Shadow

ஹரிஹர வீரமல்லு விமர்சனம் | Hari Hara Veera Mallu review

முதல் பாகமான இப்படத்திற்கு, Sword Vs Spirit என உபதலைப்பு வைத்துள்ளனர்.

வாளின் (Sword) முனையில் மதத்தைப் பரப்பும் ஒளரங்கசீப்பிற்கு எதிராக, கோயில்களையும் இந்துத் தர்மத்தையும் காக்கும் பொருட்டு மனவலிமையுடைய (Spirit) ஹரிஹர வீரமல்லு புரட்சி செய்கிறார். ஹரிஹர வீரமல்லு சனாதனத்தை ஒழுகி (நெறிப்படி நடக்கும்) வாழும் ஒரு கற்பனையான கதாபாத்திரம். ஒளரங்கசீப்பை எதிர்த்து, அவர் வசமுள்ள கோகினூர் வைரத்தை, மீண்டும் கோல்கொண்டாவிற்கு ஹரிஹர வீரமல்லு கொண்டு வர நினைத்தால் எப்படியிருக்கும் என்ற புனைவே இப்படம்.

இந்தப் புனைவுக்கான களத்தை உருவாக்கியவர் படத்தின் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ் ஜாகர்லாமுடி. ஃபேன்டஸிக்கான இந்த அற்புதமான அடித்தளம் படத்தின் பலம். ஆனால் படத்தை ஒற்றை ஆளாக ஹரிஹர வீரமல்லுவையே சுமக்க வைத்திருப்பது படத்தின் ஆகப் பெரிய குறை. வைரங்களைத் திருட ஒரு குழுவினை உருவாக்குகிறார் வீரமல்லு. அவர்களில் ஒருவர் சித்து விளையாட்டுகளில் வல்லவரான விசான்னா. விசான்னாவாக நாசர் நடித்துள்ளர். ஆனால் அந்தத் திருட்டில் அவர் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அந்தக் குழுவில், ‘தூண்’ என கிண்டலாக அழைக்கப்படும் 7 அடி உயரமுள்ள ஓர் இஸ்லாமியக் கதாபாத்திரமும் இணைகிறது. அவர் திருட்டில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அந்தப் பாத்திரத்தில் நடித்தவர், நடிகை ஜெயசுதாவின் மகனான நிஹார் கபூராவர். அவரது தோற்றப் பொலிவு, நாயகனுக்கே சவால் விடுமளவு உள்ளது. அந்தக் கதாபாத்திரம், எல்லை காந்தி என அழைக்கப்பட்ட அப்துல் கஃபார் கானின் இன்ஸ்பிரேஷன் என பவன் கல்யாண் சொல்லியுள்ளார். ‘எங்களை ஓநாய்களிடம் எறிந்து விட்டீரே!’ என இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸாரிடம் கோபமுற்றவர் மதசார்பற்றவரான அப்துல் கஃபார் கான். ஆனால் படத்தில் நிஹார் கபூருக்கு ஒரே ஒரு வசனம் கூட இல்லை. கதைக்கும் எந்தப் பங்களிப்பும் அளிக்காமல் நாயகனுடன் சும்மா தேமேயென நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

தனது குருமார்களைக் காப்பாற்றவும், கோகினூர் வைரத்தை மீட்கவும் கோல்கொண்டாவில் இருந்து டெல்லியை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறார் வீரமல்லு. ஜிசியா வரியை நடைமுறைப்படுத்தவும், மதத்தைப் பரப்பவும் தக்காணப் பீடபூமி நோக்கி வருகிறார் ஒளரங்கசீப். அடுத்த பாகத்திற்கான உபதலைப்பு, ‘போர்க்களம்’ ஆகும். அதற்கு முத்தாய்ப்பாக, ஒரு பிரளயத்தில் ஒளரங்கசீப்பும், திரிசூல டேட்டூ அணிந்த வீரமல்லுவும், ‘இணைந்த கைகள் (1990)’ படத்தில் தலைப்பு போடப்படும் காட்சியில் வருவது போல் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். அடுத்த பாகத்திற்கான அருமையான லீடுடன் படம் முடிகிறது.

ஆனால் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா, அடுத்த பாகத்திலாவது ஒன்றைக் கவனத்தில் கொள்வது அவசியம். ராமபிரானுக்கே போரில் வெல்ல லட்சுமணன், ஜாம்பவான், அனுமான், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் உதவி தேவைப்பட்டது. ஆக, திரைக்கதையில் மற்ற கதாபாத்திரங்களையும் மனதில் கொண்டு, அவர்களையும் ஏதாவது பங்காற்ற வைப்பது மிக அவசியம். இப்படத்தில், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் மொக்கையான நகைச்சுவைக் காட்சிகளுக்கோ, அல்லது பவன் கல்யாணைப் புகழவோ, அல்லது ரேமண்ட்ஸ் மாடல் போல் நிற்கவோ மட்டும் செய்கின்றனர். ஒளரங்கசீப்பாக நடித்துள்ளார் பாபி தியோல். அப்படிச் சொல்வதை விட, இந்து மத விரோதி பாத்திரத்தை ஏற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும் (ஆனால் வரலாற்றுத் தரவுகளின்படி, ஒளரங்கசீப்பின் அரசவையில்தான், மற்ற மொகலாய மன்னர் ஆட்சியில் இருந்ததை விட அதிக ஹிந்துக்கள் முக்கிய பதவிகள் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் யாரும்  மதம் மாறியாகவேண்டும் என வற்புறுத்தப்படவுமில்லை).

சண்டை இயக்குநர்களான ராம் – லக்ஷ்மண் இணையின் மல்யுத்த சண்டைக் காட்சிகள், நிதி அகர்வாலின் கவர்ச்சி என தெலுங்குப் படங்களில் என்னென்ன எதிர்பார்க்கலாமோ, அவை அனைத்தும் படத்தில் உள்ளது. இவ்வகைமை படங்கள் அனைத்தும் தனது முன்னேராக பாகுபலியை அடியொற்றியே படமாக்கப்படுகிறது. ஆனால், ராஜமெளலி VFX எப்படி வேலை செய்கிறது, அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என தனது படக்குழுவினர் அனைவருடனும் இணைந்து கற்றுக் கொள்ள ஒரு மெனக்கெடல் போட்டு, அதன் பின் களமிறங்கினார். மேலும் நம்ப சாத்தியமற்ற காட்சிகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் சுவாரசியமாக எப்படிக் காட்சியாக்குவது எனும் வித்தை தெரிந்தவர் ராஜமெளலி. ஆனால் வீரமல்லு படத்தில், சில காட்சிகள் 2டி அனிமேஷன் கார்டூன் பார்ப்பது போலுள்ளது.

கோல்கொண்டாவின் அபுல் ஹாஸன் குதூப் ஷாவிற்காகக் கோகினூர் வைரத்தைத் திருட ஒப்புக் கொள்கிறார் ஹரிஹர வீரமல்லு. ‘உங்க மிரட்டலுக்குப் பணிந்து ஒத்துக்கலை’ என ஒத்துக் கொள்வதற்கொரு சுவாரசியமான காரணத்தைச் சொல்கிறார் பவன் கல்யாண். சிறப்பு! கீரவாணியின் பின்னணி இசை மிகச் சிறப்பு.