கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது.
அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார்.
மேக்ஸிமஸ் உதிர்க்கும் கவிதையைச் சொல்லி, அவரைப் போலவே களத்தில் வாளைச் சொருகி, மண்ணை எடுத்து கைகளில் தடவிக் கொள்ளும் ஹேனோ தான், தனக்கும் மேக்ஸிமஸ்க்கும் பிறந்த மகன் லூசியஸ் வெரஸ் அரிலியஸ் என லூசிலாவிற்குத் தெரிந்து விடுகிறது. அதன் பின் ஏற்படும், தாய் – மகன் பாசப்போராட்டமும், ரோமில் ஏற்படும் அரசியல் திருப்பங்களும் தான் படத்தின் கதை.
ஒரு குரங்கைப் பேராளராக (Consul) அறிவிக்கும் சிறுபிள்ளைத்தனமான அரசியலில் சிக்கிக் கொள்கிறது ரோமப் பேரரசு. அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள, பிரமாதமாகக் காய் நகர்த்துகிறார் மேக்ரினஸ். முன்னாள் அடிமையாக இருந்து, கிளாடியேட்டராகி, அடிமைத்தளத்தில் இருந்து விடுதலை பெற்ற மேக்ரினஸாக டென்செல் வாஷிங்டன் கவருகிறார்.
ரஸ்ஸல் க்ரோவை நாயகனாகப் பார்த்த களத்தில், பால் மெஸ்கலை ஏற்றுக் கொள்ள சிறு நெருடல் தொடக்கத்தில் இருந்தது. அவர் திரைப்படங்களில் நடிக்க வந்தே மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் கிளாடியேட்டர் போன்ற ஒரு படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ரிட்லி ஸ்காட். அதற்குக் காரணம், பால் மெஸ்கலின் மேடை நாடகப் (Theatre) பின்னணி காரணமெனப் புரிகிறது. படம் முடியும் பொழுது, ரோமினோட கொலோசியத்தின் பார்வையாளர்கள் போல், படம் பார்ப்பவர்களும் பால் மெஸ்கலைக் கொண்டாடும்படி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். வாரனாசியைச் சேர்ந்த ரவி எனும் பாத்திரம் கிளாடியேட்டர்களுக்குச் சிகைச்சையளிக்கும் மருத்துவராக வருகிறது. ஸ்வீடன் நடிகரான அலெக்ஸாண்டர் கரிம் கவனிக்க வைக்கிறார். அவரும் மேடை நாடகப் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்குமான பாலமாக உள்ளார் லூசிலாவாக நடித்துள்ள கோனி நீல்சன். எப்படி முதல் பாகத்தில், கதையின் நகர்வுக்கு உதவும் முக்கியமான பாத்திரமாக இருந்தாரோ, இப்படத்திலும் அவ்வாறே உதவியுள்ளார். ஜெனரல் மார்கஸ் அகேஷியஸாக பெட்ரோ பாஸ்கல் நடித்துள்ளார். இவரது ஆரம்பமும் மேடை நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது. போர்களினால் எழும் மரண ஓலத்தால் பாதிக்கப்படுவது, ரோமின் மீதான காதல், மனைவி லூசிலா மீதான அன்பு என பரிபூரணமான நாயக பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
போர்க்காட்சிகள், கிளாடியேட்டர் சண்டைகள், அரசியல் சூழ்ச்சிகள், தாய் – மகன் எமோஷனல் காட்சிகள் என கிளாடியேட்டர் II ஒரு அற்புதமான படைப்பாக உள்ளது. ஒரு கலைப்படைப்பாக அதன் உச்சத்தைத் தொட்டுள்ளதா என்பது அவரவர் பார்வைக் கோணத்துக்கு விட்டுவிடலாம். ஆனால், கிளாடியேட்டர் தராத நிறைவை கிளாடியேட்டர் II தருகிறது. நிறைவை அளிக்கும் முடிவு கலைப்படைப்பாக பொதுவாக அங்கீகரிக்கப்படுவதில்லை. சோகமும், வெற்றிடமும் கொண்ட முடிவுகளை உள்ள படைப்புகளே செவ்வியல்தன்மையைப் பெறுகிறது. ஆனால் 86 வயதாகும் இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் மனநிலை, தன் படைப்பிற்கு ஒரு நிறைவை அளிக்க விரும்பியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.