நான்-ஸ்டாப் நான்சென்ஸ் என படத்தைப் பற்றிப் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளனர். ‘லாஜிக் பார்க்க்காதீங்க. மூளையைக் கழட்டி வைத்துவிட்டு, ஜாலியா படம் பார்த்துச் சிரிச்சுட்டுப் போங்க. உங்களைச் சிரிக்க வைக்கிறதே மட்டுமே எங்கள் நோக்கம்!’ என படம் தொடங்கும் முன்பே இயக்குநரின் வாய்ஸ்-ஓவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது.
வெள்ளைக்காரன் பிரியாணி எனும் உணவகத்தை நடத்தி வருகின்றார் தங்கசாமி. தொழில் நொடிந்து போக, அவரது பேத்தி பவானி, கடன் வாங்கி ஒரு பிரியாணி கடையைத் தாத்தாவிற்கு வைத்துக் கொடுக்கின்றார். அரசியல்வாதியான அடைக்கலராஜ் சமஉ, தங்கசாமிக்கு ஒரு பெரிய ஆர்டரைக் கொடுத்துவிட்டு, பணம் தராமல் ஏமாற்றிவிடுகிறார். அடைக்கலராஜ் மீது வழக்கு போட பூங்குன்றன் எனும் வக்கீலைப் பார்க்கப் போகின்றனர். பூங்குன்றன் இறந்து கிடக்க, தங்கள் மீது கொலைப்பழி விழுமோ என பயந்து, பூங்குன்றன் பிணத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நினைக்கின்றனர். பூங்குன்றன், வங்கி அக்கவுன்ட்டிலுள்ள, 10 கோடியை எடுக்கவுள்ளதாக பவானி குடும்பத்தினருக்குத் தெரிய வர, பூங்குன்றன் உயிரோடுள்ளதாகத் தோற்றத்தை ஏற்படுத்தி, பணத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி கைக்கூடியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். நாயகியின் அம்மாவாக லொடலொடவெனப் பேசிக் கொண்டிருக்கும் அபிராமி, இறந்த விலங்குகளை ரோபோட்டிக்ஸ் மூலம் நடமாட வைக்கும் ஷிவானியாக மரியா, எவரது கையெழுத்தை வேண்டுமானாலும் அச்சு பிசகாமல் போடும் யாழினியாக அபிராமி பார்கவன், பிரியாணி மாஸ்டராக Y.G.மகேந்திரன், சமஉ அடைக்கலராஜாக மதுசூதன ராவ், அவரது முதன்மை அடியாள் பிரிட்டோவாக ரோபோ ஷங்கர், அடியாளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மயிலாக கல்லூரி வினோத், ஆர்வக்கோளாறு பேருந்து நடத்துநர் முருகேசனாக ரெடின் கிங்ஸ்லி, சாதி அபிமானமுடைய கமிஷ்ணர் கோடாங்கியாக எம்.எஸ். பாஸ்கர், செய்யாத கொலைக்காக இன்னல்கள் அனுபவிக்கும் இன்ஸ்பெக்டர் இடிதாங்கியாக ஜான் விஜய், கான்ஸ்டபிள் மணியாக ஆதித்யா கதிர், முதல்வர் DTV திலகரனாக நாஞ்சில் சம்பத், வக்கீல் சொல்விளங்கும் பெருமாளாக ஆடுகளம் நரேன், கொலையாளி ‘பொட்டு’ பவானியாக சாய் தீனா போன்றோர் நடித்துள்ளனர். ‘பூமாலை’யை முகர்ந்து பார்க்கும் கேசவன் குட்டி எனும் வங்கி மேலாளர் பாத்திரத்தில், இயக்குநர் சக்தி சிதம்பரம் அவர்களே நடித்துள்ளார். இவர்களோடு, சீரியல் கில்லர் சிம்ஹா ரெட்டி எனும் பாத்திரத்தில் ரகு பாபு, முதல்முறையாகத் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவமான பெயர், குண அமைப்பு எனத் தெளிவான வரையறையை வகுத்துள்ளார் இயக்குநர் சக்தி சிதம்பரம். தனித் தனியாக அத்தனை கதாபாத்திரங்களும் ரசிக்க வைத்தாலும், படத்தின் கதையை நகர்த்துவதற்கான வசனங்களைப் பேசாமல், அனைத்துக் கதாபாத்திரங்களுமே அசட்டுத்தனமான நகைச்சுவையை உதிர்ந்தவண்ணமே உள்ளனர். சீரியஸான தருணங்களில் பிரதான கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை எக்ஸ்பிரஷன்களாகக் காட்டுவதன் மூலம் நகைச்சுவையைக் கூட்டலாம். ஆனாலும், எல்லாக் காட்சிகளிலும், எல்லாப் பாத்திரங்களும் நகைச்சுவையாகப் பேசியே ஆகவேண்டுமென இயக்குநர் முடிவெடுத்து விட்டதால், நகைச்சுவை ஒட்டாமல் சில காட்சிளில் பல்லிளித்து விடுகின்றன.
