கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
கங்காதரராக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். படத்தின் அசுவராசியத்திற்குக் காரணம், கங்காதரர் போல் முழுமை பெறாத கதாபாத்திரங்களே காரணமாகும். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜித்தன் ரமேஷைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது, திரைக்கதையின் பலவீனத்துக்கு அச்சாரம் இட்டுள்ளது. ‘அண்ணாமலையாரே!’ என விளிக்கும் பூமர் எனும் சின்னஞ்சிறு கதாபாத்திரத்தில் வரும் பவா செல்லதுரை ரசிக்க வைக்கிறார். பேரின்பமாக நடித்திருக்கும் வாகை சந்திரசேகர், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத நாயகனின் ஓட்டுநராக வந்து போகிறார். அனு இம்மானுவேல் கதாபாத்திரம் பாடலுக்கும் கவர்ச்சிக்கும் மட்டும் பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். அதுவும், நினைத்த இடங்களிலெல்லாம் எந்த நோக்கமும் இலக்குமின்றிப் பாடல்கள் வருகின்றன.
அசகாய திருடன் என நாயகன் ஜப்பானைப் பற்றித் தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்கள் ஒரு பக்கம் புகழ்ந்து கொண்டிருக்க, நாயகனோ, சஞ்சு குட்டி எனும் அனு இம்மானுவலைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதும் தேடப்படும் குற்றவாளியான ஜப்பான், எந்தவித முன்னெச்சரிக்கையோ, பரபரப்போ இல்லாமல் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் அசால்ட்டாக அணுகும் ஜப்பானின் மனப்பாங்கினை (Attitude) ஹீரோயிசமாகக் கட்டமைத்துள்ளனர். ஆனால், படத்தில் அதற்கான தருணங்கள் (Moments) அமைக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
கழிவில் வீசப்படும் சின்னஞ்சிறு நகைத் துகள்களை அலசி, அதைச் சேகரிக்கும் தொழில் செய்பவரின் கதாபாத்திரம் முழுமையடைந்து, படத்தின் முடிவைக் கனக்க வைக்கிறது. ஆனால் அப்புள்ளியைச் சென்றடையும் பாதையைச் சகித்துக் கொள்ள பொறுமை அதிகமாகத் தேவைப்படுகிறது.