Shadow

சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

சென்னையில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும் சீதாவின் பயணத்தில் இணைந்து கொள்கின்றார் அபிஷேக். வழியில் தாமதமானதால், ஒரு பெரும் விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறார் சீதா. தனது பயணத்தில் சந்தித்தத் தாமத்திற்குக் காரணமான மனிதர்களைப் பார்த்து நன்றி சொல்ல முடிவெடுக்கிறார் சீதா. அவரது நன்றி நவில்தல் பயணம்தான் படத்தின் கதை.

அந்தப் பயணத்தில், கன்று பிறந்ததைக் கொண்டாடுவது, மாடுகளைக் கடத்துவர்களைத் தடுப்பது, பெண் குழந்தையைக் கடத்துபவர்களை அடித்துதைத்துச் சிறைக்கு அனுப்புவது, பிரியும் முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்ப்பது என பார்வையாளர்கள் மனதில் ஒட்டாத சம்பவங்களை எதிர்கொள்கிறாள் நாயகி. பார்வையாளகளைப் பாதிக்காவிட்டாலும், நாயகியின் அகத்தில் பெரிய மாற்றம் நேரிடுகிறது.

சீதா மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். இரண்டு நிமிடத்தில் பேசித் தீர்த்து விடக் கூடிய சின்னஞ்சிறு பிரச்சனைதான் அவருக்கு. ஆனால் அவரது தந்தையான சத்யராஜோ, ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன் புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் எவ்வளவு மனம் சோர்வுறுவார்களோ, அவ்வளவு எமோஷ்னலாகிப் பதற்றப்படுகிறார். ‘ஐயோ பாவம்! எப்படித்தான் இவ்ளோ கஷ்டத்தைச் சமாளிக்கிறாங்களோ?’ என எள்ளி நகையாடக் கூடிய அளவுக்குப் பரிதாபகரமான திரைக்கதையாக உள்ளது.

படத்தில் கெளரவ வேடத்தில் அர்ஜுன் சர்ஜாவும், சிறப்புத் தோற்றத்தில் துருவா சர்ஜாவும் நடித்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு சண்டைக்காட்சி. அபிஷேக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகன் நிரஞ்சனுக்கும் ஒரு சண்டைக்காட்சி என கோட்டா ஒதுக்கியுள்ளனர். இச்சண்டைக்காட்சிகள், அரசியல்வாதிகளின் தொகுதி பங்கீடு போல் ஒரு நேர்த்தியான கணக்குதான் என்றாலும் தனித்துத் துண்டாகத் தெரிவதால் பல்லிளிக்கிறது. சீதாவாக நடித்துள்ள அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு மூன்று பாடல்காட்சிகள் என கணக்கை நேர் செய்துவிடுகின்றனர்.

அர்ஜுனின் வேதம் (2001) படத்துக் கதையைப் போன்றே உள்ளது, பிரிய முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்த்து வைக்க நாயகன் பயன்படுத்தும் யுக்தி. அப்படத்தில், அர்ஜுன் சொல்லும் கதையில் அவருக்கும், சாக்‌ஷிக்கும் இடையேயான காதலை ரசிக்கும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இப்படத்தின் காட்சிகளிலோ, எதார்த்தம் என்பது மருந்துக்கும் இல்லாமல் அலட்டலாகவும், அவசர கதியில் நகரும் மேடை நாடகம் போல் மனதில் ஒட்டாமல் மறைகிறது.

தெலுங்குப் படத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். பெரிய சமஸ்கிருத ஓம் சிலை, ஆஞ்சநேயர் சிலைகள், அயோத்தி ராம் மந்திர்க்கான பெரிய விளம்பரப் பதாகை எனக் கலை இயக்கத்திற்கு மோகன் B, ஷிவா காமேஷ், CH கிருஷ்ணா ஆகியோர் பொறுப்பெடுத்துள்ளனர். நாயகனின் சொந்த ஊரான சீதாபுரத்தில், நாயகனின் தாத்தாவான பிரகாஷ்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக சுமார் 40 – 50 பேர் உள்ளனர். அதில், குழந்தைகள், இளைஞர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால், பிரகாஷ் ராஜ் அந்த ஊரிற்குப் பள்ளியையே அப்பொழுதுதான் கட்டுகிறார். அப்பெரிய குடும்பத்தில் நாயகன் மட்டும் எப்படியோ தட்டுத் தடுமாறிப் படித்துக் கரையேறி விடுகிறார். அந்தப் படித்த நாயகன், வீட்டுக்கு ஒருநாள் விருந்தாளியாக வந்த சமையற்கலை வல்லுநரான நாயகியிடம், அவர்கள் வீட்டிலுள்ள 50 பேர் இருக்கும் சமைத்துத் தரச் சொல்கிறார். கூட்டுக் குடும்பத்தில் யாரேனும் உதவுவார்கள் எனப் பார்த்தால், நாயகன் மட்டும் காய்கறி வெட்ட தனி ஆளாக அனைவருக்கும் சமைக்கிறார் நாயகி. மனோதத்துவம் அறிந்தவராக தி கிரேட் இந்தியன் கிச்சன் வலியையும் அவர் கொஞ்சமாவது உணர்ந்திருக்கலாம்.

தான் உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர்களைச் சந்தித்து நன்றி சொல்லும் ஐடியா பிரமாதமாக இருந்தாலும், அதை அழுத்தமற்றுச் சொன்ன விதத்தால் படம் அதன் இலக்கைச் சரியாகச் சென்றடையவில்லை.