
தனுஷின் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம்.
நிலாவைக் காதலிக்கிறான் பிரபு. நிலாவின் தந்தை கருணாகரனது கடைசி நாட்கள், அவர் ஆசைப்பட்டப்படி அமையவேண்டுமென நிலாவை விட்டுப் பிரிகிறான் பிரபு. பிரபு ஏன் பிரிந்தான் எனத் தெரியாமல் கோபம் கொள்ளும் நிலா, அவனுக்குத் தன் கல்யாண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். கோவாவில் நடக்கும் அத்திருமணத்திற்குச் செல்கிறான் பிரபு. அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமான காதல் கதை என தலைப்பிற்குக் கீழாகவே உபதலைப்பு போட்டுவிடுகின்றனர். முதற்பாதியும் அப்படியே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், கோவா சென்றடைந்த பின், படத்தின் கலகலப்பு அதிகமாகிறது. படத்தின் தொடக்கம் முதலே மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருந்தாலும், இரண்டாம் பாதியில் அதகளம் புரிகிறார்.
குடி, பார்ட்டி, காதல் என்பதைத் தாண்டி படத்தின் கதாபாத்திரங்கள் எதையுமே யோசிப்பதில்லை. தன்னுடைய காதலி இன்னொருத்தனைக் கல்யாணம் செய்வதால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனச் சொல்கிறார் நாயகன். குடித்ததும், ‘கல்யாணத்தை நிறுத்ததான் வந்தேன்’ என இன்னொரு கதை சொல்கிறார். குடித்தால் ஒரு கதை, போதை தெளிந்தால் வேறொரு கதை.
நகைச்சுவைக்காக வெங்கி – ஷ்ரேயா எனும் இணையைப் பயன்படுத்தியுள்ளனர். உள்ளபடிக்கு அவர்கள்தான் படத்தில் இருக்கும் உருப்படியான இருவர். வெங்கியாக வெங்கடேஷ் மேனனும், ஷ்ரேயாவாக ரபியாவும் நடித்துள்ளனர். ரபியாவின் பாத்திரமும் நடிப்பும் மிக மெச்சூர்டாக உள்ளன. மையக் கதாபாத்திரங்களான பிரபுவும், நிலாவும் முதற்பாதியில் அழகான காதலர்களாகவும், இரண்டாம் பாதியில் குழப்பர்களாகவும் உள்ளனர். ‘இருக்கு, ஆனா இல்ல’ என ஒரு வழி செய்து விடுகின்றனர். இக்குழப்பத்தில் இருந்து ஆசுவாசம் அளிக்கிறார் அஞ்சலியாக நடித்துள்ள ரம்யா ரங்கநாதன்.
நிலாவின் தந்தை கருணாகரனாக நடித்துள்ள சரத்குமாரின் கெளரவ தோற்றம் ரசிக்குபடி உள்ளது. நிலாவாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். ஆனால் நாயகி எனச் சொல்ல முடியாத அளவுக்கு, பிரியா பிரகாஷ் வாரியர், ரபியா, ரம்யா என படத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்கள் ஆங்காங்கே ஸ்கோர் செய்கின்றனர். பிரபுவாக நடித்துள்ள பவிஷ் நாராயணின் குரல், தனுஷின் குரலைப் பிரதியெடுத்தது போலவே ஒலிக்கிறது. அனிகா பெரும் கோடீஸ்வரரின் மகளாக வருகிறார். ஆனால் அனிகாவை விட, முகத்தில் பணக்காரக் களை பவிஷிடம்தான் அதிகம் தெரிகிறது. பவிஷ், பார்ப்பதற்கு போஷாக்கான தனுஷ் போல் உள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளன. லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாய் ஜொலிக்கிறது. படத்தை ஜாலியாக முடித்து, Love is in the air என அடுத்த பாகத்திற்கான ‘லீட்’ கொடுத்துள்ளார் தனுஷ்.