
படவா என்பது போக்கிரி என்ற பொருள் வருமாறு செல்லமாகப் பயன்படுத்தப்படும் சொல்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காத்தூர் எனும் ஊருக்குள் வெட்டியாகச் சுற்றும் வேலனின் போக்கிரித்தனம் பொறுக்க முடியாமல் அவரை ஊரே சேர்ந்து மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கிறது. மலேஷியாவில் வேலை போய்விட, மீண்டும் ஊருக்கு வரத் தயங்கும் வேலன்க்கு உதவுவதற்காக, வேலனுக்கு லாட்டரியில் 10 கோடி விழுந்துள்ளதாக அவனது மலேஷிய நண்பன் பொய் சொல்லிவிடுகிறான். அதை நம்பும் ஊர்மக்கள், அவனை ஊர் தலைவராக எதிர்ப்பில்லாமல் ஏக மனதாக நியமித்துவிடுகின்றனர். ஒரு படவாவிடம் கொடுக்கப்படும் தலைவர் பொறுப்பை அவன் எப்படிப் பயன்படுத்துகின்றான் என்பதுதான் படத்தின் கதை.
வேலனின் நண்பர் உறைப்பாக சூரி நடித்துள்ளார். விடுதலை, கொட்டுக்காளி, கருடன் என புதுப் பரிமாணத்திற்குச் சென்றுவிட்ட பின், அவரைப் பழைய வழக்கமான நகைச்சுவைக் காட்சிகளில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வருடம், வெளியாகாத படங்களுக்கு எல்லாம் வாழ்வளிக்கும் மறுவாழ்வு ஆண்டாக உள்ளது.
படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். குறிப்பாக, படத்தின் முதற்பாதி முழுவதுமே ஊருக்குள் சும்மா உரண்டை மட்டுமே இழுத்துக் கொண்டுள்ளனர் விமலும் சூரியும். படத்தின் இரண்டாம் பாதியில், ஊரில் விவசாயத்தை வேலன் மீட்டெடுக்க நினைக்கையில், கருவேலமரம் தான் வில்லனாக உள்ளது என்பதை வேளாண் பேராசிரியராக பூ ராம் மூலமாக அறிந்து கொள்கிறார். அதனால், கருவேலமரத்தை வழிபடும் செங்கல் சூளை நடத்தும் வில்லனான கருடா ராமிற்கும் நாயகனுக்கும் மோதல் உருவாகிறது.
கால்நடை மருத்துவராக ஷ்ரிட்டா ராம் நடித்துள்ளார். ஊர்மக்களை ஏமாற்றுவது பாவம் என நாயகனை நல்ல செய்ய ஊக்குவிக்கும் கதாபாத்திரம் அவருக்கு. நாயகனும், மரக்காத்தூரை, இந்தியாவின் மாதிரி கிராமமாக மாற்றிக் காட்டுகிறார். வேலனாக விமல் நடித்துள்ளார். விமலும் சூரியும் இணைந்து சில காட்சிகளில் கலகலப்பைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்.
கருவேலமரத்தை வேரோடு ஒழித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, மலடாகிவிடும் விவசாய நிலங்களையும் மீண்டும் விளைநிலங்களாக மாற்றலாம் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் K.V. நந்தா.