Shadow

பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

bigg-boss-3-day-45

நேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால் இன்று அதோட சுவடே இல்லாமல் எல்லோரும் ஜாலியாக இருந்தனர். இந்த சோஷியல் மீடியா உலகத்தில் சோகமாக இருக்கிறதுக்கோ துக்கப்படறதுக்கோ கூட இடமே இல்லை. ஏனெனில் எல்லா உணர்ச்சிகளும் சடுதியில் மாறிவிடும். நமக்கு ஆதர்சமாக விளங்கிய நபர் இறந்த செய்தியைப் படித்துவிட்டு சோகமாக ஸ்க்ரோல் செய்தால், அடுத்த பதிவே ஒரு மீம் வந்து சிரிக்க வைத்துவிடும். இந்தக் கலவையான உணர்வுகள் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இழவு வீட்டில் கூட, சாவை விசாரித்துவிட்டு வெளியே வருபவர் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிற பழக்கங்கள் சோஷியல் மீடியாவினால் பாதிக்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. நமது எந்த ஓர் உணர்வுக்கும், அது துக்கமோ, சந்தோஷமோ அதற்கான ஆயுள் ரொம்பக் குறைந்து கொண்டே தான் வருகிறது. ‘இது வரமா? சாபமா?’ என்று புரியவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் அதே தான் நடந்திருக்கும். வாரா வாரம் ஒருத்தர் வெளியே போறாங்க, இந்த வாரம் ரெண்டு பேர் போனதாக நினைத்து அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கோட 2வது பகுதி நடந்தது. இரண்டு பேர் சேர்ந்த ஒரு அணி. ஏற்கனவே ஒரு தடவை வந்த மாதிரி, வெல்குரோவ் ஜாக்கெட், ஒரு காயின் ஒட்ட வைக்கறது தான். நல்ல வேளை வனிதா இல்லை. ‘நான் அன்னிக்கு அவ்வளவு சொல்லியும் நீ கேக்கலேன்னா என்ன அர்த்தம்?’ என பிக் பாஸைத் திட்ட ஆரம்பித்திருப்பார். பிக் பாஸும், ‘உன்னை எல்லாம் ஒரு ஆளாவே மதிக்கலை’ என சிம்பாலிக்காகக் காட்டிருப்பார். ஜஸ்ட் மிஸ்.

அணி பிரித்தது தான் பிரித்தாங்க, அதிலாவது ஒரு புத்திசாலித்தனம் வேண்டாமா? சாண்டியும் தர்ஷனும் ஒரு அணியாம். ‘டேய் மாப்ள, எவனோ என் பின்னாடி திப்புடு திப்புடுனு ஓடி வரான்டா, மாம்ஸ் அது நான் தான் மொமெண்ட்’ இல்ல எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர்.

ஸ்விம்மிங் ஃபூல் தாண்டி குதித்த கவின் பெட் ரூமில் தடுக்கி விழுந்து அடி வாங்கினார். லியாவுக்கு காலில் அடி. அதில்லாமல் சாண்டி ஓடி வரும்போது, மோதினதில், கதவில் இடித்து ஒரு அடி. சேரன் வழுக்கி விழுந்தார். தாறுமாறாகா ஓடினதைப் பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எல்லா ஹவுஸ்மேட்ஸும் முழுமையான ஈடுபாட்டோடு விளையாடினர். முடிவில் சேரன் தான் அவுட்.

கவின் காலில் அடிபட்டதுக்கு முன்னாடி அவரைத் துரத்தியது சாக்ஷியும் லியாவும். கேம் முடிந்ததுக்குப் பின், இரண்டு பேரும் சேர்ந்து கவினுக்கு ஆறுதல் சொன்னார்கள். இவருக்கு உண்மையிலேயே எங்கேயோ மச்சம் இருக்கு. ஆனால் அதற்கப்புறம் தான் கவினுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவரே தடுக்கி விழுந்தாரா, இல்ல சாக்ஷி தள்ளிவிட்டு விழுந்தாரா என ஐயம். ஆக ஒரு பஞ்சாயத்துக்கு வாய்ப்பு இருக்கு.

அடுத்ததாக 3 வது பகுதியும் நடந்தது. சிவப்பு கலர் தண்ணீர் நிரப்பபட்ட ஒரு கண்ணாடி குடுவையில் இருந்து காயின்ஸ் எடுக்கவேண்டும். அதில் எழுதியிருக்கும் விஷயத்தைச் செய்யவேண்டும். சுவாரசியமாக இருந்தது. எல்லோரும் சாண்டியை தான் டார்கெட் செய்தனர். அடுத்தது தர்ஷனை. கவின் எடுத்த காயினில் ஒன்றுமே எழுதாமல் இருந்தது. “அப்ப இதுலேயும் எனக்கு ஒன்னும் இல்லையா?” என கவின் அடிச்ச டைமிங் கமென்ட் அல்டிமேட்.

சேரன் சாண்டியைச் செலக்ட் செய்ததைச் சாண்டி ரசிக்கலை என்றே தோன்றுகிறது. இறுதியில் சாக்ஷி முதல் இடமும், அபி இரண்டாவது இடமும், மது மூன்றாவது இடமும் பிடித்தனர். ஒரு பிசிக்கல் டாஸ்கில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே ஜெயித்தது, நேர்கொண்ட பார்வை படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

அடுத்து, வீட்டில் இருக்கிற பெண்கள் எல்லோரும் ஆண்கள் மாதிரி வேஷம் போட்டு நடிக்கவேண்டும். மது-சேரன், அபி-முகின், ஷெரின்-கவின், லியா-தர்சன், சாக்ஷி-சாண்டி. இதில், சேரன் மைக்கைக் கழட்டிப் போட்டுவிட்டு, ‘இந்த கேமை நான் விளையாட மாட்டேன்’ எனச் சொன்னதை மது நடித்தார். சேரன் அதை ரசிக்கலை என அவர் முகமே காட்டிக் கொடுத்தது. ஆனாலும் இறுதியில், மது நன்றாகப் பண்ணியதாகச் சொன்னார்.

கடைசியில், அபி மதுவின் மேல் ஒரு பிராது கொடுக்கிறதோட முடிந்தது. ஒன்றுமே இல்லாத பிரச்சினையை ஊதி ஊதிப் பெரிதாக்குவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான்.

மகாதேவன் CM