Shadow

Kantara: Chapter 1 விமர்சனம்

காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது.

காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, பாங்காரா தேசத்து துறைமுகத்தை வரிகளற்று அனைவருக்கும் திறந்துவிடுகிறான். அவனது செய்கையால் கோபப்படும் குலசேகரன் எனும் பாங்காரா மன்னன் (காந்தாராவில் கொல்லப்பட்டவரின் பேரன்), காந்தாராவைத் தீக்கிரைக்காகிறான். கடவுள்களால் பாதுகாக்கப்படும் காந்தாராவின் எதிர்வினைதான் படத்தின் முடிவு.

கனகவதியாக ருக்மிணி வசந்த். அழகாக இருக்கிறார். படத்தின் கடைசியில், பாங்காரா ரத்தமும், கடப்பாவாசிகள் பாலும் கனகவதியின் உடலில் ஓடுவதால் என்னென்னமோ மாயாஜாலம் செய்கிறார். மிளகு, வணிகம் என மன்னனிற்கும், சக்தி வாய்ந்த கார்னிகா கல்லின் மீது கடப்பர்களுக்கும் ஆர்வம் எனப் புரிகிறது. ஆனால், ஈஸ்வரன் பூந்தோட்டத்தின் மீது கனகவதிக்கு எதனால் ஆர்வம் என்றே புரியவில்லை. ‘என்னைக் கூட்டிட்டுப் போ’ என நாயகனிடம் சிணுங்கிக் கொண்டேயிருப்பார். கனகவதியின் அண்ணன் குலசேகரனாக நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சிறப்பாக நடித்துள்ளார். பாங்காராவின் மன்னன் விஜயேந்திரனாக ஜெயராம் நடித்துள்ளார். ஆனால், இக்கதாபாத்திரங்களை ‘ட்விஸ்ட்’களுக்குப் பயன்படுத்தவேண்டுமென முடிவு செய்துவிட்டு, அழுத்தமான கதாபாத்திரமாக அமைக்கத் தவறிவிட்டார் ரிஷப் ஷெட்டி.

முந்தைய படமான காந்தாரா ஓர் அற்புதமான உணர்வைத் தந்ததற்குத் திரைக்கதை ஒரு பிரதான காரணி. மனித உணர்வுகளையும், மனங்களையும் அழகாகத் தொட்டுச் செல்லும். குறிப்பாகக் க்ளைமேக்ஸில், நாயகன் சன்னதமாடும்போது பெரும் சிலிர்ப்பையும் உணர்வெழுச்சியையும் ஏற்படுத்தியது. இப்படம் அப்படியான அனுபவத்தைத் தராமல், பிரம்மாண்டத்தில் பார்வையாளர்களை மூழ்கடித்து விடுகிறது. அரண்மனை, சந்தை, துறைமுகம், இறக்கத்தில் கட்டுப்பாடின்றி ஓடும் தேர், அமானுஷ்யமானசண்டைக்காட்சிகள் என தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சிரூபமாகவும், அட்டகாசமான பின்னணி இசையுடனும், தரமான VFX-உடன் படம் மிரட்டலாக உள்ளது.

திக்கவற்றவர்க்குத் தெய்வமே துணை என்ற ரீதியில், காந்தாராவில் ஒரு சாமானியனுக்குள் எழும் அந்தத் தெய்வீக மாற்றம் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றது. இப்படத்தில் அது ‘மிஸ்ஸிங்’. இப்படத்தின் நாயகன், முதல் பாகத்து நாயகன் சிவா போல் சாமானியன் இல்லை. ஈஸ்வர கணங்களில் ஒருவன். வெவ்வேறு குலிகாவாக, ஈஸ்வர கணமாக, சாமுண்டியாக (சவுண்டி/ சாவுன்டி என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயரில் sub-title வருகிறது) மாறுகிறார். காந்தாராவில் மக்களுக்கு உறுதுணையாகச் சிறுதெய்வங்களான பாஞ்சுருளியும் குலிகாவும் இருப்பார்கள். இம்முறை, இடத்தின் பெயரே ஈஸ்வரன் பூந்தோட்டம் என வைத்துப் பெருந்தெய்வங்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் ஓர் ஒப்பந்தம் உள்ளதாக வசனம் வைத்துவிடுகிறார் ரிஷப் ஷெட்டி. ‘என்னமாய் நடிக்கிறார்?’ என்று ஆச்சரியமூட்டிக் கொண்டே உள்ளார். பெர்மி காட்டுவாசியா, வைக்கிங் வீரரா எனும் ஐயம் அடிக்கடி எழுகிறது. ஆனால், பிறர்மனை நோக்குவதை விமர்சனமின்றி நகைச்சுவையாகப் பயன்படுத்துவதை மட்டும் விடமாட்டேங்கிறார். சிவாவாவது சாமானியன், பெர்மியோ தர்மத்தைக் காக்க வந்தவன் எனப் புகழப்படுகிறான். இந்தக் கிளுகிளுப்பிற்கு மட்டும் ரிஷப் ஷெட்டி கட்டமைக்கும் தர்மத்தில் இடமுண்டு போல!

காடு, அமானுஷ்யம், சாகசம், போர் எனப் பார்வையாளர்களுக்கு நேர்த்தியாகக் கடத்தப்பட்டிருக்கும் படத்தின் பிரம்மாண்டமே இப்பாகத்தின் வசீகரமும் பலமுமாகும்.