

காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்பதற்காக வேண்டுமென்றே தனது தந்தையைத் கொன்றதாக அறிந்து கொள்கிறான் அமரன். அமரன், சுடப்பட்ட சக்திவேலை நேபாளத்தின் பனிப் பள்ளத்தாக்குகளில் தள்ளிவிடுகிறான். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பும் அஞ்சானான சக்திவேல் ரங்கராயன் துரோகிகளைப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.
காட்சிப்படுத்தியதிலிருந்த அதீத தொழில்நுட்ப மெனக்கெடல், திரைக்கதை அமைத்ததில் சுத்தமாக இல்லை. கதை என்ற வஸ்து உணர்ச்சிகரமான திரைக்கதையாக மாறாமல், வசன நகர்வுகளாக உள்ளன. கதையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கவேண்டிய அனைத்துப் புள்ளிகளும் வசனங்களாகச் சொல்லப்படுகின்றன. நாசர் சொல்லும் ஒரு வசனம், கமலுக்கு எதிராகத் திரும்ப சிலம்பரசன்க்குப் போதுமானதாக இருக்கிறது. “ஏன்?” என்ற கேள்வியை, இந்தப் படத்தில் மணிரத்னத்தின் எந்த கதாபாத்திரமும் கேட்பதில்லை. வாட்ஸ்-அப் வதந்திகளை உண்மையென நம்பி, அதை க்ராஸ்-செக் செய்யாத ஆபத்தான அவசர அப்பாவிகளாக உள்ளனர் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள். ஆனால் வசனங்களில் மட்டும், நிதானமாக முடிவெடுக்கும் 16 அடி, 18 அடி பாய்ச்சல் கொண்டவர் என வெற்றுப் பெருமை பேசப்படுகிறது.
தன்னை ஒருவன் ஏமாற்றிவிட்டான் என நாசரின் மகள் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. டெல்லியில் வசிக்கும், அதிகாரவர்க்கத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் மனநிலையைக் கட்டுப்பெட்டித்தனமாகச் சித்தரித்துள்ளார் மணிரத்னம். நாயகனில் கமிஷ்ணர் ராகவனின் மகளுக்கு நடக்கும் அநியாயத்திற்கு எதிராக நீதியை நிலைநாட்டுவார் கமல். இங்கே, மனமொத்து உறவில் ஈடுபட்ட ஒரு நவீன பெண்ணைப் பலவீனமான மனம் கொண்டவளாக வளர்த்த கமலோ, நாசரோ, அதற்காக வருந்தாமல், “நீ குடிச்சுட்டு பிளாட்ஃபார்ம்ல வண்டிய ஏத்தினதான?” என ஏதேதோ காரணங்கள் தேடி ஓர் இளைஞனைக் கொல்கின்றனர். பார்வையாளர்களுக்குத் தப்பித் தவறி கூட எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாதென்று தீர்மானத்தோடு திரைக்கதையை அணுகியுள்ளனர் போலும். மேல்தட்டு வர்க்கத்து மனநிலையையும் படத்தில் புறந்தள்ளிவிட்டு, எந்த வர்க்கத்து மனநிலையையும் பிரதிபலிக்காத, புது மாதிரியான குழப்பமான மனநிலை வாய்த்த கதாபாத்திரங்களால் நிரம்பியுள்ளது தக் லைஃப்.
முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன், நாயகனில் மிகக் குறைவாகப் பேசினார் நாயக்கர். இந்தப் படத்து ரங்கராய சக்திவேலரோ, தனது சந்தேகப் புத்திக்கு டெல்லி மண்ணின் சாபம்தான் காரணமென வரலாற்றுச் சால்ஜாப்பு சொல்கிறார். ரசிக்கக் கூடிய வசனமாக அது இருந்தாலும், அவ்வளவு வரலாற்றுக் கூறு உள்ள அனுபவமிக்க டான் இந்திராணியுடனான சம்போகத்தில் காட்டும் ஆர்வத்தில், ஒரு காலரைக்காலின் (1/16) வீசம் (1/4) கூட, அதாவது 1/64 அளவு கூடச் சுதாரிப்பாக இல்லாமல் இருக்கிறார். குறைந்தபட்சம் கொலை முயற்சி செய்யப்பட்டு விபத்துள்ளாகி மருத்துவமனையில் படுத்துக் கிடந்த பின்பாவது, அவரது அனுபவம் அவருக்கு அரணாகியிருக்கவேண்டும். ம்ஹூம்..
