Shadow

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, இப்பொழுது புறவயமான அம்சமாகவே பெரும்பாலும் மாறிவிட்டது.

அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ படம். போகியுடன் ‘சிச்சுவேஷன்ஷிப் (Situationship)’-இல் இருக்கும் சாம் எனும் பெண், கே எனும் ஆணுடன் சிச்சுவேஷன்ஷிப்பில் இணைகிறார். பார்க்கும் கணத்தில், கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல், எமோஷனலாக அணுகாமல் உடலின்பத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உறவு (Sex) வைத்துக் கொண்டு பிரிவதற்குப் பெயர் சிச்சுவேஷன்ஷிப் எனப் பெயர். சிச்சுவேஷன்ஷிப்பாகத் தொடங்கும் சாம், கே தொடர்பு, ரிலேஷன்ஷிப்பாக மாறுகிறது. உடலின்பம் மட்டுமே நோக்கமாக இல்லாமல், அதில் கொஞ்சம் ரொமான்ஸும், தக்கினியூண்டு காதலும் கலந்தால், அதற்கு ரிலேஷன்ஷிப் எனப் பெயர். ரிலேஷன்ஷிப்பிலுள்ள வசதி, ஊடல் வந்தால் பிரேக்-அப் (உறவு பிரிவு) சொல்லிப் பிரிந்துவிடலாம். தக்கினியூண்டு காதலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ரிலேஷன்ஷிப்பின் கால அளவு என்பது சொற்பமே!

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

காமத்தினை விட உச்சபட்ச இன்பம் தருவது எதுவென திருவள்ளுவர் அழகாகச் சொல்லியுள்ளார். அந்த அனுபவத்தைப் பெற விரும்பாத ஓர் அவசர தலைமுறையினரின் பிரதிநிதிகளாகவே சாமும், கேவும் உள்ளனர். ஆனால், வாழ்க்கை அவர்களுக்கு ஒரு மறு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. கேவின் நினைவடுக்கில் பிரச்சனை ஏற்பட்டு, அவருக்கு ரிலேஷன்ஷிப்பிற்குள் சென்றது மட்டும் நினைவில் நிற்க, பிரேக்-அப் ஆனதை மறந்துவிடுகிறார். ஊடலின் இன்பத்தை அனுபவிக்காவிடினும், மீண்டும் அவர்கள் இணைவதை, இம்முறை சிவப்புடன் அதிக கறுப்பு நிறம் பயன்படுத்திச் சொல்லியுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. திரையில் வரும் இளமைத் துள்ளலை விட, இளையராஜாவின் இசைத்துள்ளல் விஞ்சி தன்னெழுச்சியுடன் தனி ஆவர்த்தனம் செய்கிறது.

‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்ற தலைப்பு கவித்துவமாய் ஈர்க்கிறது என்றால், தலைப்பு போடும் பொழுது, மரத்தடியில் நிற்கும் இரண்டு மான்கள் இருக்கும் ஓவியமும் கண்ணுக்கு விருந்தாகிறது. அந்த ஓவியமும், தலைப்புமுமே எண்ணற்ற கதைகளைக் கடத்தி விடுகின்றன. மான்கள் கூட்டமாகவும், பறவைகள் தங்கள் கூட்டில் தனிக்குடும்பமாகவும் வாழும் தன்மை உடையன. பாரதிராஜாவின் இந்தப் படத்தில், ஒரு பறவைக் கூட்டில் பெண் மான் ஒன்று நுழையப் பார்க்கிறது. அந்தக் கூட்டிலுள்ள முதிர்ந்த பெண் பறவை, தனது கூடு சிதையாதவண்ணம் எப்படி பெண் மானைச் சேர்த்துக் கொள்கிறது என்பதே இந்த அத்தியாயத்தின் கதை. இந்த ஆந்தாலஜியிலேயே பாரதிராஜாவின் இந்தப் படம் மட்டுமே, மனம் முதிர்ச்சி பெற்றவர்களுக்கான கதையாக அற்புதமாக உள்ளது. திரைக்கதையாக்கம் செய்துள்ள S. பிரதீப் குமார்க்குப் பாராட்டுகள். 💐

