பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய், அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும் ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம், திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும் யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி. திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா. இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும், அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அனைவருமே அறிந்த அதன் முடிவுமே இந்த “பார்ட்னர்” திரைப்படம்.
இது போன்ற கண்ணாமூச்சி திரைப்படங்கள் தமிழில் நாம் நிறைய பார்த்தாகிவிட்டது. மேற்சொன்ன வரிகளில் எந்த வரியிலுமே ஒரு உணர்வு பூர்வமான பிணைப்போ, உயிரோட்டமுள்ள கதையோ, குறைந்தபட்ச சுவாரஸ்யமோ எதுவுமே இருக்காது. மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இது போன்ற படங்கள் அதன் ஒற்றை நோக்கத்தை நிறைவேற்றினாலாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். ஆனால் அதையும் நிறைவேற்றாமல் காமெடி என்கின்ற பெயரில் கிமு-விலேயே வழக்கொழிந்த காட்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து அடுக்கி, நம்மை சிரி சிரி என்று சொன்னால் எப்படி சிரிப்பு வரும்.
ஹன்சிகா மோத்வானி, பல்லக் லால்வானி, ஆதி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, பாண்டியராஜன், ரவி மரியா, முனிஷ்காந்த், தங்கதுரை என சீனியர் நடிகர்கள் பலர் இருந்தும் ஒருவருமே சிறப்பாக நடிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் நடிப்பதற்கு வாய்ப்புள்ள காட்சிகளே இல்லை. ஒரு நாள் இரவில் ஆணாக படுத்துறங்கி, காலையில் எழும் போது தான் பெண்ணாக இருப்பதைப் பார்த்தால் எவ்வளவு திகைப்பு வரும். பயம் வரும். ஆனால் படுக்கையறையில் இருந்து பெண்ணாக எழும் ஹன்சிகாவிடம் அது தொடர்பான எந்த உணர்வுமே வெளிப்படவில்லை. படம் காமெடிப் படம் என்று சொல்லிக் கொள்வதால் படுக்கையில் இருந்து எழுந்ததும் அவரும் காமெடி செய்யத் துவங்குகிறார்.
திருடுவதையே தொழிலாகக் கொண்ட கம்பெனி, ஆண் பெண்ணாக மாறுவது என இரண்டு அட்டகாசமான ஐடியாக்கள் கிடைத்தும் அதை மேற்கொண்டு ஒரு சிறந்த கதையாகவோ திரைக்கதையாகவோ எப்படி வளர்த்தெடுப்பது என்பது தெரியாமல் படக்குழுவினர் அப்பட்டமாக முழிப்பது திரைக்கதையில் தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.
மேற்சொன்ன எந்தக் கதையுடனும் நமக்கு எந்தவித பிடிப்பும் ஏற்படாததாலும், கதையும் திரைக்கதையும் கொஞ்சம் கூட நகராமல் லஷ்மன் ஸ்ருதி சிக்னலில் மாட்டிக் கொண்ட வாகனம் போல் நிற்பதாலும் நாம் வெறுப்போடு தேமே என்று வேடிக்கைப் பார்க்கிறோம்.
இயக்குநர் மனோஜ் தாமோதரன் ஒரு சிறந்த ஐடியாவைப் பிடித்துவிட்டாலே அந்த ஐடியாவிற்காகவே படம் ஓடிவிடும் என்கின்ற நம்பிக்கையில் படம் எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரிடம் நிறைய பணம் இருந்திருக்கும் போலும். அவர் படம் எடுத்து அதை செலவு செய்ய துணிந்திருக்கிறார். நடித்த நடிகர் நடிகைகள் வந்த வரை லாபம் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். உங்களிடமும் நிறைய செலவு செய்ய பணமும் நேரமும் இருந்தால் கண்டிப்பாக பார்ட்னரைப் பார்க்கலாம்.
இல்லையென்றால், பார்ட்னர் நமக்கு நிறைய வேலை இருக்கு பார்ட்னர்.
– இன்பராஜா ராஜலிங்கம்