Shadow

ரெபல் விமர்சனம்

மூணாரின் நெற்றிக்குடி எஸ்டேட்டைச் சேர்ந்த கதிர் பாலக்காட்டுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார். கல்லூரியிலுள்ள மலையாளிகள் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். கதிர் கலக்கக்காரராக உருமாறி புரட்சி செய்கிறார்.

படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, நாயகன் கதிர் புரட்சி தான் தீர்வு எனக் கலகம் செய்வது, செங்கொடி ஏந்திய LDP கட்சியின் SFY எனும் மாணவர் சங்கத்தை எதிர்த்தும் போராடுகிறார். வசனங்களில் கம்யூனிஸ்ட் என்றே விளிக்கிறார்கள். நாயகன் எதிர்க்கும் இன்னொரு கொடி, நீல வண்ணத்தில் இருக்கும் UDP கட்சியின் KSQ எனும் மாணவர் சங்கமாகும். காங்கிரஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர். கொடி இங்குப் பிரச்சனையில்லை, அதை யார் பிடித்துள்ளார் என்பதைப் பொறுத்தே சிக்கல் என்கிறார் கல்லூரி விரிவுரையாளர் உதயகுமாராக வரும் கருணாஸ். நாயகன் கதிர் உருவாக்கும் TSP (தமிழ் ஸ்டூடன்ட்ஸ் பார்ட்டி)-இன் கொடி, கருப்பு சிவப்பாலானது.

சாராவாக மமிதா பைஜூ நடித்துள்ளார். பிரேமலுவில் கண்ட ரீனுவை மீண்டும் காணும் ஆசையில் உள்ளவர்கள் ஏமாந்த்தே போவார்கள். முதற்பாதியில் நாயகனுக்கு தேவதையாகத் தெரிபவர், இரண்டாம்பாதியில், SFY-யிண்ட செகரெட்டரி பதவிக்குப் போட்டியிடுகிறார். புரட்சி மோடில் சிவந்து கொண்டிருக்கும் நாயகனே, நாயகியை நோக்காமல் போகிறார். கல்லூரி மத்தியில் ரேகிங்கில் நாயகனின் வேட்டி உருவப்படும் பொழுது, நாயகி எந்த ரியாக்ஷனும் காட்டாமல், “எனக்கு சிங்கர் ஆகணும்னு ஆசை. இளையராஜாக்கு அனுப்ப பாட்டு ரெக்கார்ட் செய்திருக்கேன். உச்சரிப்பு சரியா கேட்டுச் சொல்லுங்க” என்றார். ‘ஐய்யடோ! இது ஜெனிலியாவாக்கும்’ என பரிதாபமாக உள்ளது.

நெற்றிக்குடி எஸ்டேட்டில் வசிக்கும் நாயகனின் தோழன் செல்வராஜாக ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். படத்தின் போக்கையே மாற்றும்.மிக முக்கியமான கதாபாத்திரம் என்றாலும், நாயகனுக்கும் இவருக்குமான நட்பின் ஆழத்தைக் காட்டும் வலுவான காட்சிகள் இல்லாததால் வலுவிழுந்து போகிறது. ஆதித்யாவைக் காட்டினாலே, “நம்ம அப்பாம்மா எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா?” எனச் சொல்பவராகவும், அதைக் கேட்டாலே ஜி.வி.பிரகாஷ்குமார் கடுப்பாகுபவராகவும் சித்தரித்துள்ளனர்.

பாண்டியாகக் கல்லூரி வினோத் நடித்துள்ளார். கொஞ்சம் அரசியல் ஞானத்துடனும், உச்சபட்ச ஹீரோயிசத்துடனும் எழுதப்பட்ட திரைக்கதையில், முதற்பாதியில் பேராசிரியைக் காதலிக்கும் பாத்திரம்தான் வாய்த்திருக்கிறது. ‘தம்ப்ரீ கல்லூரிப்படம் என்றாலே, இதுலாம் தவிர்க்கக்கூடாத விஷயம்’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கனவில் தோன்றி இயக்குநரிடம் சொல்லியிருப்பார் போல! அந்தக் குரல் நின்றதும், ‘படிப்புத்தான்டா முக்கியம்’ என நாயகனுக்குத் துணையாக ஃபுல் டைம் புரட்சிக்கு வினோத்தை அனுப்பிவிடுகிறார் இயக்குநர் நிகேஷ் R.S.

KSQ மாணவர் தலைவர் ஆண்டனியாகப் பிரதான வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ளார் வெங்கிடேஷ்.VP. அட்டகாசமான உடற்மொழியில் மிரட்டியுள்ளார். SFY மாணவர் தலைவர் சார்லியாக ஷாலு ரஹீம் நடித்துள்ளார். பரம வைரியான LDP-உம், UDP-உம், வெல்வதற்கு வாய்ப்பே இல்லாத TSP-இற்காக இணைந்து செயற்படுகிறது ஒரு கட்டத்தில். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்கிறார் நிகேஷ் R.S. 

கொம்பு சீவப்பட்ட ஜல்லிக்கட்டு காளை போல் புரட்சிக்குத் தயாராகிவிட்டிருக்கார் ஜி.வி.பிரகாஷ்குமார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகபாவத்துடன் வலிய வருகிறார். பின்னணி இசையிலும் அந்த டெம்போவை மெயின்டெயின் செய்கிறார். ஆங்காங்கே பின்னணியில் வரும் இளையராஜாவின் பாடல் ஆசுவாசம் அளிக்கிறது. ‘எந்தத் தொந்தரவுமின்றிப் படிக்க விடுங்கள்’ என்ற கோரிக்கையைச் சக மாணவர்களைக் கேட்க வைக்க, கருப்பு, சிகப்பு கொடி அறிவாயுதத்தையே பயன்படுத்தும். கையில் ஆயுதத்தை எடுத்து, A ஹாஸ்டலில் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அடிக்கும் பயங்கரவாதப் போக்கிற்குப் போகாது.

கதை நிகழும் ஆண்டு 1980 ஆகும். அருண் இராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு அமர்க்களமாக உள்ளது. படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன், படம் பார்வையாளர்களிடத்து ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கத்தை மனதில் கொண்டு படச்சட்டகங்களைத் தொகுத்திருக்கலாம்.

ஒரு மாணவனின் மரணத்தை, சக மாணவர்களும், கல்லூரி நிர்வாகமும் இயல்பாய்க் கடந்து போகிறது. அரசியல் கட்சிகள் தலையிட்டுக் காவல்துறையையும் மருத்துவத்துறையையும் கைக்குள் போட்டுக் கொள்கிறது. நாயகன் வெகுண்டெழுகிறார். நண்பனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என வெகுண்டெழும் நாயகன், மெல்ல, ‘எங்களைப் படிக்க விட்டால் போதும்’ என பத்தொன்பது நாளுக்குள் சமாதானமாகிவிடுகிறார். சினிமா புரட்சியில் கூட, நாயகனின் ஓவர் ஹீரோயிசத்தாலும் கூட, பாதிக்கப்பட்டவர்க்கு நீதி கிடைக்காது என்பது பயங்கர அநீதியாகவே உள்ளது. அப்புறம் என்னத்துக்கு இந்தப் புரட்சி?