எந்த இடத்தில் கவின் லாஸ் பக்கம் போனார் என யோசித்தால், கவின் போலீஸாக இருந்த டாஸ்க் தான் ஞாபகம் வருகிறது. அந்த டாஸ்கில் தான் லாஸை விசாரணைக்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்த செட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவார். கூட மீராவும் இருப்பார். அந்த அத்தியாயத்தில் லாஸ் கண்கள் மின்ன வெட்கப் புன்னகையோட கவினிடம் பேசினது இன்னும் ஞாபகம் இருக்கு. அப்ப மீரா கூட, “என்னய்யா நடக்குது இங்க” எனச் சொல்லிவிட்டுப் போனார். அந்த மொமன்ட்டில் தான் கவின் விழுந்திருக்க வேண்டும் (அங்கே லான்ல காதலி ஆவியாக இருக்க, இங்க அடுத்த ட்ராக் ஓபன் ஆகிவிட்டது). அப்பவே சாக்ஷி – கவின் இடையில் ட்ராக் ஓடிக் கொண்டிருந்தது. சாக்ஷியிடம் இல்லாத, லாஸிடம் இருந்த ஒரு விஷயம், மேலே நான் சொன்ன கண்கள் மின்ன வரும் வெட்கப் புன்னகை. கவின் – லாஸ் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சாக்ஷி இதை ஒரு காரணமாகக் (She is blushing) கூடச் சொன்னார். சாக்ஷி ஒரு பிரச்சினையைக் கிளப்பவும், பொசசிவ் ஆகக் காரணமும் அதே blushing தான்.
கவின் சாக்ஷியைக் கழட்டி விட்டதுக்கு ஒரு காரணமும் கிடையாது. சாக்ஷியோட கவின் ரிலேஷன்ஷிப் தெரிந்தும், கவினிடம் நெருங்கினது லாஸ் செய்த தப்பு. இதனால் தான் பலரும் கவின் – லாஸ் காதலை வெறுக்கிறதுக்குக் காரணம். ‘வந்த இரண்டாவது வாரத்தில் இருந்து உன் பின்னாடி தான் இருக்கேன்’ என லாஸ் சொன்னதாக, சீக்ரெட் ரூமில் இருந்து வெளியே வந்த சேரன் சொன்னார். இது உண்மையாக இருந்தால், சாக்ஷியிடம் இருந்து கவினை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கினது லாஸ் தானென முடிவுக்கு வரலாம். ஆனால் அது முடிந்து போன கதை என்பதால், இப்ப அதைப் பற்றிப் பேசிப் பிரயோஜனம் இல்லை.
காதலுக்கு எதிரியென சேரனை வில்லனாக்கிட்டு இருந்தது கவின் ஆர்மி. ஒரு தடவை கூட இது வேணாம் என லாஸிடம் அட்வைஸ் பண்ணினது இல்லை. சேரன் சொன்னது எல்லாம், ‘எதுவா இருந்தாலும் வெளியே போய் வச்சுக்கோங்க’ என்பதுதான். இத்தனை கேமிரா இருக்கும் போது, இத்தனை கோடி பேர் பார்க்கும் போது, ‘இது தேவையான்னு யோசி’ என்று தான், ஒவ்வொரு தடவையும் லாஸிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கவின் – லாஸ் இரண்டு பேருக்கும் ஒரு கடந்த காலம் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிக்கலான மொமன்ட்டில் கவின் தன்னோட கடந்த காலத்தை லாஸிடம் சொல்லிவிட்டார். ஆனாலும் அதில் நிறைய கேள்விகள் லாஸ்க்கு இருக்கலாம். அதே மாதிரி லாஸோட கடந்த காலம் கவினுக்குத் தெரியவேண்டும். ஒருவேளை அது தெரிந்து, கவினே கூட, ‘இது வேணாம்’ என முடிவு எடுக்கலாம். இல்லை லாஸ் அந்த முடிவு எடுக்கலாம். ஆனால் இதையெல்லாம் கேமிரா முன்னாடி செய்யாதீர்கள் என்று தான் சேரன் சொல்றார்.
சரி, இங்கே கமிட் ஆகிட்டாங்க என வைத்துக் கொள்வோம். மேலே சொன்ன மாதிரி வெளியே போனதுக்கு அப்புறம் பிரியவேண்டும் என பரஸ்பரம் சேர்ந்து முடிவு எடுத்தாலும் பாதிப்பு யாருக்கு? இத்தனை கேமிராக்கு முன்னாடி கமிட் ஆனதுக்காக இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன? கவின் விலகி போனாலும், லாஸ் விலகிப் போனாலும் அதிகபடியான பாதிப்பு லாஸுக்குத்தான் வரும். அது தெரிந்து தான் சேரன் ஒவ்வொரு தடவையும் பதறிக் கொண்டிருக்கிறார். ஆனால், ‘இந்த அப்பாக்களே இப்படித்தான். சேரன் நடிக்கறாரு’ என எவ்வள்வு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலபடுத்தியாகிவிட்டது.
