
இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள் ஒன்று கீழே கிடக்கிறது. அதை நான்கு பேர் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்குள் சண்டை வேண்டாமென சரிசமமாகப் பகிர்ந்து குடிக்கலாம் என பாருக்குப் போகிறார்கள். சைட் டிஷாக லெக் பீஸ் வருகிறது. ‘கண்ட இடத்தில் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளை உண்ணும் கோழியின் லெக் பீஸைச் சாப்பிட்டால் வீண் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்பது என் ஐதீகம்’ என்கிறார் திடீர் திருப்பதி. மிமிக்ரி கோபி, குயில் குமார், பேய் முருகேசன் ஆகிய மூவரும் லெக் பீஸ் சாப்பிடுகின்றனர். பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிர் போகும் அப்பிரச்சனையிலிருந்து எப்படி அந்த நால்வரும் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாகக் கருணாகரன், குயில் குமாராக C. மணிகண்டன், பேய் முருகேசனாக ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோ சினிமாஸ் C. மணிகண்டன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் S.A. பத்மநாபன். பார் மேனஜராக யோகிபாபுவும், பார் முதலாளியாக மொட்டை ராஜேந்திரனும், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாகராஜனாக வி.டி.வி. கணேஷ் ஆகியோரும், காவல்துறை அதிகாரிகளாக ஜான் விஜய், மைம் கோபி, மறைந்த G. மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை வில்லனாக ரவி மரியாவும், மதுசூதன் ராவும் நடித்துள்ளனர். முழு நீள நகைச்சுவைப் படமாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே கலகலப்பாகப் பயணிக்கிறது படம். கவர்ச்சி நடனப் பாடல்களையும் கமர்ஷியலுக்காக இணைத்துள்ளனர்.
மையப் பாத்திரங்கள் நால்வருக்கும் பிரத்தியேகமான கிளைக்கதை மூலமாக அறிமுகப்படுத்துவது ரசிக்க வைக்கிறது. கிராமத்தில், 1959 இல் பனையேறும் சிறுவர்கள் மூலமாக, வில்லன்களுக்கும் ஒரு கிளைக்கதை வைத்து, அவர்களது குற்றப்பின்னணிக்கு ஒரு தொடக்கத்தினை அளித்துள்ளனர். நாயகர்கள் நால்வர் மட்டும் லெக் பீஸ் சாப்பிட்டுப் பாதிப்படைவதில்லை. ஒரு காட்சியில் லெக் பீஸை எடுத்து இருவர் சாப்பிட, அவ்விடத்தில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
ரவி மரியா வழக்கம் போல் நிறைய பேசி, நிறைய நடித்து, மிகக் குறைவாக ரசிக்க வைக்கிறார். அவர் யோகிபாபுவைப் பார்த்து, ‘இந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு இவன் எப்படி எல்லாரையும் கவர்ந்தான்’ எனக் கூறும் வசனம் நல்ல நகைமுரண். லெக் பீஸ் உண்டதால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வதாகக் காட்டி, அதை ஒரு சமூக அவலத்துடன் இணைத்துச் சுவாரசியமாகப் படத்தினை முடித்துள்ளனர்.