

ஃபின்னிஷ் மொழியில், சிசு (SISU) என்றால், தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் முயன்று கொண்டிருப்பது என்பது போல் பொருள்படும். மன உறுதி, நெஞ்சுரம், முடிக்கவே முடியாத அசாத்தியமான செயல்களை முடிக்கக் கூடிய விடாமுயற்சி என்பனவும் சிசு எனும் சொல்லுக்கான அர்த்தங்களாகக் கொள்ளலாம். ஆட்டாமி கோர்பி, அத்தகைய ‘சிசு’வைத் தனக்குள்ளே கொண்டவர். அவர் போரால், குடும்பம் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகத் தனித்து விடப்பட்டவர். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கரேலியாவில் தன் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அம்மர வீட்டைப் பலகை பலகையாகப் பிரித்தெடுத்து, ஃபின்லாந்தில் அமைதியானதொரு சூழலில் மீண்டும் அவர்கள் ஞாபகமாக வீட்டை அமைக்க விரும்புகிறார் ஆட்டாமி கோர்பி.
ஆனால், அவரைக் கொல்ல நினைக்கின்றது சோவியத்தின் உளவு அமைப்பான KGB. அதற்காக சைபீரியன் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் போர் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத் தளபதி ஏகோர் டிராகனோவ். ஃபின்லாந்து அரசுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் 1944 இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டிருந்தாலும், முதலாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில் (நவம்பர் 30, 1939 முதல் மார்ச் 13, 1940 வரை), செம்படையைச் சேர்ந்த பல ரஷ்ய வீரர்களைக் கொன்று, அவர்கள் மனதில் ‘கோஷேய் (அழிவில்லாதவன்)’ என ஆழப் பதிந்தவர் ஆட்டாமி கோர்பி. அவரது குடும்பத்தைக் கொன்று அவரை கோஷேய் எனும் சகாப்தமாக்கிய ஏகோர் டிராகனோவ்க்கே, அவரை அழிக்கும் பணி தரப்படுகிறது.
தனக்கிடப்பட்ட பணியில் படாதபாடுப்பட்டு வெற்றி பெற்றுவிடுகிறார் ஏகோர் டிராகனோவ். ஆனால், ‘உன் குடும்பத்தைத் தோட்டாக்கள் செலவு செய்யாமல் மண்வெட்டியால் கொன்றது நான் தான்’ எனச் சொல்லி, ஆட்டாமி கோர்பியின் ‘சிசு’வை உசுப்பி விட்டுவிடுகிறார். உலகின் மிகக் கொடுமையான நரகமெனக் கருதப்படும் சைபிரியன் சிறைச்சாலைக்கு ட்ரெயினில் அழைத்துச் செல்லப்படுகிறார் ஆட்டாமி. ஏகோரைக் கொன்று பழி தீர்க்க, ட்ரெயினுக்குள் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் ஆட்டாமி கோர்பி.
முதல் பாகத்தை விட 2 நிமிடங்களும், ஒரு சேப்டரும் கம்மி. வீடு (Home), பழைய எதிரிகள் (Old Enemies), டூவீலர் வீரர்களை முடமாக்குதல் (Motor Mayhem), வான்வழி தாக்குதல் (Incoming), நீண்ட துரத்தல் (Long Shot), இறுதி அத்தியாயம் (Final Chapter) என மொத்தம் ஆறு சேப்டர்கள். இதில் முதல் மற்றும் கடைசி அத்தியாயம் தவிர்த்து, பழைய எதிரிகளைச் சந்திக்கும் இரண்டாம் அத்தியாயம் முதல் பழிவாங்கத் துரத்தும் ஐந்தாம் அத்தியாயம் வரை இரத்தம் தெறிக்கும் சாகச ஆக்ஷன் காட்சிகளே! முதல் அத்தியாயம் எமோஷ்னலாகவும், கடைசி அத்தியாயத்தை நெகிழ்வாகவும் முடித்துள்ளனர். இந்தப் படத்தில் நாயகனுக்கு ஒரு வசனம் கூட இல்லை. ஆட்டாமி கோர்பியாக நடித்துள்ள ஜோர்மா தோமிலாவின் முகமும் உடற்மொழியுமே அனைத்தையும் பேசிவிடுகிறது. அதுவும் இறுதிக்காட்சியில், அவர் வார்த்தைகளற்று நெகிழும் தருணத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக வில்லத்தனத்தனத்தில் கலக்குவதற்காக ‘அவதார் (2009)’, ‘டோன்ட் ப்ரீத் (2016 & 2022)’ ஆகிய படங்களில் நடித்த ஸ்டீஃபன் லேங்கை, ஏகோர் டிராகனோவாக நடிக்க வைத்துள்ளனர். அதற்கு அட்டகாசமாக நியாயம் செய்துள்ளார் ஸ்டீஃபன் லேங். அவர், ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ படத்திலும் கலோனல் மைல்ஸ் க்வாட்ரிச்சாக, அவதார் படப்பாத்திரத்தைத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் போலல்லாமல் மனிதத்தின் மீதான நம்பிக்கையை அங்கீகரிப்பது போல் படத்தை இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர் முடித்துள்ளது சிறப்பு!


