்து அமைச்சரின் மகனாக மாறும் இடி பாத்திரம், நகைச்சுவைக்குப் பெரிதும் உதவவில்லை. ஆனால், அக்குறையைத் தனது நடிப்பால் போக்கி, படத்தின் கலகலப்பிற்கு, வனத்துறை அமைச்சர் மந்திரவாசகமாக நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் உதவியுள்ளார். ராணி எனும் படத்தின் நாயகியாகத் தனது பெயரிலேயே ஒரு பாடலுக்கு, நட்புக்காகத் தோன்றி நடனமாடியுள்ளார் ஓவியா.
நாயகனால் காதலிக்கப்பட, துளசி எனும் பாத்திரத்தில் ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். அவருக்கான வசனங்கள் கூட மிக டெம்ப்ளட்டாகவே எழுதப்பட்டுள்ளன. இயக்குநர் நரேஷ் சம்பத் வசனத்திலும், திரைக்கதையைச் சுவாரசியப்படுத்துவதிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். தாயின் மரணத்தால் வாடும் சிறுவனுக்கு, யானையிடம் இருந்து ஓர் எதிர்பார்ப்பற்ற நேசம் கிடைக்கிறது. ராஜாவாக நடித்துள்ள ஆரவிற்கும், யானைக்குமான பாண்டிங் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரவின் ஆஜானபாகு தோற்றம், யானையுடனான அவரது கெமிஸ்ட்ரிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. பீமாவாக வரும் யானையின் கம்பீரம் விஷுவல்ஸ்க்கு அழகு சேர்த்துள்ளது. மனிதனுக்கும் விலங்குக்குமான பிணைப்பை மையப்படுத்தி வந்திருக்கும் மற்றொரு படம்.