

கும்பகோணம் நிலப்பரப்பில் நடக்கும் கதை.
கதையின் நாயகன் கெளசிக், நாயகி பிரதீபா இருவருக்கும் ஒருவர் மீது ஒவருக்கு சின்னதாக ஈர்ப்பு இருக்கிறது. ஆனாலும் இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பிரதீபா, தமது குடும்பச் சூழலுக்கு காதல் செட்டாகாது என முடிவு செய்து நாயகனை விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார். இச்சூழலில் கெளசிக்கின் நண்பனுக்கும், பிரதீபாவின் நண்பிக்கும் காதல் திருமணம் நடக்கிறது. இந்தக் காதல் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்வதில் ஒரு குளறுபடி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குளறுபடி என்ன என்பதும், அதன்பிறகு நாயகன் நாயகிக்கு காதல் மலர்ந்ததா என்பதுமே படத்தின் திரைக்கதையாக பயணிக்கிறது.
பார்ப்பதற்குத் தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதி சாயலில் இருக்கிறார் நாயகன் கெளசிக். இயல்பான நடிப்பும் அவருக்கு கை கொடுக்கிறது. எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் திண்டாடுகிறார். நாயகி பிரதீபா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பட வாய்ப்பிற்காகப் பிரபலமான தொலைக்காட்சித் தொடரிலிருந்து விலகியுள்ளார் நாயகி. பிரதீபாவை இன்னும் நன்றாக நடிப்பில் உபயோகத்திருக்கலாம். ஏனைய கதாபாத்திரங்களில் யாரும் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரொம்ப சுவாரசியமான ரோல் அது. அவர் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். கஞ்சா கருப்பு, சிங்கம்புலி சின்னதாக அட்டண்டன்ஸ் போடுகின்றனர்.
படத்தில் பெரிதாக இசைக்க வேண்டிய பேக்ரவுண்ட் ஸ்கோர் பெரிதாக ஏமாற்றுகிறது. ரகுநந்தன் இன்னும் சிறப்பாக இசைத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் தனக்கு வழங்கப்பட்ட பட்ஜெட்டில் கிடைத்த லைட்டிங்-ஐ வைத்து சிறப்பாக வேலை செய்துள்ளார்.
சின்ன லைன் என்றாலும், சிறப்பாக திரைக்கதை அமைக்கும் வாய்ப்பு இந்த லைனில் உள்ளது. ஆனால் இயக்குநர் மொத்தமாக கோட்டை விட்டுள்ளார். எந்தக் கதாபாத்திரத்திற்குமே முழுமையான துவக்கமோ முடிவோ இல்லை. அதனால் படத்தில் யாரோடும் கனெக்ட் ஆக முடியவில்லை. க்ளைமேக்ஸ் காட்சி மட்டும் சற்று அழுத்தம் நிறைந்ததாக இருந்தது.
மற்றபடி பத்தின் தலைப்புக்கும் நியாயம் சேர்க்கவில்லை, எடுத்துக் கொண்ட கதைக்கும் நியாயம் சேர்க்கவில்லை
எனினும் இப்படியான குறைகளைத் தாண்டி ஓரிரு காட்சிகளில் படம் ஜாதி குறித்து பல நல்ல கருத்துக்களைப் பேசியுள்ளது. அந்த ஒற்றை அம்சம் படத்தைப் பார்க்க வைக்கிறது.
– வெண்பா தமிழ்


