Shadow

Couple Friendly விமர்சனம்

எதிர்பாராத் தருணத்தில் வீசும் குளிர் தென்றலை அனுபவித்த உணர்வைத் தருகிறது இப்படம்.

ஷிவாக்கும் மித்ராவுக்கும் இடையேயான நட்பார்ந்த காதலைப் பார்வையாளர்களுக்குக் கவித்துவமாகக் கடத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் நிலையாமையைக் குறித்தும், நாளையென ஒன்றில்லை என்பதாகக் கருதி இன்றே வாழ்வைக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் படம் அழுத்தமாகப் பதிந்து அசரடிக்கிறது.

தெலுங்குப் படத்தின் டப்பிங் போலிருக்கே என்ற எண்ணத்தை, ஓரிரு காட்சிகளுக்குள் மறையச் செய்து, படம் நம்மை அலேக்காக உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த மாயத்தைப் போட்டி போட்டுக் கொண்டு செய்துள்ளனர் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனும். கவிதை போல ரசித்து ரசித்து திரைச்சட்டகத்தை (frames) வைத்துள்ளார் தினேஷ். படத்தின் இயக்குநரான அஷ்வின் சந்திரசேகரும் ஒளிப்பதிவாளர் என்பதால், படம் ஒளிப்பதிவு ரீதியாக மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது. படத்தொகுப்பில் Intercuts -ஐக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கதைக்குள் பார்வையாளர்களை ஒன்ற வைத்துள்ளார் கணேஷ் சிவா. படக்குழுவின் தொழில்நுட்ப நேர்த்தியே திரையில் உருவாகும் மாயத்திற்குக் காரணம்.

தெலுங்கு, தமிழ் என இருமொழிப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. கதை நடப்பது சென்னை என்பதாலும், லிவிங்க்ஸ்டன், யோகிபாபு போன்ற நடிகர்கள் உள்ளதாலும், நேரடித் தமிழ்ப்படம் போலவே ஈர்க்கிறது. ஷிவாவாக நடித்துள்ள சந்தோஷ் சோபனும், மித்ராவாக நடித்துள்ள மானஸா வாரணாசியும் மிக இயல்பாக நடித்து, அவர்களது காதலைப் பார்வையாளர்களையும் உணரச் செய்கின்றனர். அவர்கள் உருகி உருகிக் காதலிக்கும் ஆட்களும் இல்லை, நட்போடு லிவிங் டுகெதரில் இருக்கும் சாதாரண ஜோடியே! வேலை கிடைக்காமல் டூ-வீலர் ஓட்டும் நாயனும், ஐ.டி. வேலை தேடும் நாயகியும் யதார்த்தமாகச் சந்தித்துக் கொள்ளும் புள்ளியில் படம் தொடங்குகிறது. அஷ்வின் சந்திரசேகரின் திரைக்கதையும் வசனங்களும் நறுக்கு தெறித்தாற்போல் கதைக்குள்ளேயே பார்வையாளர்களை வைத்துள்ளன. ஒரு பெண்ணின் வலியைப் புரிந்து கொள்வதோடு தள்ளி நில்லாமல், அத்தகைய தருணத்தில் உடனிருந்தாலே, பெண்கள் தனக்கான தைரியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனப் படம் ஓங்கி உரைக்கிறது. சமீபத்திய படங்களில், உதாரணம் With Love முதலிய படைப்பு, பெண் கதாபாத்திரங்களை வலிமையாகப் படைத்து அசத்துகின்றனர் இளம் இயக்குநர்கள்.

சந்தோஷ் சோபனும், மானஸா வாரணாசியும் திரையில் கொண்டு வரும் அந்த மேஜிக்கைத் தவற விடாதீர்கள். இந்த வருட காதலர் தினத்திற்கு வெளியாகியுள்ள மிக perfect ஆன காதற்படம்.