Shadow

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

hobbs-and-shaw-movie-review

ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம்.

ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர்.

முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி அட்டகாசம். அதுவும் டெக்னாலஜிக்கு எதிராகப் பழைய ஆயுதங்களைப் பயன்படுத்தி, சூப்பர் ஹ்யூமனை உருமாறி இருக்கும் இட்ரிஸ் எட்ல்பாவை வீழ்த்துகின்றனர். ஒருவர் அடி வாங்குவது, ஒருவர் அடிப்பது என்ற அந்த வியூகமும் ரசிக்க வைக்கிறது.

எலியும் பூனையுமான ராக்கும் ஜேஸனும், தொடக்கம் முதலே முட்டிக் கொள்வது நகைச்சுவையாக உள்ளது. ராக்கிற்கும், கதைப்படி ஜேஸனின் தங்கையாக வரும் வனேஸா கிர்பிக்கும் இடையே நடக்கும் அந்த சண்டையும் கூட ஆக்ஷன் + காமெடி கலந்ததாகவே உள்ளது. படத்தின் பெரும்பலம் வில்லனாக நடித்திருக்கும் இட்ரிஸ் எல்பாதான். இனி ஹாப்ஸ் & ஷா, ஒரு வெற்றிகரமான சீரிஸாகத் தொடங்கும் என்பது திண்ணம்.

டெட்பூல் நாயகன் ரியான் ரெனால்ட்ஸ், சி.ஐ.ஏ. ஏஜென்ட் ஆக கேமியோ ரோல் செய்துள்ளார். அவருக்கும், ராக்குக்கும் இடையிலான நட்பையும் காமிக்கலாகக் காட்டி ரசிக்க வைக்கின்றனர். ராக்குடன் இணைந்து சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ், ஜுமாஞ்சி போன்ற படங்களில் நடித்த கெவின் ஹார்ட் ஏர் மார்ஷலாக ஒரு காட்சியில் தலை காட்டுகிறார்.

ஜோனதன் செலாவின் ஒளிப்பதிவும், அதகளமான ஆக்ஷன் கோரியோகிராஃபியும் தான் படத்தின் பலம். மேலும், ராக்கும் ஜேஸன் ஸ்டாத்துக்கும் இடையிலுள்ள கெமிஸ்ட்ரியும் ஸ்க்ரீனில் அட்டகாசமான காம்போவாக உள்ளது. ஆக்ஷன் பிரியர்கள் தவற விடக் கூடாத படம். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர்களிலுள்ள எமோஷ்னல் டச் படத்தில் இல்லாதது ஒரு குறை. ஆனால், இயக்குநர்டேவிட் லீட்ச் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காமல், ஜாலியான ஆக்ஷன் படம் என்ற ஒற்றை நோக்கில் பயணித்து, அதைத் திரையிலும் அசத்தலாகக் கொண்டு வந்துள்ளார்.