கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது.
வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி ஒன்றின் மீது மோதி விடுகிறார் உத்ராவதி. அப்பன்னிக்குட்டியின் மீது மீண்டும் வண்டியில் மோதினால்தான் நடக்கும் நல்லது தொடரும், இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனச் சொல்லி விடுகிறார் கோடாங்கி.
திட்டாணிக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமெனில், ராணி எனும் பன்னிக்குட்டியை அவன் பாதுகாக்க வேண்டுமெனப் பெண்ணின் அப்பா சொல்லிவிடுகிறார். திட்டாணி, ராணிக்கு சிறு கீறல் கூட விழாமல் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க, உத்ராவதி எப்படி அப்பண்ணியின் மீது இடித்தான் என்பதே படத்தின் கதை.
திட்டாணியாக யோகி பாபு, உத்ராவதியாக கருணாகரன் நடித்துள்ளனர். கருணாகரன், பன்னிக்குட்டி மீது மோத உதவும் நண்பர்கள் ப்ரூனேவாக ராமரும், கார்/ ஆட்டோ/ மினி ட்ரக் (குட்டியானை) ஓட்டும் பாண்டியாகத் தங்கதுரையும், பூசாரியாக சிங்கம்புலியும், கோடாங்கியாக லியோனியும் நடித்துள்ளனர். நன்றாகக் குடித்துவிட்டு ஊறுகாயைத் தடவுவது போல் ஒரு ரியாக்ஷனுடன் மொபைலை எடுத்து பரிகாரம் சொல்லுபவராக லியோனி நடித்துள்ளார். இயக்குநர் அனுசரண், நகைச்சுவைக்கு முயற்சி செய்திருந்தாலும் செல்ஃப் எடுக்கவேயில்லை. சுழல்: தி வோர்டெக்ஸ் தொடரின் இறுதி நான்கு அத்தியாயங்களை எடுத்தவர் என்பதை நம்ப சிரமமாக உள்ளது. உள்ளடக்கத்தில் எந்த டீட்டெயிலுங்கும் இல்லாமல் மிக மேம்போக்காக, அதுவும் மூடநம்பிக்கையை மையக்கருவாகக் கொண்டுள்ளது. ரவி முருகையா கதையின் இன்னும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும்.
படத்தோடு பார்வையாளர்களை இணைக்கும் அம்சம் ஏதுமில்லாததால், வெறுமனே திரை முன் அமர்ந்திருப்பது போல் உள்ளது. கருணாகரனின் பிரச்சனைகளில் ஏதோ ஒன்றாவது, சாமானியனுக்கு வரும் தொந்தரவுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனாலும், படத்தில் இழையோடும் ஒரு வித யதார்த்தம் சின்னஞ்சிறு மேஜிக்கைச் செய்கிறது. திரை முழுவதும் நிறைந்துள்ள திராவிட முகங்களும், சதீஷ் முருகனின் ஒளிப்பதிவுமே அதற்குக் காரணம். ரசித்து அசை போட படத்தில் எந்தத் தருணமும் இல்லாவிட்டாலும், எரிச்சலுற வைக்கும் அம்சங்கள் இல்லாததால், படம் கடும் விமர்சனங்களில் இருந்து லாகவமாகத் தப்பித்துக் கொள்கிறது.