படத்தின் கலர் டோன், படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை அளிக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. அதை மேம்படுத்திக் காட்ட உதவியுள்ளது R.ஜனார்த்தனின் கலை இயக்கம். ‘டபுள் மீனிங் பாட்டா இருக்கே!’ என ரசிகர்கள் ஆதங்கப்பட்ட ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா..’ பாடல், சென்சார் அதிகாரிகளின் தலையீட்டால் சில இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதனால் திரையரங்குகளில் நெளியாமல் அப்பாடலை ரசிக்க முடிகிறது. அப்பாடலை ரசிக்க முடிவதற்கு மிக முக்கியமான காரணியாக இருப்பவர்கள், டான்ஸ் மாஸ்டர் பூபதியின் காமிக்கலாம நடன அமைப்புகளும், அதற்கு வெப்பன் செய்துள்ள கலை இயக்குநருமே!
பாடலாசிரியர் என இயக்குநரின் பெயரும் இருந்தாலும், பாடல் வரிகளில் பெரும்பகுதியைப் பங்களித்த M. ஜெகன் கவிராஜின் பெயரையும் கிரெடிட்ஸில் இணைத்து, அசத்தியுள்ளார் தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன். உழைப்பவருக்கான ஊதியத்தைத் தருவதோடு, அவ்வுழைப்பிற்கான அங்கீகாரத்தை, இயக்குநர் பெரும்பாடுப்பட்டு தடுக்க முற்பட்ட பொழுதும், உரியவருக்கு அந்த அங்கீகாரத்தை அளித்து அழகு பார்த்துள்ளது டிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனம். சாதிச் சங்கமான VSVP (வம்பு சண்டை வாலிபர் படை)-இன் செயலாளர் M. ஜாதிராஜாகப் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் நடிக்க வைக்கப்பட்டுள்ளார் (‘பாடலில் பெயர் போடாட்டி என்ன? அதுக்குப் பரிகாரமாகத்தான் நடிக்க வைத்துள்ளேனே!’ என இயக்குநரின் சப்பைக்கட்டு எடுபடாமல் போனது, இண்டஸ்ட்ரியின் வளர்ச்சிக்கு நல்லது). கட்சியின் பெயரையும் நகைச்சுவையாக வைத்துள்ளாரே அன்றி, கதைக்கு உதவுவது போல் ஜாதிக்கட்சி பெயராக வைக்கவில்லை. இப்படத்தின் பலமும் பலவீனமும் நகைச்சுவைதான். ஒட்டுமொத்த கதைக்கு உதவும் நகைச்சுவையாக இல்லாமல், காட்சிக்கு மட்டும் உதவும் நகைச்சுவையாக் குறுகிய வட்டத்தில் சுருங்கிவிடுகிறது.
மூல நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மார்டின் லூதர் கிங்காக யோகிபாபு நடித்துள்ளார். கிடைப்பதற்கு அரியதான அவரது கால்ஷீட்டை அழகாகப் பயன்படுத்தி, படத்திற்குள்ளும் அழகாக அதைக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் சக்தி சிதம்பரம். செல்லம்மா கதாபாத்திரத்தின் முழு நீள நகைச்சுவைக்கு முயன்றுள்ளார் அபிராமி. மடோனா செபஸ்டியன் மட்டும் கொஞ்சம் சீரியஸ் கதாபாத்திரமாக, அசட்டு நகைச்சுவைகளை அதிகம் உதிர்க்காதவராகப் படத்தில் வருகிறார்.
படம் முழுவதும் ரப்பர் பிணமாக வருகிறார் பிரபுதேவா. பிணத்தை வைத்து அல்லாடும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத்தான் அணுகியுள்ளார் சக்தி சிதம்பரம். பிணமாக நடிக்கிறேன் என விரும்பிக் கேட்டு நடித்துள்ளார் பிரபு தேவா. பிரபு தேவா அன்றி வேறொருவர் இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்க முடியுமா என்பது ஐயமே! பிரபுதேவாவின் வளையத்தக்க உடல்தான் (flexibility), லாஜிக் இன்மையை மறக்க வைக்க உதவியுள்ளது.
எதைச் சொல்லி விளம்பரப்படுத்தியுள்ளனரோ, அதை ஏமாற்றாமல் அளித்துள்ளது ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம்.
[…] தொழில் ரொமான்ஸுடன் வெளியாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்திற்கும் கணேஷ் சந்திரா தான் […]