
‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனின் கதையை, அவரது உதவியாளர் SM பாண்டி இயக்கியுள்ளார். மெட்ரோ படத்தைப் போலவே, இப்படமும் செயின் ஸ்னேட்சிங்கை மையப்படுத்திய படம்.
‘திருடன் முகத்தை மூடிக் கொண்டு வருவான். திருடிக் கொண்டு போய் விடுவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டித் துன்பறுத்தி நகையைத் திருடிச் செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு. மெட்ரோ திருடனுடைய கதை, இது ராபருடைய கதை’ என படத்தின் கதாசிரியரான ஆனந்த் கிருஷ்ணன், ராபர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார்.
பெண்களை ஆசைக்கு இணங்க வைக்கப் பணம் தேவை என்கிற கருத்தாக்கத்திற்குச் செல்லும் படத்தின் எதிர் நாயகனான சத்யா, பெண்ணின் கழுத்தில் இருந்து நகையைக் கொடூரமாகப் பறிக்கத் தொடங்குகிறான். எங்கெல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லையோ, பொருத்தப்பட்டாலும் வேலை செய்யாத இடங்களாகப் பார்த்துக் கொள்ளையடிக்கிறான். அதில் வழக்குகளாகக் காவல்துறையில் பதியப்படுவது மிகவும் சொற்பமே! தனியொருவனாகப் பல செயின் பறிப்புகளைச் செய்து முடிக்கிறான். ஒரு கட்டத்தில், தன்னைத் தற்காத்துக் கொள்ள கொலை புரியவும் தயங்காதவனாக மாறுகிறான்.
காலையில் ஹெச்.ஆராகவும் (HR), மற்ற வேளைகளில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்படும் நகைகளை வாங்கும் தொழிலைச் செய்பவராக டேனியல் ஆனி போப் நடித்துள்ளார். ஓர் இயக்கமாகச் செயற்படும் கெட்டவனான டேனியலின் பாதையும், தனி ஆவர்த்தனம் செய்யும் கேடுகெட்டவனான சத்யின் பாதையும் ஓரிடத்தில் குறுக்கிடுகிறது.
படத்தில் நாயகன் இல்லாதது ஒரு குறை. எந்தக் கதாபாத்திரத்தோடு பொருத்திக் கொண்டு, கதையில் பயணிப்பது என்ற குழப்பம் எழுகிறது. எதிர்நாயகனின் செய்கைகள் அச்சுறுத்தலாகவும் அருவருப்பாகவும் இருக்க, கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பவர்களாகக் காவல்துறை அதிகாரியாக வரும் ராஜா ராணி பாண்டியனும், சத்யாவின் கொள்ளையில் உயிரை இழக்கும் இளம்பெண்ணின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷும் உள்ளனர். காவல்துறை உயரதிகாரிகள், வடமாநிலத்தவர்கள் மீது பழியைப் போட்டு பீஹாரில் சிலரை என்கவுன்ட்டர் செய்து பழியைக் கழித்துக் கொள்கின்றனர். ஆனால் பாண்டியனும் ஜெயப்பிரகாஷும் உண்மையைத் தேடிக் களமிறங்குகின்றனர்.
ஒரு காட்சியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் துப்பட்டாவைப் பிடித்திழுத்து, வண்டியில் இருந்து தூக்கி சாலையில் வீசுவார். சண்டை இயக்குநர் மகேஷ், ஒளிப்பதிவாளர் உதயமூர்த்தியுடன் இணைந்து மிகப் பிரமாதமாக அக்காட்சியை வடிவமைத்துள்ளார். குழந்தைகளுக்கு உகந்ததல்ல என்பதால் படத்திற்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த கதையையும், சிறைக்குள் இருக்கும் ஆடியோ பழனியாக நடித்திருக்கும் சென்ட்ராயன், ஹேக்கர்ஸ்களிடம் விவரிக்கிறார். அந்த அத்தியாயத்தை முடித்த விதத்தில் சுவாரசியப்படுத்தியுள்ளனர். ஆனந்த் கிருஷ்ணனுடன் இணைந்து, திரைக்கதையும் வசனமும் எழுதியுள்ளார் இயக்குநர் S.M. பாண்டி. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இக்கதை பயத்தை விளைவித்தாலும், பீஹார் என்கவுன்ட்டர் என காவல்துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் காட்சியிருந்தாலும், தமிழ் சினிமா மரபுப்படி இறுதியில் காவல்தூறையினர் தங்கள் கடமையைச் செய்து சற்றே வயிற்றில் பாலை வார்க்கும் விதமாகப் படத்தை முடித்துள்ளது சிறப்பு.