ஆயிரம் ஜிகினா வார்த்தைகளைக் கொண்டு பாராட்டிப் பூசி மெழுகினாலும், குடும்பம் என்பது வன்முறை அமைப்பே! ஏதோ ஒரு புள்ளியில் மனம் விலகினாலோ, அல்லது வேறு எவர் மீதாவது காதல் எழுந்தாலோ, அவற்றைப் பொருட்படுத்தாது சாகும் வரை ஒற்றைத் துணையுடன் நரக வாழ்க்கை வாழ்ந்து ஆயிரம் காலத்து பயிரைக் காப்பாற்ற வேண்டுமென்ற எழுதப்படாச் சமூகவிதியைக் கேள்விக்கு உட்படுத்துகிறது படம். வம்படியாக மிரட்டி எவரது காதலையும் பெற முடியாது. எதிரில் உள்ளவரின் உணர்வுக்கு மதிப்பு தருவதும் காதலில் ஓர் அங்கமென்றாகும்போது, அவர்கள் பிரிய நினைக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதே நாகரீகம். மாடர்ன் லவ் என்ற தலைப்பிற்கு நியாயம் செய்யும் ஒரே படம் இது மட்டுமே! நாடு, குழு, இனம், குடும்பம் என்ற தற்காலிக ஏற்பாடுகளை விடத் தனி மனிதனின் சுதந்திரத்தை நோக்கி நகர்வதே நவீனத்துவம் ஆகும். அதையும் ஒரு பறவைக் கூடு சிதையாமல், பிரதான காதாபாத்திரங்கள் தங்களுக்குள் அழகாக தகவமைத்துக் கொள்ளும் ஏற்பாடு அத்தனை அழகு. 

சமையலையறை விட்டு ரேவதி, ரோஹினியை வெளியேறச் சொல்லும் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. ‘நான் உதவி செய்கிறேன்’ என்று ரோஹினி சமையலறைக்குள் வர,  அதற்கு ரேவதி, ‘இது சின்ன இடம். ரெண்டு பேர் இருக்க முடியாது’ என்று சமையலறையை மட்டும் குறிப்பிடாமல் தன் குடும்பம், தன் வாழ்க்கையும், தன் கூட்டையும் சேர்த்தே சொல்வதாகப் புரிந்து கொண்டு, ரோஹினி வெளியே வருவதாக அந்தக் காட்சி இருக்கும். என்ன தான் பக்குவத்துடன் திறந்த மனதுடன் கணவனின் காதலை அணுகினாலும், ரேவதி ஒரு மனைவியாக, கூட்டில் அடைப்பட்ட ஒரு சாதாரணப் பெண்ணாக தனக்கு இருக்கின்ற மனக்குமுறலை வெளிப்படுத்தும் விதமாக அந்தக் காட்சியை அமைத்திருப்பார் இயக்குநர். டெல்லி கணேஷின், ‘போடா’விலுள்ள வேதனையும் வருத்தமும் அத்தனை துல்லியமாய்ப் பார்வையாளர்களைப் பாதிக்கிறது.

இந்தப் படத்தை, ‘இனிய நண்பன் பாலுமகேந்திராவுக்கு’ எனச் சமர்ப்பித்துள்ளார் பாரதிராஜா. காரணம், முப்பது வருடங்களுக்கு முன் வந்த மறுபடியும் (1993) படத்தின் ஒன்லைனை எடுத்துக் கொண்டு, அப்படத்தின் கதாபாத்திரங்களையும் முடிவையும் பாசிட்டிவாக மறுஉருவாக்கம் செய்துள்ளார். அப்படத்தில் நடித்த நடிகர்களின் பெயரை, ரவி, ரேவதி, ரோஹினி (இதில் இருவர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்) என இப்படத்தின் கதாபாத்திரங்களுக்குச் சூட்டியுள்ளார். தமிழில், இது போன்ற முன்மாதிரி முயற்சி அநேகமாக இதுவே முதல்முறையாக இருக்கும். இந்த ஆன்த்தாலஜி தொடரிலேயே மிக நிறைவான முழுமையான படமாகவும், தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் வந்துள்ளது இயக்குநர் இமயத்தின் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’. 

இயக்குநர் அக்ஷய் சுந்தரின் ‘மார்கழி’ படம் பார்க்கும்பொழுது, தலைப்பிற்கேற்ப ஒரு மெல்லிய குளிரை உடலில் பரவ விடுகிறது. இளையராஜாவின் இசை, ஒளிப்பதிவாளர் விகாஸ் வாசுதேவனின் அழகான ஃப்ரேம்கள், பாலாஜி தரணீதரனின் நேர்த்தியான திரையாக்கம், அக்ஷய் சுந்தரின் கச்சிதமான படத்தொகுப்பு, சஞ்சுளா சாரதியின் பதின்ம வசீகரம் என முழுமையான ஒரு திரை அனுபவத்தைப் படம் வழங்குகிறது. பதின்ம வயதுக்கே உரிய ஓர் அழகான மையல் எழுவதன் காரணமாகப் பெற்றோர்கள் பிரிவினால் ஏற்படும் டிப்ரஷன் ஜாஸ்மினுக்கு விலகுகிறது. இத்தகைய மேஜிக் மிக அரிதாகவே நிகழும். அதுவும் 37 நிமிடங்களில் நடக்கிறது.