நேற்று லாஸ் அப்பா வந்த ப்ரோமோவைப் பார்த்துவிட்டு, அவரையும் திட்ட ஆரம்பித்துவிட்டனர். எல்லோருக்குமே பர்சனல் பக்கம் என ஒன்று இருக்கு. ஆனால் கவின் – லாஸ் மட்டும் இத்தனை கேமிரா முன்னாடி காதலிக்கவேண்டும்.
நாள் 80
லாஸ் – வனிதா இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான், இருந்தாலும் வனிதா இப்பொழுது தான் முதன்முதலாக இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிடுகிறார். ஆனால் இப்படி பல விஷயங்கள் தெரியாமல், போன வாரம் இந்தக் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினதும் இதே வனிதா தான். விஷயம் அதே தான். கவினுக்கு, தான் சேரன் கூடப் பேசுவது பிடிக்கவில்லை. ஆனால் சேரன் அப்படி எதுவும் தடை எல்லாம் போடவில்லை என லாஸ் சொன்னார்.
திரும்ப உள்ளே வந்த பிறகாவது, இப்படி அமைதியாக உட்கார்ந்து பேசியிருந்தால், வனிதாவுக்கு இருக்கின்ற புத்திசாலித்தனத்துக்கு எல்லோரையும் தூக்கி சாப்பிட்டிருக்கலாம். பேசி முடித்த உடனே விக்ரம் வேதா தீம் மியூசிக்கோட சேரன் உள்ளே வந்தார். ரொம்பவுமே உற்சாகமாக இருந்தார். அதே மாதிரி தான் மற்ற ஹவுஸ்மேட்ஸும். ஷெரின் ஓடி வந்து கட்டிப் பிடித்து வெல்கம் பண்ணினார்.
பரஸ்பரம் பேசினதுக்கு அப்புறம், வனிதா, ஷெரின், சேரன் என மூன்று பேரும் தனி மீட்டிங் போட்டனர். ‘பாய்ஸ் டீம் ரொம்ப நல்லா கேம் விளையாடறாங்க. நாம தான் கடைசி இடத்துல இருக்கோம். இனிமே விடக்கூடாது’ எனச் சொன்னவர், ஷெரினை நாமினேட் செய்தது கவின் தான் எனச் சொல்லி, அதோட காரணத்தையும் சொல்லிட்டார். ஆனால், ஷெரின் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லோரும் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, எந்த சத்தமும் இல்லாமல், லாஸோட அம்மாவும் தங்கச்சிகளும் வந்தனர். லாஸை விட அவங்க அம்மா நிறைய அழுதார். நீ’ நீயா இல்ல’ என ஒரு டயலாக்கை மொத்தமாக 136 தடவை அதைச் சொன்னார். உண்மை என்னவென்றால் அவரால் வேற எதுவும் பேச முடியவில்லை. லாஸ் ஃபேமிலி தனியாகப் பேசிக் கொண்டிருக்க, அவங்க அப்பா என்ட்ரிக்குப் பாட்டு போட்டனர். வெடித்து அழுத லாஸ், அப்பாவைப் பார்த்த உடனே இன்னும் கதறி அழுதார்.
முகத்தில் பெரிதாக உணர்ச்சிகளே காண்பிக்காமல் உள்ளே வந்த அப்பா, வந்த உடனே லாஸை லெஃப்ட் & ரைட் வாங்கினது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒருவேளை லாஸ் அப்பாவைச் சமாளிக்க தான், சேரனை அவசர அவசரமாகக் கூட்டிக் கொண்டு வந்திருப்பார்கள் போல. சேரன் தோள் மேல கை போட்டுக் கொண்டு உள்ளே போனார். கவினை நைசாக உள்ளே தள்ளிக் கொண்டு போனார்கள் பாய்ஸ் டீம். உள்ளே கவின் கதறி அழ, வெளியே லாஸ் குடும்பம் அழ, ரொம்பவே உணர்ச்சிமயமாக இருந்தது.
வந்த உடனே கோபப்பட்டாலும், அதற்கப்புறம் லாஸ் அப்பா நடந்து கொண்ட விதம், பெண் குழந்தைகளைப் பெத்தவங்களுக்கு மட்டுமே வரும். அதுவும் ஆண்களை விடப் பெண்களுக்கு தான் அது புரியும். பிடிக்கும். நேற்று தன்னோட அப்பாவை நினைத்துப் பார்க்காத பெண்களே இருந்திருக்க மாட்டார்கள்.
கவினைப் பார்த்து, ‘எனக்கு யார் மேலயும் கோவமில்லை தம்பி. சாதாரணமா இருங்க’ எனச் சொன்னதும் தான் கொதிநிலை அடங்கியது.
மலேசியாவில் இருந்து, முகின் ஃபேமிலி, இலங்கையில் இருந்து லாஸ் ஃபேமிலி, கனடாவில் இருந்து லாஸ் அப்பா, 20 நிமிஷ எபிசோட் கன்டென்டுக்கு விஜய் டிவி எவ்வளவு வேலை பார்க்கிறது? உண்மையிலேயே ஹாட்ஸ் ஆஃப் தான் சொல்லவேண்டும். மொத்த டீமுக்கும் வாழ்த்துகள். விஜய் டிவி விஜய் டிவி தான்.