தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம்.
நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது.
பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி.
சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலமது. நோர்மன்களின் எழுச்சியால் ரோமானியப் படை மிகவும் பலவீனமடைந்திருந்த காலகட்டத்தில், அவர்கள் ஏன் பாரதத் தேசத்தைக் குறி வைத்து வரப் போகிறார்கள். சரி கமர்ஷியல் படத்துக்கு எதற்கு வரலாறு? ஆனால் சுவாரசியம் அவசியம்தானே!!
பாரதத் தேசத்தின் பக்கத்தில் இருக்கும் ஐந்து தீவுகளில் ஒன்றைப் பிடித்து, அதிலுள்ளவர்களை எல்லாம் கொன்று, போர்ப்பயிற்சி புரியலாம் என ரோமானிய தளபதி முடிவெடுக்கிறார். அதற்காகப் பெருமாச்சியைத் தேர்ந்தெடுக்கிறார். பெருமாச்சியின் தொழில் போராம்! பக்கத்திலுள்ள நான்கு தீவுகளுடன் இணக்கமாக வாழும் பெருமாச்சி, யாருடன் தொடர்ந்து போர் செய்து, அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்பது கேள்விக்குறி. ஏனெனில், முக்காடு தீவின் தொழில் வேட்டை என, ஒவ்வொரு தீவுக்கும் தொழிலையும் தெய்வத்தையும் சொல்கிறார்கள்.
கொடுவா முன்மொழியும் சதித்திட்டத்தின் மூலமாகப் பெருமாச்சியை வீழ்த்த நினைக்கின்றனர். அது சொதப்பிவிட, பெருமாச்சியின் எதிரியான அரத்தியோடு கைகோர்க்கின்றனர் ரோமானியர்கள். அரத்தியின் மன்னனான உதிரன், பெருமாச்சியுடன் உள்ள தனிப்பட்ட பகையைத் தீர்க்க வாய்ப்பாக எண்ணுகிறான். ஆனால் போருக்கு முன்பே தனது இரண்டு மகன்களை இழந்துவிடுகிறான். கடுப்பாகும் ரோமானியர்கள், “எங்களிடமே 25000 வீரர்கள் இருக்காங்க. நாங்களே பெருமாச்சியோடு சண்டை போட்டுக்கிறோம். நாங்க கொடுத்த தங்கக்காசுகளைக் கொடு” எனக் கேட்கிறார்கள். “கங்குவாவை, நான் தான்டா கொல்லுவேன். இடையில் யார் வந்தாலும் கொல்லுவேன்” என பேச்சுவார்த்தைக்கு வந்த மூன்று ரோமானியர்களைக் கொன்று விடுகிறார். மீதமிருக்கும் 24997 ரோமானிய வீரர்கள் அதோடு தலைமறைவாகிவிடுகின்றனர். அடேய்களா! இன்று கிளாடியேட்டர் 2 வெளியாகிறது என்பது எவ்வளவு பெரிய நகைமுரண்.
காக்கா புத்திசாலித்தனமான பறவையினம் என ஆதாரங்களோடு நிரூபிக்கின்றது விஞ்ஞானம். காக்கை வடிவில் வரும் முன்னோர்கள் முட்டாள்களில்லை என்பது பாரதத் தேசத்தில், மன்னிக்க படத்தின் அதிகப்படியான சத்தத்தால் ஏற்பட்ட சின்ன குழப்பம், தமிழ்நாட்டில் ஒரு நம்பிக்கை. இறந்த உடலைக் காக்கைகள் தீண்டினால் ஆன்மா பயணப்பட்டுப் போக வேண்டிய இடத்திற்குப் போகும் என்பது அரத்தித் தீவின் நம்பிக்கை. உதிரனின் மகனின் உடல்களை வந்து தீண்டாமல் அடம்பிடிக்கிறது காக்கைகள். உதிரன், “நான் கங்குவாவின் இதயத்தை என் கைகளால் பிய்த்து எறிகிறேன்” என காக்கைகளோடு ஒப்பந்தம் செய்கிறார். வில்லனின் அந்த டீலிங் பிடித்துப் போய், உடனே காக்கா கூட்டம் தரையிறங்குகிறது. நிஜமாலுமே புத்திசாலி காக்கைகளாக இருந்தால், ‘சண்டைக்குப் போகாத உதிரா!’ என்ற புத்திமதி கரைந்திருந்த வேண்டும். அந்தத் தீவில் காக்கைகளுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி, முறையே காக்கைத்தன்மையும் மனிதத்தன்மையும் இல்லாத கொலைவெறி ஜந்துக்களாகவே உள்ளனர் (காரணமே இல்லாமல் தமிழ்நாட்டுக் காக்கைகள் மீது திடீர் பாசம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை).
