அமரன் என்றால் மரணமில்லாதவன் எனப் பொருள். வீரத்திற்காக அஷோக் சக்ரா விருது பெற்ற மேஜர் தெய்வத்திரு. முகுந்த் வரதராஜனை, தனது படத்தில் பாட்டுடைத் தலைவனாகயாக்கி, அமரனாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், படம் அமரத்துவம் எய்துவது இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் அதி அற்புதமான நடிப்பாலேயே! சின்ன சின்ன உணர்ச்சிகளையும், முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அமரனை ஒரு காதல் படமாக மாற்றிவிடுகிறார்.
படத்தின் முதற்பாதியின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் முகுந்த் வரதராஜனின் அம்மா கீதாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். லப்பர் பந்து படத்தில், கெத்து தினேஷின் அம்மாவாக நடித்து மனதில் நின்றவர், மீண்டும் ஒருமுறை பிரமாதப்படுத்தியுள்ளார். இரண்டு அம்மாக்களும் தான் எத்தனை வேறுபாடுகள் உடற்மொழியில், வசன உச்சரிப்பில்! ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், இது போன்று தொடர்ந்து நாயகனின் அம்மா பாத்திரத்தில் தோன்றி, ஒரே மாதிரியான நடிப்பை வழங்கி வந்தார். இது, கீதா கைலாசத்திற்கான நேரம். அழகாகப் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார்.
முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கல்லூரி மாணவராக, லெஃப்டினென்ட்டாக, கேப்டனாக, மேஜராக என ஒவ்வொரு கட்டத்தையும் தன் நடிப்பால் வேறுப்படுத்திக் காட்டியுள்ளார். Stalking ஹீரோவாக இருப்பதிலே பெருமை அடைந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனிடமிருந்து, கடைசியாக வந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து இப்படமும் மாறுபட்ட முயற்சியாக வந்திருப்பது ஆறுதலை அளிக்கிறது. மீண்டும் பழைய பாதைக்குத் திரும்ப மாட்டாரென நம்புவோமாக! குரங்கு பெடல், கொட்டுக்காளி என அவர் தயாரிக்கும் படங்களும் மிகவும் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன. பொங்கலுக்கு அயலான், தீபாவளிக்கு அமரன் என இவ்வருடம் அவருக்குச் சிறப்பாகவே அமைந்துள்ளது.
முகுந்த் வரதராஜன், கமலின் ரசிகரென இந்து ரெபேக்கா வர்கீஸ் தனது பேட்டியில் சொல்லியுள்ளார். மேஜராகி ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸிற்குப் பொறுப்பேற்கும் சிவகார்த்திகேயனின் அறையில், “அன்பே சிவம்” என ஒட்டப்பட்டிருக்கும். வேறு ரெஜிமென்ட்டைச் சேர்ந்த கன்னட வீரர், அன்பே சிவம் பாடலைக் கன்னடத்தில் பாடுவார். ‘யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை?’ என்பதுபோல், இந்தப் பதத்தை உள்ளூற உணர்ந்தவர்களால் கொலை புரியும் வேலையில் எவ்வாறு நீடிக்கமுடிகிறது என்ற சித்தாந்த* நகைமுரண் எழுகிறது. சக மனிதர்கள் மீதான அன்பு என்பதில் உடன்பாடுள்ள நாயகன், சக மனிதர்கள் யாரென வரையறுக்கும் அரசியலுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறார். காஷ்மீரின் தொடர் பதற்றத்தைப் பற்றி நாயகனின் தந்தை கேள்வி எழுப்புகையில், “பேச வேண்டியவங்க உட்கார்ந்து பேசணும்ப்பா” எனக் கடந்து விடுகிறார் நாயகன். ஆனால், உலகில் நடக்கும் எந்த மக்கள் போராட்டங்களுக்கும், பேசித் தீர்வு காண முயலுவதில்லை அரசாங்கங்கள். பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அதிகாரத்தால் மட்டுமே பதில் சொல்ல முற்படுகிறது. அந்த பதில் எப்பொழுதும் வன்முறையாகவே இருக்கும் பட்சத்தில், உச்சி மீது வானம் இடிந்து விழுவது போல் பதற்றம் மட்டுமே சூழும் (*தனி மனிதன் கண்டடையும் சித்தாந்தம் பலவீனமானது; அவற்றைத் தாய்நாட்டின் பேராலோ அல்லது ஊதிப் பெருக்கப்பட்ட வேறு வெற்றுப் பெருமையின் பேராலோ வளர்க்கப்படும் குழு யக்ஞத்தை ஊக்குவிப்பதன் மூலம் தகர்த்துவிடலாம் எனும் ஆபத்தான மானுட சாதுரியத்திற்குப் போர்களும், எல்லைப் பதற்றங்களுமே சாட்சி).
