

நாற்பதாவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது, தானொரு மகவை ஈன்றெடுக்க வேண்டுமென விரும்புகிறார் வித்யா. ஆனால், இந்த வயதிற்கு மேல் பெற்றோராவதை விரும்பாத அருண், மனைவி வித்யாவின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறார். இது, அவர்களைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறது. வித்யாவின் விருப்பம் நிறைவேறியதா, அருண் ஏன் சம்மதிக்கவில்லை, கணவன் – மனைவி சண்டைக்குத் தீர்வென்ன என்பதற்கான விடையுடன் படம் முடிகிறது.
தன் கணவனை வழிக்குக் கொண்டு வர வித்யா கையிலெடுக்கும் ஆயுதம் கவர்ச்சியாகும். பெண் இயக்குநர் படமெடுத்தால், பெண்ணின் உணர்வுகளை அழுத்தமாகப் பேசக்கூடிய வாய்ப்பு அமையும் என்பதைப் பொய்த்துப் போகச் செய்துள்ளார் வனிதா. பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கி வணிகத்திற்குப் பயன்படுத்தும் (exploit) உரிமை ஆண் இயக்குநர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை என ஆணாதிக்க உலகத்திற்குச் சமத்துவத்தை இடித்துரைத்துள்ளார். கவர்ச்சி, நிர்வாணம் போன்றவை காட்சிப்படுத்தும் விதத்தில்தான் கலையாகவோ, ஆபாசமாகவோ மாறுகிறது. இயக்குநர் வனிதா பின்னதைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வனிதாவின் அம்மாவாக ஷகிலா நடித்துள்ளார். அவரையே நினைத்து உருகுபவராகப் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் வருகிறார். ஷகிலாவின் இளம்வயது புகைப்படத்தில் கண்விழிக்கும் அனுமோகன் வீட்டு வேலைக்காரன், ஷகிலாவை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான். ஷகிலாவின் அண்ணனாக நடித்திருக்கும் அனுமோகன் வேலைக்காரனின் மனைவி கும்தாஜை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறார். இப்படியாகப் பின்பாதியிலும், உணவின் மீது அதீத பிரியமுள்ள வனிதாவையும், அவள் தங்கை ஆர்த்தியையும் கிண்டலடித்து முன்பாதியிலும் நகைச்சுவை என்ற பெயரில் அலைக்கழித்துள்ளனர்.
படத்தில் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கலாம். ஆனால், ஃப்ளாஷ்-பேக்கில் வித்யாவிற்கும் – அருணிற்குமான காதல்கதை என பதார்த்தமாக விட்டுக் கொடுத்த கண்டமனூர் ஜமீன் கதையைச் சொல்லியுள்ளதை மட்டும் ஜீரணிக்க முடியவே இல்லை. ‘போத கண்ணு’ எனும் பாடலில், ‘நாட்டாமை பெத்த அரக்கியே!’ என்றொரு வரி வருகிறது. நாட்டாமை படத்தில் விஜயகுமார், பெண்ணைக் கெடுத்தவனே கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லையெனத் தன்னைப் பலாத்காரத்திற்கு உட்படுத்திய அருணையே மணந்து, தனது தந்தையின் தீர்ப்பைக் கட்டளையாகப் பாவித்து 31 வருடங்களுக்குப் பிறகு அமுல்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதீதமான பாவனைகளுடைய அருணாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இக்கூட்டத்தில், ஸ்ரீமன்க்கு மட்டும் விதிவிலக்காக, உண்மையிலுமே ‘கெளரவத்’ தோற்றம் வாய்த்துள்ளது.
‘சிவராத்திரி’ பாடலுக்கு நடிகை கிரண் ரத்தோர் நடனமாடியுள்ளார். இப்பாடலோடு கவர்ச்சி கோட்டாவை முடித்துத் திருப்திப்பட்டுத் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படம் கொஞ்சமேனும் பொருட்படுத்தத்தக்கதாக மாறியிருக்கும்.