கிருஷ்ணகுமார் ராமகுமாரின் ‘காதல் என்பது கண்ணுல HEART இருக்கிற EMOJI’ என்ற படத்தின் கதையைத் தலைப்பிலேயே சொல்லிவிட்டார். மாடர்ன் லவ் என்பது சிச்சுவேன்ஷிப் வரை வளர்ந்துவிட்டதென தியாகராஜன் குமாரராஜா சுட்டிக் காட்ட, கிருஷ்ணகுமார் ராமகுமாரோ நாயகி ரிது வர்மாவின் விர்ஜினிட்டியைக் கல்லானாலும் கணவனுக்காகக் காப்பாற்றி வைக்கிறார். டேட்டிங் செய்ய நிர்வாணமாகக் கட்டில் வரை நாயகி சென்றதெல்லாம் கணக்கில் வராதா எனக் கேள்வி எழுப்பினால் வராதுதான். அதுவும் கட்டிலுக்கு வந்த பின், ‘கமிட்மென்ட் ஃபோபிக்கா இல்லையா?’ என இன்டர்வியூ எடுக்கும்பொழுது வரவே வராது. அப்போ நாயகி குடிப்பதாக் காட்டுவது மாடர்னிசத்தில் வராதா? அது வேலைக்குச் செல்லும் கார்ப்ரெட் ஊழியைகளின் குறைந்தபட்ச சோசியலைஸிங் ஆக்டிவிட்டி என்பதையெல்லாம் மாடர்னில் சேர்க்கமுடியாது. அதுவும், நாயகி ‘90ஸ் கிட்டாம். சினிமா காதல் போலவே வாழ்க்கை அமைய வேண்டுமெனக் கடவுளிடம் வேண்டும் லூசுப்பெண்ணை எல்லாம் மாடர்ன் லவ்வில் சேர்க்கமுடியாது. இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். எப்படிப்பட்ட கணவன் கிடைத்தாலும், அதற்கொரு தமிழ்ப்பட ரெஃபரென்ஸை எடுத்து ஒன்றுமே நடக்காதது போல் வாழ்க்கையைக் கண்டிப்பாக மல்லிகாவால் ஓட்டிவிட முடியும். படத்தின் உருப்படியான ஒரு விஷயம் என்றால், “பொண்ணுங்களுக்கு லவ் வர பாட்டு ஆயிரம் இருக்கு. ஆனா, பொண்ணுங்களுக்கான பிரேக்கப் பாட்டு ஒன்னு கூட இல்லை” என்ற வசனம் மட்டுமே. ரேஷ்மா கடாலா என்பவரால் எழுதித் திரையாக்கம் செய்யப்பட்ட படமிது. காதலுக்கோ கட்டிலுக்கோ ‘என்ன ஆளுங்க?’ என்ற கேள்வியெல்லாம் அநாவசியம். ஆனால் குடும்பம் எனும் வன்முறை அமைப்பிற்குள் ரிலேஷன்ஷிப்பை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல இந்தக் கேள்வி அவசியம். கண்ணில் ஹார்ட் இருக்கிற எமோஜிதான் காதலென நினைக்கும் கம்ஃபோர்ட் ஜோனில் வாழும் பெண்ணின் அகராதியில் கெளரவக் கொலை என்ற வார்த்தைகள் இருக்காதுதான். ஆனாலும், எமோஜிக்களில் மட்டும் மூழ்கிக் கிடக்காமல் கொஞ்சம் எதார்த்த உலகிலும் மல்லிகா கண்ணை வைக்கலாம். இந்தப் படத்திலும் ஓர் உருப்படியான விஷயம் உண்டு.

