“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக்.
டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.
படம் முழுக்க சூப்பர் ஹீரோக்களாக நடித்தவர்களாகவே உள்ளனர். வில்லனாக ‘அக்வா மேன்’ ஜேசன் மாமோ, ‘பிளாக் ஆடம்’ ராக், ‘வொண்டர் வுமன்’ கால் கடோடட், ‘கேப்டன் மார்வெல்’ ப்ரீ லார்சன் ஆகியோரைத் தவிர்த்து, மிச்செல் ரோட்ரிக்வெஸ், சார்லைஸ் தெரோன், WWE சேம்பியன் ஜான் சீனா, ஜேசன் ஸ்டாதம் முதலிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஜேசன் மாமோ, புஜபல பராக்கிராமச்சாலியாக தனது பாத்திரத்தை ஏற்காமல் குதூகலமான, கொஞ்சம் சைக்கோத்தனம் கலந்த துள்ளல் அசைவுகளுடைய உடற்மொழியோடு வில்லத்தனம் புரிந்துள்ளார். இதை விட பெரிய வில்லன்களை எல்லாம் சமாளித்த வின் டீசல், ஜேசன் மாமோவிடம் திணறுகிறார். இதுவரையிலான இப்படத்தொடர் படங்களில், எடுத்த மிஷனை முடித்தே பழக்கப்பட்டவர் வின் டீசல். ஆனால், இப்படத்தின் முடிவில் வில்லனின் கையே ஓங்கியுள்ளது. அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பைக் கச்சிதமாய் ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் லூயிஸ் லெடெரியர்.
சாலையில் உருளும் பெரிய வெடிகுண்டைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் சாகசமாகட்டும்; ஹெலிகாப்டர்கள் கொக்கி போட்டு டொமினிக்கின் காரைத் தூக்க முயற்சி செய்யும் பொழுது, அந்த ஹெலிகாப்டர்களைக் கழட்டி விடச் செய்யும் சாகசமாகட்டும்; வழக்கம் போல் அதகளமான ஸ்டன்ட் காட்சிகளால் ரசிக்க வைக்கிறது ஃபாஸ்ட் X.