Shadow

தங்கலான் விமர்சனம்

சார்பட்டா பரம்பரையின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ் பிரபாவும், பா. ரஞ்சித்தும் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே பார்வையாளர்களிடம் நிலவியது. ‘மாய எதார்த்தம் (Magical Realism)’ வகைமையைச் சேர்ந்த படம் என இசை வெளியீட்டின் போது, எதிர்பார்ப்பில் எண்ணெயை ஊற்றினார் தமிழ் பிரபா.

அத்தனைக்கும் ஆசைப்படு என்கிற ஜக்கி வாசுதேவின் புத்தகத் தலைப்புதான், தங்கலான் படத்தின் மையச்சரடு. நாடாளும் மன்னன், ஆங்கிலப் பேரரசின் அதிகாரி, எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அத்தனை பேரும் தங்கத்திற்கு ஆசைப்படுகின்றனர். நாயகனோ நிலத்திற்கு ஆசைப்படுகிறான். தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது.

“எங்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி, பிரம்மதேயம் எனும் பெயரில் பிராமணர்களுக்குக் கொடுத்த விவசாய நிலம் மீண்டும் வேண்டும்” என்கிறது ஒரு நாயக கதாபாத்திரம். “தங்க பூமியின் காப்பாளர்களைக் கைது செய்து குடியானவர்களாக மாற்றிவிட்டார்கள். நான் உண்மையில் தங்க நிலத்தின் பாதுகாவலன்” என்கிறது அதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நாயக கதாபாத்திரம். இரண்டில் ஒன்றுக்குத்தான் சாத்தியக்கூறு உண்டு. கிடைக்கும் இடத்திலெல்லாம் அரசியல் பேசிவிட வேண்டுமென்ற இயக்குநரின் பேராசையுமே, படத்தின் கதைக்களத்தில் எத்தகைய அரசியலும் இல்லாததுமே இந்த முரணுக்குக் காரணம். கோலார் தங்க வயல்களில் தமிழர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள் என்ற பொதுத் தரவைத் துறந்து, நாகர்களே தங்கப்பாதுகாவலர்கள் எனப் பயணிக்கிறது கதை. படத்தில் வில்லன் இல்லை; ஆதலால் அழுத்தமான எதிர் அரசியலும் இல்லை. தங்கலான், காடையன், ஆரண், ஆதி முனி, நாக முனி என ஏகப்பட்ட நாயகன்கள் உண்டு. அவர்கள் அனைவரும், புதிய நம்பிக்கைகளை வரித்துக் கொண்டு, மூர்க்கமாகத் தங்கள் அகத்துடனே முரண்பட்டு உழன்று கொண்டுள்ளார்கள்.

வரலாற்றில் தான் யார் என்ற தேடலையே, தன் படைப்பின் நாயக பிம்பங்கள் மூலம் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருப்பதாக ரஞ்சித் சொல்கிறார். தங்கலானும் தான் யார் என்பதைத் தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறான். விவசாயம் செய்யும் பொழுது தன்னையொரு பூர்வகுடி விவசாயியாக நம்புகிறான். தான் நம்புவதையே வரலாறு எனவும் கருதுகிறான், தன் மக்களிடமும் அதையே திணிக்கிறான். நிலத்தை வாங்க தங்கம் வேண்டும், அதற்காக நம்மை அடிமையாக்கும் ஆண்டையை விட நம்மை மதிக்கும் வெள்ளைக்காரனிடம் வேலை செய்வது மேல் என்கிறான். அந்த ஒவ்வொரு வார்த்தையும், பி.எச். டேனியலின் ‘ரெட் டீ‘ நாவலில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆள் பிடிக்க கங்காணி உபயோகிக்கும் அதே தூண்டில். தான் நம்பும் ஒன்றிற்காக, நா வறளப் பேசிப் பேசி, அலேக்காக மக்களின் மனதை திசைதிருப்பி இட்டுச் செல்கிறான் நாயகன்.

பெற்ற மகன்க்கு சித்த பிரமை பிடித்தாட்டும் பொழுதும் சரி, வெள்ளையனின் சதி அப்பட்டமாய்த் தெரிந்த பின்பும் சரி, தங்கம் தான் மீட்சி (நாயகன் வரித்துக் கொள்ளும் பிடிவாதம்/ நம்பிக்கை) எனப் பேசிப் பேசி மக்களை நம்ப வைக்கிறான். அடுத்த வரும் வரி ஸ்பாய்லர் என்பதால், படம் பார்க்காதவர்கள் தவிர்க்கவும். இறுதியில் தானே தங்கத்தின் பாதுகாவலன் என தலைவன் ஆகிவிடுகிறான் (நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சர்வ நிச்சயமாய் சினிமா விமர்சனமே!)

Mackenna’s Gold, Apocalypto, Django Unchained, The Revenant, ஜல்லிக்கட்டு (மலையாளம்), காந்தாரா (கன்னடம்) போன்ற படங்களை நினைவுறுத்துகிறது தங்கலான். அந்தந்தப் படங்களின் சிறந்த தருணங்களை எடுத்தாண்டுள்ளார் ரஞ்சித். ஆனால், இந்தத் திரைக்கதையில் அது இயல்பானதாகப் பொருந்திப் போகாமல் துண்டாய்த் துருத்தி நிற்கின்றது.

