

மாரீசன் என்பது ராமாயணத்தில் வரும் பொன்னிற மாயமானைக் குறிக்கிறது. எப்படி மாரீசன் ராமனை ஏமாற்றித் தன் மாயத்தில் விழ வைக்கிறாரோ, அப்படி வேலாயுதம் பிள்ளையை ஏமாற்றி அவரது பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் சிறையிலிருந்து விடுதலையாகும் தயாளன். மாரீசனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.
படத்தின் நாயகன், வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலு தான். திரையில் அவரது பெயர்தான் முதலில் வருகிறது. வடிவேலுவின் குணசித்திர நடிப்பை, மாமன்னனில் மாரி செல்வராஜ் அழகாக வெளிக் கொண்டு வந்திருப்பார். நடிப்புப் பேரரக்கனான ஃபகத் ஃபாசிலையும், வடிவேலுவையும் முழுப் படத்திலும் காட்சிகளில் ஒன்றாகக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்ற புள்ளியில்தான் மாரீசன் தொடங்கியதாக இயக்குநர் சுதிஷ் சங்கர் கூறியுள்ளார். அவர்கள் சந்திக்கும் புள்ளியில் தொடங்கும் சுவாரசியம், இடையில் கொஞ்சம் திகட்டுமளவு மெல்ல நிதானித்து, வேலாயுதம் பிள்ளையின் அகம் அம்பலமாகும்போது அதிகரித்து தீவிரமான விஷயத்தைப் பேசும் படமாய் முடிகிறது. இவர்கள் இருவரும் சட்டகத்தில் இருக்கும்போதே, இவர்களை மீறி விவேக் பிரசன்னாவால் தன் இருப்பை மிக அழுத்தமாகத் திரையில் பதிய முடிகிறது. தயாளனாக வழக்கம்போல் ஈர்த்துள்ளார் ஃபகத் ஃபாசில்.
கூண்டில் இருந்து உயிர் தப்பி வெளியோடும் ஒரு எலி, பாம்பை நோக்கி ஓடுகிறது. படத்தின் தொடக்கமே இந்த உருவகக் காட்சியில் இருந்துதான் தொடங்குகிறது. சக மனிதனை ஏமாற்ற நினைப்பவன், ஏமாற்ற நினைப்பவனைத் தன் ஆட்டத்திற்கு ஆட்டுவிப்பவன் என இருவருமே மாரீசன் தான் என்கிறார் இயக்குநர் சுதிஷ் சங்கர். அதை நிரூபிக்கும் வகையில், ரம்மியமானதொரு நீர்நிலையின் கரையில் அமர்ந்து, ‘மாயா பஜார்’ படத்தின் ‘ஆஹா, இன்ப நிலாவினிலே’ பாட்டில் வரும் வரியான ‘ஆடிடுதே! விளையாடிடுதே!’ என்பதை மாற்றி மாற்றி சுருதி ஏற்றிப் பாடுகின்றனர் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது. ‘குத்தம் பண்றது அவனுக்கு ஜாலின்னா, அவனைக் கொல்றது எனக்கு ஜாலி’ என்று முக்கியமான கட்டத்தில் ஒரு வசனம் இடம்பெறுகிறது. கம்பரின் மாரீசனோ, ‘அறம் நோனார், ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? எல்லாம் இலர் அன்றோ?’ என ராவணனுக்கே பாடமெடுக்கும் நல்லவர். எது அறம் என்பதில் ஆளாளுக்குத் தன் வசதிக்கேற்ப ஒன்றைப் பாவிப்பார்கள். ஆனால், சட்டரீதியாகத் தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனப் பெற்றோர்களைத் தூண்டிப் போராடும் உளவியலாளர் மீனாட்சி, திடீரென, சம்பந்தப்பட்டவர்களைக் கொல்வதுதான் தீர்வு எனும் முடிவுக்கு வருவதை ஏற்க சிரமமாக உள்ளது. ஒருவரது மறதி, அவர் நம்பும் அறத்தை மழுங்கடிக்காது.
படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எங்கே கதையை மறந்திருப்பார்களோ எனப் பதற்றத்துடன் பல காட்சிகளை மீளாக ஓடவிட்டுள்ளனர். துருவங்கள் பதினாறு படத்தைத் தொகுத்த ஸ்ரீஜித் சாரங் தான் படத்தொகுப்பாளர் என்பதை நம்பவே முடியவில்லை. கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படைப்பு இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் V.கிருஷ்ண மூர்த்தி. ‘வயோதிகமே ஒரு சிறை தான். அதற்கு வீடோ, முதியோர் இல்லமோ, ஜெயிலோ வேறுபாடு இல்லை’ என சில அற்புதமான வசனங்கள் இடம்பெற்றாலும், அவை காட்சிரூபமாக அழுத்தம் பெறாமல் வார்த்தைகளாக நீர்த்துப் போகிறது. இன்னும் இயல்புக்கு நெருக்கமாய் வந்திருக்க வேண்டிய படம், சற்று மேலோட்டமான அணுகுமுறையால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது. உதாரணத்திற்கு அல்சீமர்ஸால் பாதிக்கப்பட்டவரது வாழ்க்கையும், அவருக்குத் துணையாக இருப்பவரின் மனநிலையும், ஃப்ளாஷ்-பேக் கதையைச் சொல்ல மட்டுமே பயன்பட்டுள்ளதே அன்றி, அவர்களது வாழ்க்கைக்குள் பெரிதாகச் செல்லவில்லை. மறதி வேலாயுதம் பிள்ளை – கள்ளன் தயாளனது உறவும் பயணமும், தயாளன் இனி தான் திருடுவதில்லை என்று யோசிக்கும் பொழுது முழுமை பெற்றிருக்கவேண்டும். மீண்டும் அது வசன உதிர்ப்பாக மட்டுமே உள்ளது. யாவற்றையும் தங்களது நடிப்பால் மறைத்து மாயம் செய்து விடுகின்றனர் ஃபகத் ஃபாசிலும், வடிவேலுவும்!