சதானந்தாக நடித்திருக்கும் மகேஷ் மஞ்சுரேக்கர், ஜீவாவாக நடித்திருக்கும் அபிராமி இருவரது கதாபாத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்துப் பாத்திரங்களுமே அரைகுறையாகத்தான் உள்ளன. பகவதி பெருமாள், முதலில் ஜோஜு ஜார்ஜை ஏத்திவிடுகிறார்; பின் நாசரை ஏற்றிவிடும்பொழுது, ஜோஜு ஜார்ஜ் பக்ஸைக் கண்டிக்கிறார். ஓஹோ, கேரளத்து ஜோஜு ஆசானின் விசுவாசி போல என நினைத்தால், ஜோஜு ஜார்ஜே சிலம்பரசனை ஏற்றி விடுகிறார். ஜோஜுக்கு சக்திவேல் மீது என்ன வருத்தம் என்றே தெரியவில்லை. நாசருக்குள் இருக்கும் பிசாசு, அவரைத் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட வைக்கிறது. ஆனால் கோவாவில் கேசினோ ஓனராகத் தஞ்சமடைந்து சிலம்பரசனின் தலைமையை ஏற்றுக் கோள்கிறார். “டெல்லி உனக்கு; கோவா எனக்கு” என தம்பியான கமல் கூடவே டீல் போட்டிருக்கலாம் நாசர். கமலைக் கொன்றால்தான் கதை நகரும் என்ற ஒரே காரணத்திற்காகத் தானுண்டு, த்ரிஷா உண்டு, அபிராமி உண்டு என யார் வம்பு தும்புக்கும் போகாத கமலை எந்தக் காரணமுமின்றிக் கொல்கின்றனர்.
அப்பாவியென்பதால் இயற்கை கமலைக் காப்பாற்றி விடுகிறது. தானொரு டான் என்பதையே மறந்து, மிக அப்பாவியாக, ‘எனக்கு மடத்தில் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்தாங்க’ என்கிறார். பாவம் அதற்கு முன் சண்டையே போடத் தெரியாத டானாக இருந்திருப்பாராட்டிருக்கு. இரண்டாம் பாதியில் வரும் சண்டைக் காட்சிகளை ரசிக்கும்படி அமைத்துள்ளனர் அன்பறிவ். க்ளைமேக்ஸ் சண்டையின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். பார்வையாளர்களைப் படத்தோடு பிணைக்க மிகவும் தடுமாறுகிறது ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு. முதற்பாதியை சிலம்பரசனும், இரண்டாம் பாதியைக் கமலும் சுமக்கின்றனர். ரவி K. சந்திரனின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்தை ரசிக்க முடிவதற்கான காரணமாகின்றன. ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடலும், இளவயது AI சிலம்பரசன் வரும் காட்சிகளும் படத்தின் உயிர்ப்பைத் தக்கவைக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.
தற்போதைய ட்ரெண்ட் என்பது படங்களில் ஃபேன்பாய் மொமன்ட்டைக் கொண்டு வருவது. அந்த ட்ரெண்ட்க்கு உட்பட்டு, தங்கள் படங்களுக்கே ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் காட்சிகளை வைத்துக் கொண்டுள்ளனர். அக்னி நட்சத்திரத்தில் மருத்துவமனை காட்சியில் இரண்டு நாயகர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது போல் அசோக் செல்வனும், சிலம்பரசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்; புன்னகை மன்னனில் மலையில் இருந்து விழும் காட்சி; நாயகனில் இரட்டை ஜடை சரண்யா பொன்வண்ணனைச் சந்திக்கும் கமலை நினைவுறுத்தும் த்ரிஷாவின் அறிமுகம்; ஆளவந்தான் க்ளைமேக்ஸில் மாடி மேல் நடக்கும் சண்டை; ராவணனில் ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததும் விக்ரமுக்குக் காதல் வருவது போல் த்ரிஷா மீது சிலம்பரசனின் காதல் என சளைக்கச் சளைக்க செல்ஃப்-ஃபேன் மொமன்ட்களில் மூழ்கியுள்ளனர் கமலும் மணிரத்னமும்.


