Search

Shazam! Fury of the Gods விமர்சனம்

டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு.

முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறான் பில்லி. விரைவில் பதினெட்டு வயது எட்டப் போகும் தன்னைக் குடும்பத்தை விட்டு அனுப்பிவிடுவார்களோ, மீண்டும் குடும்பத்தைப் பிரியவேண்டுமோ என கவலையிலே உள்ளான் பில்லி.

ஷசாம் படத்தின் அழகே, சிறுவன் பில்லி தனக்குக் கிடைக்கும் சக்திகளைத் தன் சகோதர சகோதரிகளுக்குப் பகிர்ந்தளிப்பதே! இதற்கிடையில், கடவுளான தன் தந்தை அட்லாஸினுடைய மந்திரக்கோலின் சக்திகளை மீட்கும் முயற்சியில், அவரது புதல்விகளும் கடவுள்களுமான ஹெஸ்பெராவும் காலிப்ஸோவும் பூமிக்கு வருகிறார்கள். பில்லியையும், அவனது சகோதர சகோதரிகளையும் கண்டுபிடித்து, அவர்களது சக்தியை மீண்டும் பெறுவதற்கான முயற்சியைக் கோபமாக மேற்கொள்கின்றனர்.

ஷசாமிடமிருந்து பெறும் Tree of Life விதையைப் பூமியில் நடுகின்றார் காலிப்ஸோ. அவ்விதை, ராட்சஷ விருட்சமாக வளர்ந்து பல வினோதமான மிருகங்களை உருவாக்குகிறது. சகோதர சகோதரிகள் அவர்களது சக்திகளை இழந்து விட, தனி ஆளாக ஷசாம் எப்படி பூமியைக் காப்பாற்றுகின்றனர் என்பதே படத்தின் கதை.

முதற்பாகத்தைப் போலவே கலகலப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன திரைக்கதையும் வசனங்களும். ஃப்ரெடி, அட்லாஸின் இளைய மகளான 6000 வயதான ஆன்தியாவை விரும்புகின்றான். ஷசாமிற்கோ, வொண்டர் வுமன் மீதொரு ஈர்ப்பு. படத்தில், வொண்டர் வுமனின் சிறப்புத் தோற்றம் ஆச்சரியமான ஒரு கணத்தில் நிகழ்கிறது. பிளாக் ஆடம் படத்தில், ஜஸ்டீஸ் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா (JSA)-இலுள்ள நாயகர்களான ஹாக் மேன், சைக்ளோன், ஸ்மேஷர் ஆகியோரது அறிமுகத்தைக் கொடுத்திருந்தனர். அந்தக் சொசைட்டியில் ஷசாம் இணையவுள்ளார். ஆனால், அவருக்கோ ஜஸ்டிஸ் லீகில் இணைந்து, வொண்டர் வுமானோடு இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்று ஆசை.

சிறு வயது ஃப்ரெடியாக வரும் ஜாக் டைலான் க்ரேஸர் தான் பட்த்தின் ஷோ ஸ்டீலர். இந்தப் படமே, ஃப்ரெடி பாத்திரத்தை மையமாக வைத்தே தொடங்குகிறது. அவருக்கு ஜோடியாக, கடவுள் ஆன்தியாவாக ரேச்சல் ஸெக்லர் நடித்துள்ளார். சிறுமி ஃபெயித் ஹெர்மன், கறுப்பு நிற யுனிகார்ன்களை வசப்படுத்தும் காட்சி அழகாகக் கவிதை போலுள்ளது.

DCEU – டிசி காமிக்ஸ் எக்ஸ்டண்டட் யுனிவெர்ஸ் தயாரிப்பில் இனி வரப் போகும் படங்கள் அதகளமாக இருக்கப் போகின்றன என்பதற்கான முன்னறிவிப்பாக 2022 இல் வெளிவந்த பிளாக் ஆடம் படமும், இப்படமும் அமைந்துள்ளன. மார்வெல் பாணியில், டிசி படங்களும் படம் முடிந்ததும் போஸ்ட் & எண்ட் க்ரெடிட்ஸ் போடுவது நன்றாக உள்ளது.