Shadow

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

‘உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு. 

இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் சேதுபதியாக வளர்ந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்கிறார். தனது அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் மகிழ் திருமேனி விஜய்சேதுபதியைக் கொல்ல வேண்டும் என அலைகிறார். இப்படி அலைபாயும் கதையின் இலக்கு என்ன என்பதை 2 மணி நேரம் 26 நிமிடங்களில் சொல்கிறது படம்.

நாம் பார்த்துப் பழகிய அதே விஜய்சேதுபதி. கொஞ்சம் ‘96 ஸ்டைலில் அமைதியாகப் பேசுகிறார். அதுவே அகதியின் உடல்மொழியைக் கொண்டு வந்துவிடும் என நம்பியிருக்கிறார். மேகா ஆகாஷின் பாத்திரம் வெறும் ஆர்வக் கோளாறாகவே மனதில் பதிகிறது. துடிப்பாக வரும் மகிழ் திருமேனி கேரக்டரும் ஸ்ட்ராங்காக நிறுவப்படாததால் அவரின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. மறைந்த நடிகர் விவேக் ஆங்காங்கே கவனிக்க வைக்கிறார். இதர படமாந்தர்கள் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி நடித்துள்ளனர். விஜய்சேதுபதி அக்காவாக நடித்துள்ள பெண்மணி மட்டுமே உயிர்ப்பான அகதியாக மனதில் பதிகிறார்.

கதையில் உள்ள நல்ல கருத்தை உள்வாங்கி உணர்வுபூர்வமான இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் K. பிரசன்னா. பாடல்களும் கவர்கின்றன. ஒளிப்பதிவாளர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியின் லைட்டிங் மட்டும் செயற்கைத் தனமாக தெரிந்தது.

நாடற்ற அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி, அவர்களும் நாடுள்ள மனிதர்களாக கருதப்பட்டால் தான், அவர்களின் திறமைகள் உலகுக்குத் தெரியவரும் என்று சொல்கிறது படம். சொல்லியிருக்கும் செய்தியில் இருக்கும் கனம், அதைச் சொன்ன விதத்தில் வெளிப்படவில்லை. திரைமொழியில் அதீத கவனம் செலுத்திs செதுக்கப்பட்டிருந்தால், தமிழில் மிக முக்கியமான சினிமாவாக வந்திருக்கும்.

– ஜெகன் கவிராஜ்