ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர்.
மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் கோர விபத்தில் இருந்து மீண்டு எப்படி டைனோசர் போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து உயிர்பிழைத்துத் தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை.
ஹாலிவுட் படங்களில் ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவார்கள். இயற்கைப் பேரழிவு என்றாலும், உயிர்பிழைக்கும் சர்வைவல் த்ரில்லர் என்றாலும் சரி, பிரதான பாத்திரங்களுக்கிடையேயான பாசத்தைம் பிணைப்பையும் ஓர் இழையாக்க் கொண்டு வருவார்கள். அப்படி மொழி தெரியாவிட்டாலும், மில்ஸுக்கும் கோவாவுக்கும் இடையே உருவாகும் பந்தம்தான் படத்தை நகர்த்தும் விசையாக உள்ளது.
பூமியில் அவர்கள் எதிர்கொள்ளும் டைனோசர்களாலான ஆபத்து போதுமானதாக இல்லை. இந்தக் களத்தில் மயிர்கூச்செரிய வைக்கும் காட்சிகளைப் பல ஹாலிவுட் படங்களில் பார்த்துவிட்டது காரணமாக இருக்கலாம். அத்தகைய தரமான காட்சி அனுபவத்தை முன்பே பெற்றுவிட்டதால், இந்தப் படத்தின் சிறுகோள் துகள்களின் நெருப்பு மழையோ, டைனோசர்களோ அச்சுறுத்தத் தவறியுள்ளன.
இந்தப் படத்தின் இயக்குநர்களான ஸ்காட் பெக்கும், ப்ரையன் வுட்ஸும், ‘A Quiet Place’ என்ற அருமையான ஹாரர் படத்திற்குத் திரைக்கதை எழுதியவர்கள். ஆனால் அந்த மேஜிக் இப்படத்தில் எடுபடாமல் போய்விட்டதே துரதிர்ஷ்டவசமானது. படத்தில் நான்கே கதாபாத்திரங்கள்தான். சோமாரிஸ் கிரகத்தில் பல விஞ்ஞான முன்னேற்றங்கள் இருந்தாலும், சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று சொல்கிறார்கள். அறுநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன் கூட, பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறுமி மருத்துவத்திற்காகக் கஷ்டப்பட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. ஆனால், நாயகன் படம் நெடுகே என்னென்னமோ அதி நவீன கேட்ஜட்ஸ் பயன்படுத்துகிறார். அதுவும் அவற்றையெல்லாம் எங்கே இருந்து எடுக்கிறார் என்பதும் புதிராகவே உள்ளது.
மில்ஸாக நடித்துள்ள ஆடம் ட்ரைவர் தனது நடிப்பினால் எவ்வளவோ முயன்றும் படம் டேக்-ஆஃப் ஆகத் திணறுகிறது. மில்ஸின் நோய்வாய்ப்பட்ட மகள் நெவினேவாக க்லோ கால்மன் நடித்துள்ளார். துள்ளிக் கொண்டும், எங்கேயோ பார்த்தவாறும், உணர்ச்சிவயப்பட்டும் தனது தந்தையிடம் பேசும் காணொளிகள் பிரமாதமாக உள்ளது. கோவாவாக வரும் அட்ரியனா க்ரீன்பிளாட்டின் குறும்புத்தங்களும் ரசிக்க வைக்கின்றன. ஆனால், முழுப்படத்தையும் ரசிக்கப் போதுமானதாக இல்லை.