

ஆடு திருடனான மாடசாமிக்கும், மந்திரம் – தந்திரம் தெரிந்த அல்லிக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் சமய சந்தர்ப்பம் சாதகமாக இல்லாததால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.
மையல் என்பது மயக்கம் அல்லது மோகம் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன். மைனா படத்தில் கிளைச்சிறை பொறுப்பதிகாரி பாஸ்கராக நடித்திருந்த சேது, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மையல் படத்தின் இயக்குநர் APG ஏழுமலை, மைனா படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் ஆவார். மையலின் முடிவும் மைனா படத்தை ஒத்தே அமைந்திருந்ததை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
கிணற்றில் விழும் மாடசாமிக்கும், அவரைக் காப்பாற்றும் அல்லிக்கும் இடையே மலரும் காதல் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் முதற்பாதியில் வரும் இந்த அத்தியாயம் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. சேதுவும், அல்லியாக நடித்துள்ள சம்ரிதி தாரா அசத்தியுள்ளார். ஊருக்கு வெளியே விளிம்பு நிலை வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் அகத்தை மிகக் கச்சிதமாகப் பிரதிபலித்துள்ளார்.
மையக் கதாபாத்திரங்களின் காதல் கதைக்கு இணையாக, ஓர் இரட்டைக் கொலையும், அதைச் செய்த நபர்களைப் பற்றியும் ஒரு கிளைக்கதை பயணிக்கிறது. அது வழக்கமான கதையாகி மனதில் பதியாமல் போகக் கதாபாத்திரத் தேர்வுகளும், பலவீனமான திரைக்கதையுமே முக்கியக் காரணங்களாக உள்ளன. இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மைனா போல் இப்படமும் ரசிகர்கள் மனதில் வட்டமடித்திருக்கும்.