பாலாஜி சக்திவேலின் ‘இமைகள்’ மெலோடிராமாவாகப் பயணிக்கிறது. ஆனாலும் காதலுக்குப் பின்னான வாழ்வில் ஏற்படும் சங்கடங்களையும் சமரசங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். திருவள்ளுவர் அனுபவித்துச் சொன்ன ஊடலின் இன்பத்தை மட்டுமல்லாமல், மனைவிக்கு உற்ற துணைக்குத் தோள் கொடுப்பதன் அவசியத்தையும் ஆத்மார்த்த காதலையும் பேசுகிறது படம். இந்தப் படத்திற்கும் திரையாக்கம் செய்துள்ளார் பாலாஜி தரணீதரன். அசோக் செல்வனும், TJ பானுவும் மிக நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர்.

அன்றாட வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்ளும் எளிய கதாபாத்திரங்கள், ராஜு முருகனின் ‘லாலாகுண்டா பொம்மைகள்’ படத்தில் மட்டுமே வருகின்றனர். மார்கழியின் ஜாஸ்மின் தவிர்த்து, மற்ற அனைத்துப் படப்பாத்திரங்களுமே பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்கள். அதனால் காதலோ, அல்லது அப்படி நினைத்துக் கொள்ளும் கற்பிதத்தையோ தலையாய பிரச்சனையாகப் பாவிக்கிறார்கள். இப்படத்தில் வைஜெயந்தியாக வரும் வசுந்தராவும், ஷோபாவாக வரும் ஸ்ரீ கெளரி பிரியாவும் தினசரி உழைத்தே ஆகவேண்டிய பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள். கதைக்களமும், கதாமாந்தர்களும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கிறார்கள். ஆனால் கதை பேசும் அரசியல்?

பானி பூரி விற்கும் பையனின் பெயர் நாதுராம். அதாவது நைச்சியமாகப் பேசிப் பெண்களை ஏமாற்றும் வட இந்தியனாம். ஆனால், அதற்குப் பெயர் ஏமாற்றுவது இல்லை சிச்சுவேஷன்ஷிப் என்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஒருவேளை இந்தச் சலுகை எல்லாம் பணம் படைத்தோர்களுக்கு மட்டுமானதோ என்னவோ? லாலாகுண்டாவின் தலைக்கட்டாக நடித்திருக்கும் ஷண்முகம், “லாலாகுண்டாவுக்கென ஒரு மெஜஸ்டிக் இக்குது! ஏன்னா இங்க மிக்ஸிங் இல்லை” என இனத் தூய்மைவாதத்தைப் பேசுகிறார். அவரவர் இடத்திலேயே அவரவர் இருந்து கொள்வது அனைவருக்கும் நல்லது எனப் பேசும் இவருக்கு அல்லவா நாதுராம் என்ற பெயர் வைத்திருக்க வேண்டும்? பாவம், வயதுக் கோளாறில் எல்லை மீறிய அற்ப வடக்கத்திய இளைஞனைக் கழுவில் ஏற்றி அரசியல் பேசிவிட்டோம் எனப் புளங்காகிதம் அடைந்து கொள்கிறார் ராஜு முருகன். காலில் விழுந்துவிட்டால், காவி கபடதாரிக்கும் பாவமன்னிப்பு அளித்துவிடலாம் என்றும் நிறுவிவிடுகிறார். பிளாட்ஃபாரத்தில் பானி பூரி கடை வைத்திருப்பவனை விட, வாடகைக்குக் கடை எடுத்து நடத்தும் பழக்கடைக்காரருடனான வாழ்க்கை மேல் எனக் கருதி சிரிக்கும் ஷோபாவாக ஸ்ரீ கெளரி பிரியா அற்புதமாக நடித்துள்ளார். தனது அரசியல் நிலைப்பாட்டை ஸ்ரீ கெளரி பிரியாவின் ஆழமான பெரிய கண்கள் மூலமாக மறைத்துவிட முடியும் என்ற ராஜு முருகனின் நம்பிக்கை வீண் போகவில்லை என்றே சொல்லவேண்டும்.

யுவன் சங்கர் ராஜாவின் தலைப்புப் பாடல் இசையும், டிராட்ஸ்கி மருதுவின் தலைப்புப் பாடல் கோட்டோவியங்களும் ‘மாடர்ன் லவ் சென்னை’யின் அழகிற்கு அழகு சேர்த்துள்ளது. அரசியல் சரியற்றத்தன்மை, விடலைத்தனம், எதார்த்தம், வாழ்க்கை பற்றிய முதிர்ச்சியான அணுகுமுறை என எல்லாம் கலந்த மிக்ஸிங்காக மெஜஸ்டிக்காக உள்ளது இந்த ஆன்த்தாலஜி தொடர்.

(நன்றி: பாளையத்தான்)