மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர்.
எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது.
படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும் தொங்குபாலத்தில் மண்ட்ரில்ஸ் (Mandrills) வகை குரங்குக் கூட்டத்திடம் இருந்து சாகசம் என படம் நிறைவான சாகச அனுபவத்தை அளிக்கிறது. வார்த்தைகளைத் தேடி நிதானமாகப் பேசும் வனவிலங்கியல் நிபுணர் பின் கருப்புக் குதிரையாக மாறி செய்யும் சாகசத்தை உணர்வுபூர்வமாக முடித்துள்லனர்.
1995 ஜுமான்ஜியில், விளையாட்டின் களம் என்பது கதாபாத்திரங்களின் வாழ்விடமாக இருக்கும். குரங்குகள், காட்டு விலங்குகள், வேட்டைக்காரன் என அனைவரும் நிஜ உலகிற்குள் வருவார்கள். 2005 இல் வந்த ஜதுரா படம் வான்வீதியிலும், 2017 இல் வந்து ஜுமாஞ்சி: வெல்கம் டூ ட்தி ஜங்கிள் காட்டிலும் கதை நிகழும். தி நெக்ஸ்ட் லெவல் படமோ, பாலைவனம், பாலைவன நகரம், பள்ளத்தாக்கு, பனி அடர்ந்த மலையிலுள்ள கோட்டை என படம் பயணிக்கும். ‘இனி ஜுமான்ஜி விளையாட்டை விளையாடக் கூடாது’ என சிறுவர்கள் முடிவெடுத்தாலும், படத்தின் மிட் க்ரெடிட் காட்சியில், நெருப்புக்கோழிகள் வீதிக்குள் ஓடுவதைத் திகிலுடன் பார்ப்பார்கள். ஆக, அடுத்த பகுதி, முதல் பாகத்தினைப் போலவே கதாபாத்திரங்களின் வாழ்விடங்களிலே கதை நிகழ்வதாக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.