Shadow

வேதா விமர்சனம்

“சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?” – கல்லூரி மாணவி வேதா.

“அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு” – வேதாவின் அக்கா.

“அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?”

ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். அதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர்.

வேதாவின் அண்ணன் மேல் சாதிப்பெண்ணைக் காதலித்து விட, பிரச்சனை பெரியய்யாவிடம் போகிறது. அசிங்கப்படுத்தி மிரட்டி அனுப்புகிறார், வேதாவின் அண்ணனோ காதலியுடன் வெளியேறிவிடுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறேன் என வரவழைத்து, வேதாவின் அக்காவை, அண்ணனை, அண்ணன் காதலியைக் கொன்று விடுகிறார். வேதா தப்பித்து, இராணுவத்தில் இருந்து கோர்ட் மார்ஷல் செய்யப்பட்ட அபிமன்யுவிடம் அடைக்கலம் புகுகிறாள். மேற்கு ராஜஸ்தானின் ஒரு மாவட்டமே, இவர்களைத் துரத்த, வேதா உயிர் தப்பினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஓர் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உறவினர்களாக இல்லாத ஜாட் இனத்தைச் சேர்ந்த மனோஜும், பாப்லியும் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறிக் கல்யாணம் செய்து கொள்கின்றனர். ஜாட் இனத்துக்குள் கல்யாணம் செய்து கொண்டால், அது அண்ணன் – தங்கை கல்யாணம் செய்து கொள்வது போல் தகாத திருமணம் என்பது ஜாட் இனத்தின் நம்பிக்கை. ஆகையால், காப் பஞ்சாயது (Khap Panchayat) ஒன்று கூடி, மனோஜ் – பாப்லியைக் கொல்ல தீர்மானிக்கிறது. அந்த இணை, பாதுகாப்பிற்காக நிதிமன்றத்தை நாடுகிறது. அவர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவைப் பொருட்படுத்தாமல் கைவிடுகிறது போலீஸ். இருவரும் ஆணவ படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்படவே இல்லை, அது மீடியாவின் பொய்ப் பிரச்சாரம் என போலீஸ் நீதிமன்றத்தில் சொல்கிறது. ஒருவழியாக வழக்கு முடிந்து குற்றவாளியைக் கைது செய்யச் சொன்னால், ‘அப்படி கைது செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்’ என நீதிமன்றத்தையே போலீஸ்காரர் அதிர வைக்கிறார். வட மாநிலங்களின் சாதிய கட்டமைப்பும், அதைக் காப்பாற்றும் காப் பஞ்சாயத்தும் அத்தனை வலிமையானது.

மேஜர் அபிமன்யுவாக ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார். இப்படத்தை ஓர் ஆக்ஷன் படமாக மாற்றி விடுகிறார். தனது மனைவி ராஷியை ஒரு தீவிரவாதி கொன்றுவிட, அவனைப் பழிவாங்கி கோர்ட் மார்ஷல் செய்யப்படுகிறார். ராஷியாகத் தமன்னா கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஒரு மாவட்டத்தில் உள்ள அத்தனை பேரும் துரத்த, வேதாவைத் தனியொருவராகக் காப்பாற்றுகிறார். அதிலும் உச்சகட்டமாக க்ளைமேக்ஸில், வேதாவை நீதிபதிகளிடம் சென்றடைய விடாமல் தடுக்க, நீதிமன்றத்துக்குள்ளேயே நுழைந்து சராமரியாகச் சுடுகின்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள். ‘இதெல்லாம் சாத்தியமா? ரொம்ப ஹைப்பரா இருக்கே!’ என்ற எரிச்சலைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் எதார்த்தத்தில் போலீஸால் குற்றவாளியைக் கைது செய்யமுடியாது என நீதிமன்றத்திலேயே சொல்ல முடிகிறது என்றால், இதுவும் சாத்தியமே! கொலை செய்வதைப் பெருமையாகவும் வீரமாகவும் நினைக்கும் புரையேறிய மச்க்கள், நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து வெறியாட்டம் ஆடமாட்டார்களா என்ன? எனினும் மைண்ட்-லெஸ் ஆக்ஷன் படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது.

பெரியய்யா எனும் ஜிதேந்தர் பிரதாப் சிங்காக அபிஷேக் பேனர்ஜி நடித்துள்ளார். சாதிப்பெருமை எனும் தடித்தனத்தை அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ‘சொர்க்கத்தின் விதிகளை மறுக்க எந்த நீதிபதி துணிவான்?’ என்பதில் அத்தனை உறுதியாக இருக்கிறார். அடியாட்களை விட போலீஸ்காரர்கள் அவருக்கு அத்தனை விசுவாசமாக உள்ளனர். சமூகத்தைச் சுற்றி வளைத்திருக்கும் சாதி அமைப்பெனும் சக்கர வியூகத்தைக் காக்க அதிகாரமும், பணபலமும் கைகோர்ப்பதை விட பெரிய சமூக ஆபத்து வேறொன்றில்லை. அந்த வியூகத்தை உடைப்பவராக நாயகனுக்கு அபிமன்யு எனக் காரணப்பெயரைச் சூட்டியுள்ளார். ‘உங்கப்பாம்மா உனக்குத் தோற்றவனின் பெயரை வச்சிருக்காங்க. இங்க எதையும் மாத்தமுடியாது’ என்கிறான் நாயகனிடம் பெரியய்யா.

வேதாவாக ஷர்வரி நடித்துள்ளார். படத்தைத் தனியொருவராகச் சுமக்கிறார். அழகான முக பாவனைகளால் படத்திற்கு ஓர் அழகைத் தருகிறார். எப்படியாவது பாக்ஸிங் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற அவரது ஆசையும், அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் ரசிக்க வைக்கின்றன. க்ளைமேக்ஸில், ‘என் வழக்கை எடுத்துக்கோங்க. தலித்தாகப் பிறந்தது என் தவறா?’ என நீதிமன்றத்தில் மன்றாடும் பொழுது மனதைக் கனக்க வைக்கிறார்.

நாயகன் வேதாவிற்கு உதவினாலும், சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அதை நோக்கிச் செல்லும் துணிவுள்ளவராக வேதா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நிகில் அத்வானி. நாயகனின் தோளுக்குப் பின் பதுங்கிக் கொள்பவராக அன்றி, வெற்றியோ, தோல்வியோ நியாயத்திற்காகப் போராடிப் பார்ப்பது என நாயகியின் தனித்தன்மை கெடாமல் சென்ஸிபிளாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். ஆனால், இந்தக் கனமிக்க கதையை ஆக்ஷன் காட்சிகள் நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது.