Shadow

தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga review

சென்னைக் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருவர் கொல்லப்படுகிறார். அவ்வழக்கை விசாரிக்கும் மகுடபதி, கிடைக்கும் துப்புகளைக் கொண்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் செல்கிறார். அங்கே நடந்த ஒரு சிறுமியின் மரணத்திற்கும், கொலை வழக்கிற்கும், அக்குடியிருப்பைக் கட்டிய கோடீஸ்வரரான வரதராஜனுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகிக்கிறார் மகுடபதி. ஆனால் வரதராஜனும் கொல்லப்பட, நடக்கும் யாவற்றிற்கும் யார் காரணமென விரிகிறது படம்.

ஆட்டிசச் சிறுமியாக நடித்துள்ள பேபி அனிகா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கனத்தைக் கூட்ட உதவியுள்ளார். ஆசிரியை மீராவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மீராவின் தற்காப்புக் கலை மாஸ்டராக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தீயவரை அப்படியே விட்டு வைக்கக் கூடாதெனப் பழிவாங்கத் துணியும் நாயகியாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஐஸ்வர்யா ராஜேஷின் பாத்திரம். அவரது காதலர் ஆதியாக பிரவீன் ராஜா நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி மகுடபதியாக அர்ஜுன் நடித்துள்ளார். அர்ஜுனின் தந்தையாக விஷாலின் தந்தை G.K.ரெட்டி நடித்துள்ளார். வாகன விபத்து நிகழும் இடத்திற்குச் செல்லும் அர்ஜுனால், விபத்தா, கொலையா என யூகிக்க முடியாதவராக உள்ளார். அனுபவம் மிக்கவராகக் காட்ட வேண்டிய நாயகனை. அத்தனை மெத்தனமாகக் காட்டியுள்ளனர் படத்தில். க்ளைமேக்ஸில்தான் உண்மை தெரியவேண்டுமென திரைக்கதையின் இழுப்பிற்கு வளைந்து கொடுத்து ஓடிக் கொண்டே உள்ளார் அர்ஜுன். சண்டைக் காட்சிகளும் ஆக்ஷன் கிங்கிற்கான தரத்திற்குத் தக்கவாறு இல்லை.

படத்திற்கு மிக அழகான தலைப்பைச் சூட்டி அசர வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன். ஆனால் பிரச்சனை என்னவென்றால், படத்தில் தீயவர்கள் குலை நடுங்குவதில்லை. வழக்கமான வில்லன்கள் போல், குற்றம் இழைத்துவிட்டு மிக அலட்சியமாகவே க்ளைமேக்ஸ் வரையிலுமே திரிகின்றனர். படத்தின் முடிவில், பார்வையாளர்களுக்கு ஒரு ட்விஸ்ட் கொடுக்கவேண்டுமென நினைத்து, அதிகாரம் மிக்க வில்லனாகக் காட்டப்படுபவர், ஒரு பாலியல் குற்றவாளியின் கட்டளைக்கு அடிபணிபவராகக் காட்டிக் கதாபாத்திர வார்ப்பை மிகவும் மெத்தனமாகக் கையாண்டுள்ளார் இயக்குநர்.