Shadow

சரீரம் விமர்சனம் | Sareeram review

தமிழ் சினிமாவில் காதலுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்த காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்காக கடவுளின் படைப்பில் கிடைத்த சரீரத்தைத் தியாகம் செய்யும் ஒரு காதல் ஜோடியின் கதையைச் சொல்லும் ஒரு படம் தான் சரீரம். இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கித் தயாரித்துள்ள, உன்னதமான காதலையும், கடவுள் தந்த சரீரத்தின் பெருமையைப் பேசும் இப்படத்தில், புதுமுகங்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும்போதே காதல் வயப்படும் ஜோடியின் காதலுக்கு நாயகியின் பணக்காரக் குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களிடம் இருந்து ஓடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அங்கும் அவர்கள் துரத்த தங்கள் புனிதமான காதலுக்காக நாயகன் பெண்ணாகவும், நாயகி ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாகப் பாலின மாற்றத்தை அடைந்தார்களா, அந்தக் காதல் ஜோடியைச் சமூகம் ஏற்றுக் கொண்டதா, பாலின மாற்றத்தால் அவர்கள் அனுபவித்த பிரச்சினைகள் என்ன என்பதைச் சொல்லும் படமே இந்த சரீரமாகும்.

நடிகர்களைப் பொறுத்தவரை புதுமுகங்கள் தர்ஷன் ப்ரியனும், சார்மி விஜயலக்ஷ்மியும், இளம் காதல் ஜோடியாகப் படம் முழுக்கத் தங்கள் இருப்பைக் காட்டியிருக்கிறார்கள். வெறும் காதல் ஜோடியாக மட்டுமல்லாமல் பாலின மாற்றம் செய்து கொண்டவர்களாக ஓரளவு நல்ல நடிப்பையே தந்துள்ளார்கள். நாயகியின் தந்தையாகப் புதுப்பேட்டை சுரேஷ், பாலின மாற்றம் செய்யும் மருத்துவராக ஷகீலா, ஜெ.மனோஜ், பாய்ஸ் ராஜன், ஜாங்கிரி மதுமிதா, கௌரி, லில்லி, மிலா, இயக்குநர் ஜி.வி.பெருமாள் ஆகியோர் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள்.

வி.டி.பாரதிராஜா இசை ஓரளவுக்கு உதவி புரிந்திருக்கிறது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் ஓகே ரகம். பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது ஆங்காங்கே தெரிகிறது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடவுள் தந்த தனிக்கொடை தான் சரீரம். மனிதர்கள் அந்தச் சரீரத்தின் அருமை புரியாமல் தவறான பழக்க வழக்கங்களால் அந்தச் சரீரத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர். சிலர் தங்கள் சரீரத்தை மாற்றிக் கொள்கிறார்கள். கடவுள் தந்த அந்த சரீரத்தை வேறு பாலினத்துக்கு மாற்றிக் கொள்ளும் உரிமை எவருக்குமில்லை என்ற கருத்தை இளமை துள்ளும் காதல் கதை பின்னணியில் ஆழமாகப் பேசும் ஒரு படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜி.வி.பெருமாள். காதல், பாலின மாற்றம், திருநங்கைகளின் வாழ்வியல் என பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், பலருக்கு இந்தப் படம் பேசியிருக்கும் கருத்துகளில் சில மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், இந்த தனித்துவமான முயற்சிக்காகவே இயக்குநர் மற்றும் குழுவைப் பாராட்டலாம்.

– மாறன் செ