படத்தின் அதி அற்புதமான கதாபாத்திரம் சூனியக்காரி ஆரத்தியே ஆகும். தொன்மக்கதையியலின் பாட்டுடை நாயகியாக, படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை அளித்துள்ளார். காந்தாராவில், வராஹ ரூபத்தில் நாயகனைத் தடுத்தாட்கொள்ளும் பஞ்சுருளி போல், ஆரத்தி தலைமுறை தலைமுறையாக நாயகனின் உட்குரலாகத் தோன்றி உண்மையை உணர்த்த முனைகிறார். காலனின் வாகனத்து மேல் தூவப்பட்ட முகிலின் நீர்த்துளிகள் கதையாய், ஒன்றுக்கும் மசிகிறார் இல்லை நாயகன். மசியாதது மட்டுமில்லை, தப்பாமல் ஒவ்வொரு முறையும் ஆரத்தியைை பலியிடவும் செய்கிறார். மாறாக ஆரத்தியின் உதிரத்தில் நனைந்து தங்கமாய் மினுக்கும் பொழுது கூட, மனம் பதறாமல் தங்கத்தின் மீது கவனமாக உள்ளான். பாவப்பட்ட ஆரத்தியின் கதை, தொன்மவியலில் செவ்வியல்தன்மை மிக்க துன்பவியல் கதாபாத்திரமாக மனதைக் கனக்கச் செய்கிறார். நாயகன், ஆரத்திக்கு ஏமாற்றத்தை ஒருமுறை இருமுறை அல்ல, 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு வரை அளிக்கிறான் நாயகன். போதாக்குறைக்கு ஒரு தேர்ந்த வழிகாட்டியாக மாறி, தங்க பூமியையும் காட்டிக் கொடுத்து விடுகிறான். உண்மையில் தங்கலான் ஆகப்பட்டவர், இதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத அதி பயங்கரமான வில்லனாவர்.

படத்தின் மிகப்பெரிய குறைபாடு அதன் விஷுவல்கள்*. அநியாயத்திற்கு அலைக்கழிக்கிறது. மிகுந்த சிரமத்திற்கிடையே என்ன நடக்கிறதெனக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. விஷுவல்ஸே பரவாயில்லை எனுமளவுக்கு, வசனத்தை உன்னிப்பாகக் கேட்க வேண்டியுள்ளது (லைவ் சவுண்ட் ரெக்கார்டிங்). தங்கலான் தலைமை தாங்கும் பூர்வகுடிகள் யார், ஆரத்தி தலைமை தாங்கும் நாகர்கள் யார், யார் யாருடன் சண்டை போடுகிறார்கள் என்பதைக் குத்துமதிப்பாக யூகித்தறிய வேண்டியுள்ளது. நல்ல ஒளி-ஒலி வசதியமைப்பில்லாத் திரையரங்கத்தில் பார்த்தவர்கள் நிலைமையோ அதோகதிதான் (*இங்கே, விஷுவல் என்ற சொற்பிரயோகம் ஒளிப்பதிவைக் குறிப்பதன்று. ஒட்டுமொத்தமாக, DI, Colouring, VFX, Edit Pattern என எல்லாம் கலந்து திரையில் வரும் presentation-ஐப் பற்றியது.)

ரஞ்சித் படத்தில், பிரதான கதாபாத்திரங்களுக்கிடையே இடையே ஒரு ரொமான்ஸ் இழையோடும். ஆனால், இப்படத்தில் விக்ரம்க்குக் கொடுத்து வைக்கவில்லை. வரதனாக நடித்திருக்கும் மெட்ராஸ் ஹரிக்கும், அரசனியாக நடித்துள்ள ப்ரீத்தி கரனுக்கும் அவ்வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பினை நிறைவாய் உபயோகித்துக் கொண்டுள்ளார்கள். விக்ரமும், பார்வதி திருவோத்தும் கதாபாத்திரங்களாகக் கலக்கியுள்ளனர், ஆனால் ரஞ்சித் படத்துக்கே உரிய அழகிய ரொமான்ஸ் வரதன் – அரசனி அளவில்லாமல் மிஸ்ஸிங். இடைவேளைக்குப் பிறகு தொடங்கித் தொடரும் காட்சி, இருண்மையை விரட்டோடச் செய்யும் தெய்வீக ஒளி போல் பளீச்சிடுகிறது. அதற்கு மகுடம் வைத்தாற்போல், ‘மினுக்கி மினுக்கி மேனாமினுக்கி’ பாடல் கொண்டாடத்திற்குரிய தருணத்தை உருவாக்குகிறது. அப்பாடல் முடிந்ததுமே, படம் பொலிவிழந்து இருண்மைக்குள் மீண்டும் சிக்கிக் கொள்கிறது. ஆங்காங்கே பசுபதி ஒளிக்கீற்றாய், தன் வசன உச்சரிப்பாலும், கதாபாத்திர வடிவமைப்பாலும் ஈர்க்கிறார்.

படத்தில் இரண்டு அசுரன்கள் உள்ளனர். ஒன்று, இசையரக்கன் ஜிவி பிரகாஷ் குமார்; இரண்டு, தன்னை மெய்வருத்திக் கொண்டு கதாபாத்திரமாய் உருபெறும் நடிப்பரக்கன் விக்ரம். படத்தின் அலைக்கழிப்பைப் பொறுத்துக் கொள்ள முடிவதற்கு இவர்கள் இருவரின் அட்டகாசமான பங்களிப்பு மட்டுமே காரணம்.

– (நட்சத்திரம் நகர்கிறது படத்தைச் சிலாகித்து எழுதியவர்)