Search

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும்.

டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, ஈர்க்கவோ இல்லை. கிறிஸ்டியன் பேல் போலொரு நடிகரை வில்லனாக ரசிக்கத்தக்கும் வகையில் பயன்படுத்தாதது படத்தின் குறை. ‘தோர்: ரக்னோரக்’ படத்தை இயக்கிய டைக்கா வாட்டிட்டி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முயற்சி செய்திருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை.

கடவுளரின் உலகத்தில் உதவி கேட்கப் போகும் காட்சில், ஜீயஸ் கடவுளாக வரும் ரஸல் க்ரோவ் கதாபாத்திரத்தைக் கோமாளியாக உருவாக்கியுள்ளனர். கடவுளரின் உலகத்தில், ஜீயஸைத் தவிர அனைவரும் மிக்ச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கதை, கோர்வையாகப் பயணிக்காமல் அதன் போக்கிற்கு சகட்டுமேனிக்குப் பயணிக்கிறது. ஜீயஸால் ஒரே புண்ணியம், அடுத்த பாகத்திற்கான வில்லனாக அதீத பலம் கொண்ட ஹெராக்கிள்ஸ் (Heracles) வரப் போவதுதான்.

தோரின் சுத்தியலான மிலோனிரைச் சுமந்த சூப்பர் ஹீரோ மைட்டி தோராக நட்டாலி போர்ட்மேன் நடித்துள்ளார். அவருக்கும், தோருக்குமான கெமிஸ்ட்ரியும் சுமார்தான். நகைமுரணாக, தோருக்கும் அவரது ஆயுதமான கோடாரி ஸ்டார்ம்பிரேக்கருக்குமான உறவும், தோருக்கும் அவரது பழைய ஆயுதமான சுத்தியல் மிலோனிருக்கும் உறவு அழகாக வந்துள்ளது.

கோர்க், எப்படி க்ரோன் இனக் குழந்தைகள் பிறக்குமெனச் சொல்லும் கதை ரசிக்கவைக்கிறது. படம், ஆங்கொன்றும் இங்கொன்றுமாக ரசிக்க வைத்தாலும், மார்வெலின் முந்தைய படங்களின் தரத்திற்கு ஈடுகொடுக்கவே பெரிதும் சிரமப்படுகிறது. சண்டைக்காட்சிகள் எல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.

லவ் எனும் சிறுமியாக, இந்தியா ரோஸ் ஹெம்ஸ்வோர்த் அறிமுகமாகியுள்ளார். எடெர்னிட்டியில் (முடிவற்ற காலம்) இருந்து உயிர் திரும்பவதால், மார்வெல் யுனிவர்ஸின் க்யூட்டான புது சூப்பர் ஹீரோவாகக் களமிறங்குகிறார். கோரின் மகளாகப் படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும் இந்தியா ரோஸை, தமிழ்ப் படப் பாணியில், தோரின் வசம் ஒப்படைத்து இறந்து விடுகிறார் வில்லன். தோருக்கும், இந்தியா ரோஸ்க்குமான உறவினை இன்னும் கூடுதலாகவே காட்சிப்படுத்தியிருக்கலாம். தோரின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பினை அழகாக ஏற்படுத்தியுள்ளனர்.