ஒரு பக்க சார்பை மட்டுமே பேச சுதந்திரம்* உள்ள காலத்தில் இருக்கிறோம். பொதுவாகவே political correctness-ஐக் குறித்த விவாதத்திற்குள் செல்வதையே இந்திய அரசோ, அதன் சிஸ்டமான இராணுவமோ, வியாபார நோக்கைப் பிரதான அளவுகோலாகக் கொண்ட படக்குழுவோ விரும்பாது (* ‘இல்லன்னா மட்டும் அறுத்துத் தள்ளிடுவாங்களா?’ என்ற கேள்விக்குக் கம்பெனியிடம் பதிலில்லை). அதனால் அதை எதிர்பார்ப்பதே அனர்த்தம். மக்கள் தினசரி எதிர்ப்பட நேரிடும் காவல்துறையின் வன்முறையையே உச்சி முகர்ந்து முடிக்காத சினிமா உலகம், இராணுவத்தை அதீத மிகையுணர்ச்சியுடன் அணுகுவதைச் சாமானியத்தில் நிறுத்தப் போவதில்லை. எனினும் துப்பாக்கிக்கும் அமரன்க்குமே 12 வருடங்கள் இடைவேளை என்பது ஆறுதலை அளிக்கிறது. பனியில்லாக் காஷ்மீர், கட்டளையை மீறித் தன்னிச்சையாகச் செயற்படும் மேஜர் என்னும் பூச்சுற்றல்கள் எல்லாம் புஸ்வானம் விட்டுக் கொண்டாடப்படும் தீபாவளிக்கு வலு சேர்க்கும் விதம் அமைந்துள்ளன.
இப்படத்தை நாயகியின் பார்வையில் இருந்து தொடங்கி முடித்திருப்பது நல்லதொரு திரைக்கதை உத்தி. கடலுக்கும் வானத்துக்கும் உள்ள தொலைவு தான் தனக்கும் நாயகனுக்கும் உள்ள இடைவெளி என்கிறார் சாய் பல்லவி. படத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள எமோஷன்ஸ், வீரம், தியாகம் எனும் பெயரில் நடக்கும் அயோக்கியத்தனங்களை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன. இருக்கும் ஒரு வாழ்க்கையில், ரெபேக்கா வேண்டுவது ஒரு எளிய மகிழ்ச்சியான வாழ்க்கையை. அது long distance relationship-இலேயே தொலைந்து போக, கிடைக்கும் சிற்சில தருணங்கள், அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சாய் பல்லவி மிக அற்புதமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அலைபேசி எண்ணை நாயகனுக்குத் தந்த கணம் முதல், அசோக் சக்ரா விருதினை வாங்கும் வரை சாய் பல்லவியின் ஆவர்த்தனம் அடிபொலி! மிகச் சிறந்த நடிகைக்கான விருதுகள் குவியும்.
ஆணின் ஒப்பற்ற வீரத்தைப் போற்றுவது புறநானூறு காலத்து முதலே வழக்கம். இதற்காகவே, பாடாண் திணை எனும் சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ளது தமிழ் இலக்கியம். சிறந்த தலைமைப் பண்புகளுக்காகவும், வீரத்திற்காகவும், சீரிய திட்டமிடும் திறமைக்காகவும் அஷோக் சக்ரா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றும் முயற்சியில், 31 வயதில் உயிரை இழந்த முகுந்த் வரதராஜன்க்கு நல்லதொரு ட்ரிப்யூட் இப்படம். ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை, மேக்கிங், ப்ரொடக்ஷன் வேல்யூ, திரைக்கதை என படத்தில் அத்தனை அம்சங்களும் சிறப்பாக வந்துள்ளன. ஷிவ் ஆரூரும், ராகுல் சிங்கும் எழுதிய ‘India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. வழக்கமான சினிமா சித்தரிப்புகளைச் சற்றே தவிர்த்து, மண்ணுக்கான போராளிகளாகக் காட்டியுள்ளார். ரங்கூன் படத்திலிருந்து அமரனுக்குப் பயணப்பட்டுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் தெரியும் மாற்றம் ஆச்சரியப்பட வைக்கிறது. பெரிய படங்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்த நிலையில், அமரன் அந்தக் குறையைப் போக்கியுள்ளது.