Shadow

தி ஸ்மைல் மேன் விமர்சனம்

சரத்குமாரின் 150 ஆவது படமாகுமிது.

கொல்பவர்களின் மேலுதட்டையும், கீ்ழ் உதட்டையும் அறுத்து நீக்கி, அவர்களது பல்வரிசை தெரியும்படி முகத்தைச் சிதைத்து, பொது இடத்தில் வீசி விட்டுச் செல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அக்கொலைகாரனால் விபத்துக்குள்ளாகும் காவல்துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ‘தி ஸ்மைல் மேன்’ எனும் கொலைகாரனைப் பிடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார். யாரந்த ஸ்மைல் மேன், எப்படி அவன் சிக்கினான் என்பதுதான் படத்தின் முடிவு.

மாலாக்கா கதாபாத்திரத்தின் மூலம் றெக்க (2016) படத்தைக் காப்பாற்றிய ஷிஜா ரோஸ், இப்படத்தில் புலனாய்வு செய்யும் அதிகாரி கீர்த்தனாவாகத் தோன்றியுள்ளார். கதைக்கோ, கதைக்குள் நடக்கும் புலனாய்வுக்கோ அவர் உதவாவிட்டாலும், அவரது இருப்பு (presence) படத்திற்கு அழகைச் சேர்த்துள்ளது. ராஜ்குமார் ஏற்றிருக்கும் பிச்சுமணி எனும் கதாபாத்திரம் நகைச்சுவைக்குக் கடைசி வரை முயற்சி மட்டுமே செய்கிறது. ஓய்வு பெறும் போது நற்பெயருடன் இருக்கவேண்டுமெனச் சொதப்பும் கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடித்துள்ளார். அவரது மகன் அரவிந்தாக நடித்துள்ள ஸ்ரீ குமார் கதாபாத்திரத்தைச் சுவாரசியப்படுத்தத் தவறியுள்ளனர். குமாஸ்தாவாக வரும் ஜார்ஜ் மரியான் வழக்கம் போல் அவரது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார்.

மறதி நோயால் பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரி சிதம்பரம் நெடுமாறனாகச் சரத்குமார் நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு ஏற்றவாறு மிக அநாயாசமாக நடித்துள்ளார். மறதி நோயால் (Alzheimer’s) ஏற்படும் குழப்பத்தை அழகாகத் தன் முகத்தில் கொண்டு வந்துள்ளார். ஆனால் அடிக்கடி பார்க்கிண்ஸன்’ஸ் நோய் வந்தவர் போல் தடுமாறத் தொடங்குகிறார். கதாபாத்திர வடிவமைப்பில் மெனக்கெடல் போதிய அளவு இல்லாமல் நுனிப்புல் மேய்ந்தாற்போல் திருப்திப்பட்டுக் கொண்டுள்ளனர். கொலை செய்வதை விட்டுவிட்ட சைக்கோ கொலைகாரனை மீண்டும் வர வைக்க சாமர்த்தியமாகத் திட்டமிடுகிறார் சரத்குமார். ஆனால் அதற்கு ஒர்த்தான ஆளாக சைக்கோ கொலைகாரன் வடிவமைக்கப்படாததால், இரண்டு மணி நேரப்படம் நான்கு மணி நேரமாக நீண்து போல் அயற்சியைத் தருகிறது.

சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தே ஆகவேண்டுமெனப் பார்வையாளர்களை நினைக்க வைக்காதது திரைக்கதையின் பலவீனத்தைச் சுட்டுகிறது. இரட்டை இயக்குநர்களான ஷ்யாம் – ப்ரவீனின் முதற்படமான மெமரீஸ் ஒப்பீட்டளவில் இப்படத்தை விட மிகச் சிக்கலான கதையைக் கொண்டதாகும். எழுத்தாளர் விபின் கிருஷ்ணாவின் உதவியோடு அப்படத்தின் திரைக்கதையை எந்தச் சமரசமில்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும். சிலந்தி வலை, பூச்சி என குறியீடாகவும் கதையை விஷூவலாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், சுவாரசியமான கதைக்கரு கொண்ட இப்படத்தின் திரைக்கதையோ மேலோட்டமாக எழுதப்பட்டுள்ளது. படத்தைக் காப்பாற்றும் பொறுப்பைச் சரத்குமாரிடம் இயக்குநர்கள் ஒப்படைத்துவிடுகின்றனர். அவர்களது நம்பிக்கையைப் பொய்க்காமல் பார்த்துக் கொள்கிறது சரத்குமாரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு.