
நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா.
லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் மரணத்திற்குக் காரணமானவர்கள் என அனைவரும் சிக்கிய பின்பும், லீலாவின் மனத்தாங்கல் குறைந்தபாடில்லை. ஒரு தேர்ந்த குறுநாவலுக்கான முடிவோடு மிக அற்புதமாக முடிகிறது படம்.
நாயகியின் அம்மா சந்திராவாக நடித்துள்ள கீதா கைலாசம் தவிர அனைவருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள். ஆனால் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். ‘என்னை ஏமாத்திட்டா’ என பிரமை பிடித்தது போல் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருக்கும் கீதா கைலாசம், க்ளைமேக்ஸில் ஒரு விஸ்வரூபம் எடுக்கிறார். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாகப் பெண் கதாபாத்திரங்களை உபயோகப்படுத்திய விதத்தினைச் சொல்லலாம். புரளி பேசும் பெண்கள், அதை நம்பும் பெண்கள், நம்பாமல் எதிர்கேள்வி கேட்கும் பெண்கள், சடங்குகள் எப்படிச் செய்யப்படவேண்டும் என முன்னின்று ஊரை வேலை வாங்கும் பாட்டி, இறந்த தன் உடன்பிறந்தவள் மீது அதீத பாசத்துடன் இருக்கும் பாட்டி, சுடுசொல் பொறுக்காத பெண் என கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் பிரமாதப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கும், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கும், எளிமைக்குள் (குறைவான பட்ஜெட்) ஓர் அதிதீவிரமான (intense) படத்திற்கான உத்திரவாதத்தை அளித்துள்ளனர்.
லீலாவின் அப்பா செல்வராஜாக நடித்துள்ள ராஜு ராஜப்பன், அப்பாத்திரத்திற்குத் தானொரு சிறந்த தேர்வு என நிரூபித்துள்ளார். தனது வசைச்சொல் தான் மகளைக் கொன்று விட்டது என்ற குற்றவுணர்வையும் வேதனையையும் மிக இயல்பாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். அவரது நண்பராகவும், கோயில் தர்மகர்த்தாவாகவும் நடித்துள்ள நபரும் தனது இயல்பான நடிப்பால் கவருகிறார். படத்தின் இயல்பான நேட்டிவிட்டிக்குக் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நபரும் உதவியுள்ளார்.
எமகாதகியாக, லீலாவாக ரூபா கொடுவாயூர் நடித்துள்ளார். அவரது முகமே படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையைத் தந்துவிடுகிறது. ஒப்பனை கலைஞரின் கைவண்ணத்திற்கு வாழ்த்துகள். ஒரு வீடு, அவ்வீட்டிற்குள் ஒரு இளம்பெண்ணின் பிணம், அவ்வீட்டின் வெளியே மரணத்திற்கு வந்து பரிதவிப்பிற்கும் பதற்றத்துக்கும் உள்ளாகும் மனிதர்கள் என இயக்குநர் மிக நேர்த்தியாகப் படத்தைக் கட்டமைத்துள்ளார். அவரது திரைக்கதை, கடைசி ஃப்ரேம் வரை பார்வையாளர்களைப் பிடிக்குள் வைத்திருக்க உதவியுள்ளது. ஜெசின் ஜார்ஜ் பின்னணி இசையும் படத்தின் அமானுஷ்யத்தன்மையைத் தக்கவைக்கக் கச்சிதமாகப் பங்காற்றியுள்ளது.