
ஸ்டீஃபன் நெடும்பள்ளி, P.K.ராமதாஸின் மஹன் ஜதின் ராமதாஸைக் கேரளாவின் முதல்வராக, இப்படத்தின் முதல் பாகமான லூசிஃபரில் நியமித்திருப்பார். ஐந்தாண்டுகளில் ஊழலில் திளைக்கும் ஜதின், தன்னைத் தற்காத்துக் கொள்ள வலதுசாரி தேசியக் கட்சியான ‘அகண்ட சக்தி மோர்ச்சா (ASM)’ உடன் கூட்டணி வைக்கிறார். கடவுளின் நாடான கேரளாவைக் காப்பாற்ற ஸ்டீஃபன் நெடும்பள்ளியை அழைக்கிறார் கோவர்தன் எனும் விசில்-ப்லோயர் (Whistle blower). தேவபுத்திரனிடம் இருந்தும், பஜ்ரங்கி பாபாவிடம் இருந்தும், தெய்வத்திண்ட தேசத்தைக் காப்பாற்ற சொர்க்கத்தில் இருந்து துரத்தப்படும் லூசிஃபர் எழுந்தருள்கிறார். லூசிஃபரின் வருகையை, தலைக்கீழாக விழும் சிலுவையின் (L) மூலமாகக் குறியீடாக உணர்த்திருப்பார்கள். மேலும், கேரளக்காட்டில் பிரியதர்ஷினியைக் காப்பாற்ற சாத்தான் தோன்றி விட்டான் என்பதை, மின்னல் தாக்கி எரியும் மரத்தின் கிளை முறிந்து L வடிவில் தீப்பற்றி அம்மரம் எரிந்து கொண்டிருப்பதாக ரசனையாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
குஜராத் கலவரத்தை ஒட்டிய படத்தின் தொடக்கம் பாதிப்பை ஏற்படுத்தும்வண்ணம் மிக அழுத்தமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சிறப்பான காட்சிகளாக அதைச் சொல்லலாம். வன்முறையின் மூலமாகக் கட்டமைக்கப்படும் வலதுசாரி இயக்கங்களின் எழுச்சியை அழகாகச் சித்தரித்துள்ளனர். அதன் பின், படம் அவசர கதியில் பயணிக்கிறது. ஜதின் ராமதாஸின் மனமாற்றத்திற்குக் காரணமென்ன, அவர் என்ன பின்னடைவுகளைக் கேரளாவிற்குக் கொண்டு வருகிறார் என்ற விவரணைக்குள் எல்லாம் செல்லாமல் எளிய வசனங்களின் வாயிலாகக் கடந்துவிடுகின்றனர். அதன் பின், அப்ராம் குரேஷி நடவடிக்கைகள் பற்றிய மோகன்லாலின் ஸ்லோ-மோஷன் பில்டப்களிலேயே முதற்பாதி முழுவதும் வெவ்வேறு நாடுகளில் பயணிக்கிறது.
பஜ்ரங்கி பாபாவாக அபிமன்யு சிங்கிற்கு நல்லதொரு கதாபாத்திரத்தினை அளித்துள்ளனர். முன்னாவாக நடித்துள்ள சுகந்த் கோயலும் பிரமாதமான கதாபாத்திரத் தேர்வு. மாநிலங்களைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு மேற்கொள்ளும் யுக்தியைப் படத்தில் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். அதி சக்திமிக்க அப்ராம் குரேஷிக்கு எதிராகக் களமாடுமளவு எதிரிகளே இல்லை இப்படத்தில். படத்தொடக்கத்தைத் தவிர்த்து, வலதுசாரி வில்லன் கூட வழக்கமான வில்லனாகப் பொலிவிழுந்து விடுகிறார். ஏன் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவனான கபூகா கூட காமெடி பீஸாகவே வருகிறார். இந்தக் குறையைப் போக்கும் விதமாக, அடுத்த பாகத்திற்கான லீடில் ஒரு வலுவான சீன எதிரியை அறிமுகம் செய்துள்ளனர்.
தனது மாளிகையில் இசுலாமியர்களுக்கு இடமளித்த சுபத்ரா பென்னின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையிலும், மதவாதச் சக்திகளை அடையாளம் காட்டும் விதமாக பஜ்ரங்கி பாபாவை சாத்தான் எக்ஸ்போஸ் செய்வார் எனப் பார்த்தால், காதும் காதும் வைத்தாற்போல் ஒரு சிதிலமடைந்த கோட்டைக்குள் வைத்து மிகச் சாதாரணமாகப் பழிவாங்கிவிடுகிறார். ‘இதை யார் வேண்டுமானாலும்தான் செய்வார்கள் ஸ்லோமோஷன் சாத்தானே! பணபலமும் அதிகாரமும் இருக்கும் அப்ராம் குரேஷியாகிய தாங்கள் என்னத்துக்கு?’ என்ற கேள்வி பலமாக எழுகிறது. இந்த மொக்கை கொலையைச் செய்வதற்கு ஏன் சாத்தான் மரித்துவிட்டார் என உலகை நம்பச் செய்வதற்கு ஓர் உருப்படியில்லாத நாடகத்தை மேற்கொண்டார் என்றும் தெரியவில்லை. பிரம்மாண்டத்தை மட்டும் நம்பி சுவாரசியமான கதைசொல்லலில் சமரசம் செய்துவிட்டனர முரளி கோபியும், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரனும்.