அடுத்து, பெருமாச்சி தீவுக்குப் போவோம். ஆதி நெருப்பைச் சுமக்கும் கருவில் உள்ள குழந்தை கூட போரையே தேர்ந்தெடுக்கும் என சூளுரைக்கிறார் கங்குவா. அந்த மக்களும் அப்படித்தான் தினவெடுத்தவராக உள்ளனர். உதிரன் போருக்கு வருவதைப் பார்த்ததும், இம்சை அரசன் 21 ஆம் புலிகேசி போல் பதறுகின்றனர். Seriously Perumachi guys! பயங்கரமான கருங்காட்டிற்குக் காடு கடத்தப்படும் கங்குவா, அங்கிருந்தே ஒற்றை ஆளாக அரத்தி படைகளைத் துவம்சம் செய்கிறார். குந்தலை தேசத்தில் நீரணையை உடைத்து ஒற்றையாளாகச் சாகசம் செய்யும் அமரேந்திர பாகுபலியால் மிகவும் கவரப்பட்டுள்ளார் இயக்குநர் சிறுத்தை சிவா.
ஹெலிகாப்டர், பஜூகா, மெஷின் கன் தாங்கிய ஆட்கள் என ஜீடோவைக் கடத்தும் கும்பல் தனியார் இராணுவத்திற்கு எதிராக ஒற்றை ஆளாகச் சாகசம் புரிகிறார் ஃபிரான்சிஸ் தியோடர். படக்குன்னு பைக்கில் வருகிறார், சடக்குன்னு ஃப்ளைட்டில் ஏறிவிடுகிறார். 954 வருடங்களுக்கு முன் பட்ட நன்றிக்கடனை அடைத்துவிடுகிறார். படம் சுபமாக முடிந்துவிட்டதே, இன்னொரு பாகம் இருப்பதாகச் சொன்னார்களே எனும் எண்ணம் எழும்போது, கங்குவாவைப் பழிவாங்க, bloody காக்கைகள் உள்ள அரத்தித் தீவிலிருந்து ரத்தாக்ஷன் சபதமேற்கிறான். “கங்குவா வந்துட்டான்” என்கிறான் ஜீடோவைக் கடத்த முயலுபவன். ஒரே ஆறுதல், அடுத்த பார்ட்டில் ரோமானியர்களும் பழிவாங்குகிறேன் என பார்வையாளர்களை டீஸ் பண்ணி நகைச்சுவை புரியாமல், தலைமறைந்தவர்கள் அப்படியே தொலைந்து போகின்றனர்.
முதற்பாதி சண்டைக் காட்சிகளும், பனிபிரேதசமான வெண்காட்டில் நிகழும் சண்டைக் காட்சிகளும், கண்ணுக்குள் துகள்கள் விழுவது போல் உள்ள 3டி எஃபெக்ட்ஸும் ரசிக்கவைக்கின்றன. படத்தின் அவற்றோடு ஒப்பிடுகையில் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் மிகவும் சுமார் ரகம். ஹாலிவுட்டினரைப் போல் ப்ரொடக்ஷன் வேல்யூ உள்ள படத்தை எடுத்துப் பார்க்கவேண்டுமென்ற ஆசையையும் ஓரளவு பழுதில்லாமல் முயன்று பார்த்துள்ளது ஸ்டுடியோ க்ரீன்.
பெருமாச்சியே, “கொல், கொல்” என ஒற்றுமையாகக் கூச்சலிடும் காட்டுமிராண்டிக் கூட்டமாக இருக்க, கங்குவா சூர்யா மட்டும் அடிக்கடி அறம்பாடுகிறார். ஆனால் அவரும் போர் என்றால் குதூகலமாகிவிடுவார். “எதிர் கொள்வோம்; எதிரி கொல்வோம்” என எதுகை மோனை பேசி சிரித்த முகமாக, எத்தனை எதிரிகள் வந்தாலும் சோர்வுறாமல் Killing Machine போல் கொல்கிறார். பார்க்கும் பார்வையாளர்கள் தான் அதிகப்படியான ஒலியால் சோர்ந்து போய் விடுகின்றனர்.